ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன், அவளின் அழகுக்கான காரணத்தை ஆராய முற்படுபவன் விஞ்ஞானி; அவள் ஏன் எனக்கு அழகாகத் தோன்றுகிறாள் என எண்ணுபவன் மெய்ஞ்ஞானி.
ஆனால் அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை இரண்டு பேருமே உதவாக்கரைகள் தான்.
ஆனால், எது உண்மை? விஞ்ஞானி கண்டடைந்ந புறவயக்(objevtive) காரணங்களா?; இல்லை, மெய்ஞ்ஞானி கண்டடைந்த அகவயக்(subjetive) காரணங்களா?.
நாம் அறிவதெல்லாம் நம்மையே என்கின்றன, இங்குள்ள அனைத்து உயர்தத்துவங்களும். நம்முடைய புலன்களைத் தாண்டி நம்மால் எதையும் அறிய முடிவதில்லை. இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே நாம் நம் புலன்கள் வழியாக உருவாக்கிக் கொண்ட கற்பனை அல்லது மாயை (mirage) மட்டுமே என்கின்றன அத்தத்துவங்கள்.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால், தண்ணீரின் குளுமையும், நெருப்பின் சூடும் அவற்றின் குணங்களல்ல. நம் புலன்களால் உருவகிக்கப்பட்டவை.
நாம் அறியும் தோறும் நம் அறியாமையை உணர்வதே ஞானம் என்கிறார்கள். இதைக் கருவாகக் கொண்டு உருவானதே இந்த இருள்.
நான் எங்கும் செல்வதில்லை.
உன்னில் எங்காவது உறைந்திருக்கிறேன்.
ஒளிபாய்ச்சி என்னை உருக்கினாலும்
நானுன்னில் மேலும் பரவுகிறேன்.
தீபவொளியில் நான் அழிவதில்லை.
அழிந்ததுபோல் தோற்றமளித்து மறைந்திருக்கிறேன்.
அறியாமையெனும் இருளாகிய நான்
உன்னுள் எப்போதும் வசிக்கிறேன்.
உன்னறிவொளி கொண்டு என்னுடைய
இந்த இருப்பை உணராதவரை,
நானுன்னை பயமுறுத்தி தேக்கமுறச்
செய்யும் இருள்.
என்னிருப்பை உணர்ந்தால், நானுன்னை
வழிநடத்தி முன்னகரச் செய்யும் ஒளி.
என் அறியாமையில் விளைந்த பதிவு…