சமீபத்திய விஜய் படங்களை விட மெர்சல் மெர்சலாகத் தான் இருக்கிறது. எடுத்துக் கொண்ட கதைக்களம் அப்படி. அடித்து தூள் கிளப்பியிருக்க வேண்டிய கரு. ஆனால் வெறும் GSTயாக தமிழக BJPயால் மட்டும் சுருக்கப்படவில்லை; நொண்டியடிக்கும் திரைக்கதையும் கூட இதற்கு ஒரு காரணம்.
படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்த வேகமும் கூர்மையும், போகப்போக குறைந்து மலுங்கி கடைசியில் காணாமல் போய்விடுகிறது. சூறாவளியில் சிக்கிக் கொண்ட படகு, தன் கடைசித் துளி ஆற்றல் வரை பெருக்கி கரைசேர்வது போல பரபரப்பானவை அந்த முதல் 30 to 40 நிமிடங்கள்.
ஆள் கடத்தல்களும், பாரிஸில் வேட்டி அணிந்த தமிழனாக விஜய் காட்டும் அடக்கம் மற்றும் பிசி சர்க்கார்த்தனமான மாயஜாலக் காட்சிகளும் மசாலத்தனமாக இருந்தாலும் அட்லியின் காட்சிப்படுத்தும் திறன்களால் நம்மை ஈர்த்து இரசிக்கவைத்து உள்வாங்கிக் கொள்கின்றன.
ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. “Victory is not about winning but sustaining it”.
“வெற்றி என்பது ஜெயிப்பதல்ல; அதை தக்கவைப்பது.”
முதல் 30 நிமிடங்களில் கிடைத்த ஈர்ப்பு, படம் பாரீஸை விட்டு வெளியே வந்த பிறகு நீர்த்துப் போய்விடுகிறது. கடைசிவரை எதைக் கொண்டு துழாவினாலும், அவ்வீர்ப்பு திரும்ப கிடைக்கவில்லை. சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்.
முத்தான காட்சியமைப்புகள் இருந்தும், அவைகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி மாலையாக்கும் மையச் சரடான திரைக்கதை வலுவிழந்து, அந்த முத்துக்களைத் தாங்கமுடியாமல் கீழே நழுவ விட்டிருக்கிறது. அவை சிதறி வீணடிக்கப்பட்டுள்ளன.
ஒரு விஜய் இருக்கும் போதே மற்றவர்களுக்கு திரைக் கதையில் இடமளிப்பது கஷ்டம். இங்கே மூன்று விஜய்.
சமந்தா, காஜல் இருவருமே இப்படத்தில் வழிப்போக்கர்கள் தான். சத்யராஜ், வடிவேலு போன்ற ஆளுமைகள் வீணடிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அழுகக்கூடவா தெரியாது? இல்லை அட்லியிடம் நடிக்கிறார்களா?
தோற்றத்தால் பெரிதும் வித்தியாசப்படுத்தப்படாத மூன்று விஜய்களும் ஒரே கதாபாத்திரமாகவே தெரிகிறார்கள். அட்லிக்கு மட்டும் தான் அவர்கள் மூன்று கதாபாத்திரங்கள். ஆதலால் தான் அவர்களைச் சுற்றியே வரும் திரைக்கதை நமக்கு அயர்ச்சியளித்து படத்தோடு ஒன்ற முடியாமல் விலக்கி வைக்கிறது.
பின்பாதிப் படத்திலிருக்கும் ஒரே ஆறுதல் SJ சூர்யா மட்டுமே. தன்னை மறுவார்ப்பெடுத்துக் கொண்ட கலைஞன். வசன உச்சரிப்பு, உடல்மொழியென நம்மை வசீகரிப்பது இவர் ஒருவர் மட்டுமே. உதாரணம் “Mark my words. இன்னும் 20 வருஷத்துல எல்லாரும் normal deliveryநா பயப்படுவான். சிசேரியன்னா நார்மலா இருப்பான்” என்ற சிரிப்பு. SJ சூர்யா என்ற அந்த மருத்துவரின் அறையைத் தாண்டி திரை வழியாகப் பாய்ந்து நம்மையும் நிரப்பிக் கொள்கிறது, அந்தப் பீதியான சிரிப்பு.