மனதை விட்டு அகலாத காலம், இந்த பொற்காலம். இப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் எடை மிகுந்து மனம் கனத்து நகர முடியாமல் ஒரே இடத்தில் நம்மை உறையச் செய்கிறது.
தன் உடலூனத்தால் அண்ணனுக்கு பாரமாயிருக்கிறோமே என்ற மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள ஒரு தனிமை வேண்டி களிமண் பானைகளைச் சுடும் சூளையில் தஞ்சமடைகிறாள் அந்த வாய் பேசமுடியாத தங்கை.
இதையறியாமல், வழக்கம்போல் அச்சூளைக்கு எரியிடுகிறான் அண்ணன் முரளி. சிறிது நேரத்தில் சூளையின் வெம்மையை உணர்ந்து திடுக்கிட்டு வெளியேற நினைக்கும் அவள், கணநேரத்தில் மனம் மாறி அதை தனக்கு கடவுள் காட்டிய வழியாக நினைத்து சூளையின் வெம்மையை உறிந்து சாம்பலாகிப் போகிறாள். அவளும், அவள் அண்ணனும் சேர்ந்து செய்த பானைகள் அதே வெம்மையை உறிந்து உயிர்பெறுகின்றன அச்சூளையில்.
அச்சூளையின் வெம்மையை நமக்கும் கடத்தி நம்மை துடிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சேரன்.
எளியவர்களிடையே உள்ள தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடு தான், அவர்கள் தன்னைக் காப்பாற்ற கூடியவர்கள் இன்னொரு எளியவனாக இருக்க முடியாது என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. இதைத்
தான் கூடவே இருக்கும் வடிவேலு போன்ற எளியவர்களை தான் இது நாள் வரை பொருட்படுத்தாமல் இருப்பதை முரளி உணரும் போது கண்டடைகிறார். மிக நுட்பமான உளவியல் சித்தரிப்பு இக்காட்சி.
இந்தப் புரிதல் உச்சத்தை எட்டுவது அவர் தங்கையின் மரணத்தில் தான். வடிவேலுவின் வழியே தன் தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தவர், தன் தங்கையின் மரணம் வழியே தன் சுயநலத்தையும் உணர்கிறார்.
இப்புரிதலின் வெளிப்பாடாகத் தான் மாற்றுத்திறனாளிப் பெண்ணை மணக்கிறார்.
இது பரிதாபத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல. கற்காலத்திலிருந்த முரளியின் மனம் பொற்காலத்தில் நுழைந்ததின் வெளிப்பாடு தான் இந்த முடிவு.
சேரனின் பொற்காலமும் இந்த பொற்காலம் தான்.
நினைவு கூர்ந்த விகடனுக்கு நன்றி.