பெரும்பாலும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் மாலை வேளையில் வழியிலுள்ள சேட்டன் கடையில் பாலில்லா தேநீருக்காக தஞ்சமடைவதுண்டு. மழைக்கால மாலை வேளையென்றால், தேநீரிலிருந்து பறக்கும் ஆவி முகத்தில் படர்ந்துணர்த்தும் வெம்மை கூடுதல் உற்சாகம் தான். இந்த உற்சாகத்தில் விளைந்த புனைவுதான், இந்த “மெழுகுவர்த்தியுடன் ஓர் இரவு”…
*மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு*
சுற்றிப் பொருட்கள் இருக்கின்றன என உணரமுடிந்த கும்மிருட்டு. தினந்தோறும் வாசம் செய்யும் வீடுதான் என்றாலும் தட்டுத்தடுமாறிதான் தீப்பெட்டியைத் தேடி உரசி மெழுகுவர்த்தியைத் தேட வேண்டியிருந்தது. நான்கு மணிநேர மின்தடையால் மொபைலின் பேட்டரியும் வலுவிழந்து ஆற்றல் வேண்டி கூவிக்கொண்டிருந்தது.
ஒருவழியாக பலிஆடு மெழுகுவர்த்தி கிடைத்துவிட்டது. மீதமுள்ள இரவை பகலாக்கிக்கொள்ள போதுமானதாக இருந்தது.
மெழுகு சுடர்விட ஆரம்பித்ததும் அங்கிருந்து அதுவரை புலப்படாதிருந்த அனைத்தும் அப்போதுதான் அங்கே வந்ததுபோல் ஒரு பிரக்ஞையை ஏற்படுத்தின.அதுவரை கூராக இருந்திருந்த மற்ற புலன்கள் கொஞ்சம் மலுங்கிக்கொண்டன.
மின்தடைவரும் வரை ஓடியிருந்த குளிரூட்டி அறையிலிருந்த வெப்பத்தை உறிஞ்சி வெளியே துப்பியிருந்ததால் கொஞ்சம் வெம்மை குறைந்திருந்தது.
என்ன செய்யலாம் இந்த தூக்கமில்லா இரவில் என மெழுகுவர்த்தியின் சுடர் காற்றிலைவதைப்போல மனம் அலைந்து கொண்டிருந்தது.
சுடரோடு ஒன்ற ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சுடரின் வெம்மை தாங்காமல் உருகி தப்பிக்கமுயன்று ஊசிக்கோடுகளாக மெழுகுவர்த்தியைச் சுற்றி உறைய ஆரம்பித்திருந்தது மெழுகு. நெளிந்து படபடத்துக் கொண்டிருந்தாலும், அச்சுடர் தேவையான அளவு ஆக்ஸிஜனை காற்றிலிருந்து கிரகித்துக்கொண்டு நிலையாக எரிந்து கொண்டிருப்பதைப் போல தோற்றமளித்தது.
நாமெல்லாம் ஆக்ஸிஜனை உறிஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உறிஞ்சி தன்னை அழித்துக்கொண்டிருந்தது இந்த மெழுகுவர்த்தி. எனக்கு வெளிச்சம் அளிப்பதற்காக.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்து மூச்சிரைத்துக்கொண்டிருந்த செல்வராஜை எதிர்கொண்டேன் .
” ..சார் கரண்ட் நாளைக்கி காலேல தான் வருமாம். இந்தாங்க மெழுவர்த்தி. நான் எப்பவும் ஸ்டாக் வெச்சிருப்பேன் “என்றார். அபார்ட்மெண்டின் காவலர். ஒவ்வொரு வீடாக மூச்சிரைக்கப் படியேறிக் கொண்டிருந்தார், தன்னிடமுள்ள உதிரி மெழுகுவர்த்திகளை கொடுப்பதற்காக.
அறையின் மெழுகுவர்த்தி இன்னும் சந்தோசமாக தன்னை எரித்துக்கொண்டிருந்தது. அறையும் அந்த பிரகாசமான வெளிச்சத்தில் திளைத்திருந்தது.
செல்வராஜ் கொடுத்துச் சென்ற மெழுகுவர்த்தியை உயிரூட்டி அதையும் உயிரிழக்கச் செய்தேன். இப்போது படபடத்த சுடர், ஏனோ தெரியவில்லை, செல்வராஜின் மூச்சிரைப்பை ஞாபகப்படுத்தியது.
திடீரென்று அதிகரித்த காற்றின் வேகத்தில் நிலை குலைந்த சுடர் உயிர்விட்டு மெழுகுவர்த்தியை உயிர்பித்தது. மறுபடியும் ஏனோ தெரியவில்லை, இருளில் இருக்கவே மனம் விரும்பியது.
“…நாங்களெல்லாம் காற்றில் அணைந்து போகும் மெழுகுவர்த்தி அல்ல…காற்றின் துணைகொண்டு பற்றி எரியும் காட்டுத்தீ…” என ஏதோ வெட்டி இயக்கங்களின் குரல் கேட்டது நினைவுக்கு வந்தது.
இயற்கைக்குத் தெரியும் நீதி என்னவென்று. எளியவர்களை அணைத்துக் காப்பாற்றி வலியவர்களைத் தீக்கிரையாக்குகிறது.