வெள்ளியில் கண்டடைந்த தங்கம்

unnamed (1)

அணைந்திருந்த கைப்பேசியின் தொடுதிரையை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டு தட்ட, அப்போதுதான் அணைந்திருந்த  திரை உயிர்பெற்றுக் கொண்டது.

 

அணையும் முன்னர் கூகுள் வழிகாட்டியோடு ஒன்றிப் போயிருந்தேன், சென்னையின் வெள்ளிக் கிழமை முன்னிரவின் சிடுக்கில்(traffic) சிக்கிக் கொண்டு.

 

எறும்பாய் ஊறிக்கொண்டிருந்தது….இல்லை நத்தையாய் நகர்ந்து கொண்டிருந்தது நான் பயணித்துக் கொண்டிருந்த நாலிருளியுந்து (car).

 

மின்தொடர்வண்டியைப் (electric train) பிடித்துவிட முடியுமா என்ற கவலையோடு சற்று தலை தூக்கி ஆடியின் (கண்ணாடி) வழியாக வெளியுலகை  நோக்கினேன். தானியங்கி துடைப்பான் (wiper) அப்போது தான் பெய்ய  ஆரம்பித்திருந்த மழையால் விளைந்த நீர்த்துளிகளை அடித்து சிதறவிட்டிருந்ததில் எல்லாம் அலையலையாய் தெரிந்தது.

 

கிட்டத்தட்ட  எரிபொருள் தீரந்த வண்டி சேமித்திருந்த உந்து விசையால் (inertia) சிறிது தூரம் இயங்கி அடங்குவது போல ஒட்டு மொத்த வாகனங்களும் இயக்கத்தை நிறுத்த ஆரம்பித்திருந்தன.

 

அவ்வப்போது அணைந்து உயிர்பிக்கப்படும் கூகுள் வழிகாட்டியில் மட்டுமே என்னுடைய தற்போதைய இருப்பு தாவிக் கொண்டிருந்தது. நான் நகர்வதையே அதுதான் உணர்த்துகிறது. அச்சிறு மகிழ்ச்சியையும் அதுகாட்டிய இரத்தம் சிந்திய வழிப்பாதைகள் பறித்துக் கொண்டன.

 

என்னுடைய படபடப்பைப் போக்கிக் கொள்ள ஏற்கனவே படபடப்புடனிருந்த வண்டியின் ஓட்டுநரிடம் படபடக்க  ஆரம்பித்தேன்.

 

“ஏன் சார் நீங்க வேற டென்சன் பண்ணிட்டு இருக்கீங்க? இந்த வெள்ளிக்கெழம  சாய்ங்காலம்னால எழவெடுத்தவனுங்க எங்கதா போவானுங்கனே தெரியல” என்றார் ஓட்டுநர்.

 

அந்த  எழவெடுத்தவர்களின் கூட்டத்தில் நானுமொருவன் என்பதால் கொஞ்சம் அமைதியானேன்.

 

இரண்டடி தூரம் நகர்ந்த நீண்ட நேரம் கழித்து, வண்டிக்குள் நிலவிய அமைதியை விரும்பாதவராய் அங்கிருந்த வானொலியை இயக்கி தேவையான பண்பலையை பிடித்தார்.  மிகத் துல்லியமாக ராஜாவின் இசையை ஒலிக்க ஆரம்பித்தது.

 

மடை திறந்து……

மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது

 

ஹேய்….ஹேய்…..

பபப்ப..பாபா..பாபா…..

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது

ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்…”

 

அங்கிருந்த அமைதியற்ற அமைதியான சூழலை அப்படியே திருப்பிப் போட்டது இப்பாடலின் இசையும் வரிகளும். குதுகூலமும் உற்சாகமும் இருவரையும் நிரப்பி வழிந்து வண்டியையும் நிரப்பி ஆடவைத்தது.

 

“என்னோட வாழ்க்கயவே பொரட்டிப் போட்ட சாங்கு சார் இது” என்றார் ஓட்டுநர்.

 

ஒரு முப்பதுகளின் தொடக்கத்திலிருந்த ஒருவரிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள் ஆச்சரியமூட்டின. 80களில் வந்த பாடலிது.

 

“அப்படியென்ன மாற்றம்” என்று வினவினேன்.

 

“அந்த பாட்டுலயே அது இருக்கு பாருங்க சார்..” என்று தொடர்ந்து திறந்த மடை மாதிரி கொட்ட ஆரம்பித்தார். இப்போது அவர் பேசும் தமிழில் மெருகேறியிருந்து. கூடவே சில ஆங்கில வார்த்தைகளும் இணைந்தது.

 

“ பி.இ drop out sir நான். இன்னக்கி வரைக்கும் ஏன் நான் அத select பண்ணேன்னு தெரியாது. பெரிய குடும்ப சுமை இல்லேன்னாலும், எனக்குத் தேவையானதயாவது சம்பாதிக்கனும்னு சென்னைக்கு கிளம்பி வந்துட்டேன். தி.நகர்ல பொம்ம விக்க ஆரம்பிச்சு வருமானம் பத்தாம, அங்கே நண்பர்களாயிருந்த auto driverகளின் உதவியுடன் வாடகைக்கு auto ஓட்ட ஆரம்பிச்சேன்.

 

ஒரு வருஷத்திலயே தீடீர்னு பொறி தட்டி விட்டுப் போன பி.இ degreeய படிச்சு முடிச்சேன். எல்லாம் auto ஓட்டியதால் கிடைத்த பொருளாதார சுதந்திரத்தின் சிந்தனை. கிடைத்த உபரி வருமானத்தை எங்கே முதலீடு செய்யலாம்னு யோசித்ததின் விளைவு இது.

 

கூடவே software testing course படிச்சேன்.” என்று கண் சிமிட்டினான்.

 

அந்த கண் சிமிட்டல் இருக்கையில் சாய்ந்திருந்த என்னை திடுக்கிட்டு முன்னுக்கு கொண்டுவந்ததில்  உயிர்பெற்ற கைபேசியின் தொடுதிரை, நாங்கள் நீண்ட தூரம் தாவியிருந்ததை காட்டியது. மேலும், வழிபாதைகள் இப்போது இரத்த சிவப்பிலிருந்து இளஞ் சிவப்பிற்கு மாறியிருந்தது. இதை உறுதி செய்து கொள்ள சுற்றுமுற்று பார்த்தேன். வாகனங்கள் இப்போது முன்னைவிட வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. ஆனால், மனம் இந்த ஓட்டுநரை விட்டு நகரவில்லை.

 

“அப்புறம் software companyல எதுவும் வேல கிடைச்சுச்சா ?” என்றேன்.

 

“ம்ம்ம்…என்னோட class mate, ஒரு கம்பெனில Test managerஆ தான் இருக்கா. அவ சொல்லிதான் அந்த testing courseஏ படிச்சேன். So, ஒருவழியா அவ கம்பெனிலயே வேலை கிடைச்சிருச்சு”.

 

“அப்புறம் ஏன் இந்த வேலை?” என்றேன்.

 

ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பிறகு அவன் பேசியதெல்லாம் நான் இதுவரை கொஞ்சமும் அறிந்திராதவை.

 

“சார்….இந்த உபரி வருமானமிருக்கே அதுதான் நம்மளோட சாபமும் வரமும். இத எப்படி நம்ம manage பண்ணுறோம்கறதப் பொறுத்துதான் அது வரமா இருக்கறதும் சாபமா இருக்கறதும்.

 

Auto ஓட்டுனப்ப கிடைச்ச வருமானத்துல இன்னோர் auto வாங்கிருந்தேனா முதலாளிய மாறியிருப்பேன். ஆனா, அதவச்சு sotware companyல போய் தொழிலாளியா மாறி 24 மணிநேரமும் வேறெந்த நினைப்புமில்லாம அங்கேயே தேங்கிப் போயிட்டேன்.

 

Week ends மட்டும் மடை திறந்து விட்ட வெள்ளம் போல பரவிப் பாய்ந்துட்டு திரும்பவும் அணைக்குள்ள போய் அடையுறது ரொம்ப கஷ்டமா இருந்தது.

 

அதான் , ராஜா சாரோட இந்த பாட்ட கேட்ட ஒரு நாள் அந்த வேலய விட்டுட்டு இருந்த உபரில இந்த கார வாங்கிட்டு call taxi driver ஆயிட்டேன்.” என்றார்

 

எனக்கு அதொரு ஞானோபதேசம் (gyann) போலத்தான் இருந்தது.

 

“உங்களுக்கெப்படி இந்த உபரி வருமானம்கிற concept(கருத்தாக்கம்) லாம் தெரிஞ்சது?” என்றேன்.

 

“மார்க்ஸ் பத்தி நிறைய படிச்சுருக்கேன் சார். உபரி  உழைப்பு, அது உருவாக்கும் உபரி வருமானமெல்லாம் சிறப்பா நிர்வகிக்கப்படலைன்னா அது மனித குலத்தையே ஒரு முடிவிலாத் துயரத்தில் கொண்டு போய் விட்டுடும்கிறார்.

 

ஒன்னு அன்னன்னிக்கு தேவையானது கிடச்சவுடனே உழைக்கிறத நிப்பாட்டிக்கிற உபரி வருமானத்தைப் பற்றி கவலைப்படாத அன்றாட காய்ச்சியாய் இருக்கனும். இல்ல உபரிகள திறம்பட நிர்வகிக்க தெரிஞ்ச முதலாளியா மாறிடனும். இந்த இருவருமே இந்த பாட்டுல வர்ற மாதிரி புது ராகத்தைப் படைப்பவர்கள். தன் வாழ்வின் போக்கை முடிந்தவரை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள். கிட்டத்தட்ட கடவுள்கள் போலத்தான்.” என்றார்.

 

“இப்ப நீங்க அன்றாட காய்ச்சியா? இல்ல, முதலாளியா ? என்று வினவினேன்.

 

“முதலாளிதான் சார். நிறைய startup களுக்கு fund பண்ணுற ஒரு venture capitalist. ஒரு 50 கார் loan இல்லாம சொந்தமா இருக்கு. எல்லாம் call taxi தான். இதுல வர்ற உபரியத்தான் startups la invest பண்ணுறேன். எவ்வளவு நேரம் கார் ஓட்டனுங்கிறது என்னோட முடிவுதான். முடியலேன்னா mobila switch off பண்ணிடுவேன். எங்கிட்ட வேல பார்க்குறவங்க அவங்க ஓட்டுற taxiக்கு எனக்கு வாடகை கொடுத்துட்டா மட்டும் போதும்.” என்றார்.

 

“அப்ப அந்த venture capitalist businessலாம் யாரு manage பண்ணுறா?” என்றேன்.

 

“no body sir. பத்து investmentla 9 flop தான் ஆகுது. ஆனா ஜெயிக்கிற ஒருத்தர் என்ன கடவுள் ஸ்தானத்துல கொண்டு போய் வச்சுடுறாரு. So, no issues” என்றார்.

 

இவர் சொல்வதெல்லாம் உண்மைதானா என உபரி வருமானத்தை மட்டுமே நோக்கி ஓடும்; அது கிடைத்தால் எப்படி நிர்வகிக்க வேண்டும் என்றறியாத, என்னுடைய நடுத்தர வர்க்க மனநிலை நம்ப மறுத்தது.

 

கூகுள் வழிகாட்டியிலுள்ள பாதைகள் அனைத்தும் இப்போது இளஞ்சிவப்பிலிருந்து இளம் பச்சைக்கு மாறியிருந்தன.

 

“சென்ட்ரல் வந்திருச்சு சார். Bill amount 487.” என்றார். பணத்தைப் பெற்றுக் கொண்டு “have a nice trip and happy diwali sir” என்று விடைபெற்றார்.

 

அப்பாடலின் மறுபாதியை அவர் பாடிக்கொண்டே செல்வதைப் போல ஒரு பிரமை ஏற்பட்டது.

 

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்

வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்

மடைதிறந்து தாவும் நதியலை நான்
மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம் நினைத்தது பலித்தது”

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s