எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான ‘பெரியம்மாவின் சொற்கள்’ ஆங்கிலமொழி பெயர்ப்புக்கு Asymptote எனும் சர்வதேச இலக்கிய இதழின் விருது கிடைத்ததையொட்டி அவருக்கு எழுதிய கடிதமிது.
http://www.jeyamohan.in/100665#.Wf2DqctX7R4
மேலுள்ள சுட்டியில் விருது பற்றிய விவரங்கள் உள்ளன.
ஜெமோ,
“பெரியம்மாவின் சொற்கள்”, வாசிப்பு என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்று என்னவெல்லாம் எழுதவைக்கும் என்பதிற்கு உதாரணம்.
என்னுடைய கீழ்கண்ட பதிவில் உள்ள அனைத்தும் உங்களிடம் பெற்றதே, பெரியம்மாவின் சொற்களின் வழியாக அவை தன்னை பிரதி எடுத்துக்கொண்டுள்ளன.
உங்களை வாசிக்கும் போதெல்லாம் இப்படி ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
அன்புடன்
முத்து
சொற்களும் பொருள்களும்
நாய் நன்றியுள்ளது. இதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது?
‘Dog is thankful?’ Or ‘Dog is kind’?
கடவுள் பக்தர்களுக்கு அளிப்பது அருள் என்றால், போலிஸ்காரர் பிடிபட்டு அடிபட்ட திருடனுக்கு தண்ணீர் அளிப்பது இரக்கம்.
‘Policeman is mercy’ என்றால், கடவுள் is?
இந்த சொற்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? பொருள் மட்டும் செயல்களில் இருந்தா?
அல்லது சொற்கள் தான் பொருட்களையும், செயலையும் உருவாக்கியதா?
எது முந்தியது? சொல் அல்லது கருத்தா?. இல்லை பொருளா?
கருத்துதான் முதலில் என்றும் அதிலிருந்துதான் இவ்வுலகம் நம்மால் சிருஸ்டிக்கப்பட்டுள்ளது என்கிறது மதம். இது கருத்துமுதல்வாதக் கொள்கை.
பொருள்தான் முதலில் என்றும் அதிலிருந்துதான் கருத்துக்கள் சிருஸ்டிக்கப்பட்டுள்ளது என்கிறது மார்க்ஸியம். இது பொருள்முதல்வாதக்கொள்கை.
முதல்வகை ஆத்திகம் என்றால், பின்னது நாத்திகம்.
கோழியிலிருந்து முட்டையா? இல்லை முட்டையிலிருந்து கோழியா? என இது கடைசிவரை நேர்கோட்டில் சிந்திக்கும் நம்மால் அறிந்து கொள்ள முடியாததோ?
தொடர்ச்சி….
சொற்கள் எனும் வேரிலிருந்து விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது இப்பிரபஞ்சம் எனும் தோற்றம்.
எந்த விதையைப் பிளந்து கொண்டு இந்த சொற்கள் வேர்முளைத்து மரமாயின. இப்பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் உறைய வைத்திருந்த அந்த விதையின் சமநிலையைக் குலைத்தது யார்? தன்னை விரித்துப் பெருக்கிக் கொள்ளத் தூண்டியது எது?
விதையின் தன்முனைப்பா இல்லை பெருவெடிப்பா இல்லை இறைசக்தியா?
வெள்ளையாய் இருந்ததை கருப்பாக்கிக் கொண்ட தன்முனைப்பும், அதை மீண்டும் வெள்ளையாக்கிக் கொள்ள நினைக்கும் தன் உணர்வும் எங்கிருந்து வருகின்றன? .
தன்முனைப்பு செயலூக்கம். தன் உணர்வு செயலின்மை.
விதையிலிருந்து தன்முனைப்போடு வளர்ந்து பரவி விரிந்து செழித்து மரமாகி; தன் சாரத்தை செறிவான பழமாக்கி, திடீரென தன் உணர்வு கொண்டு தன்னுள்ளே பார்க்கும் போது “நான் தான் நீ” என்று பழத்தின் உள்ளிருக்கும் விதை சிரிக்கிறது.
இதைத்தான் “அகம் பிரம்மாஸ்மி” என்கிறார் இந்து மதத்தைச் சேர்ந்த அத்வைதத்தைத் தோற்றுவித்த ஆதிசங்கரர். இதைத்தான் இஸ்லாமும், கிறிஸ்துவமும், பௌத்தமும் இந்த உலகத்தில் இன்னும் தோன்றாத மதங்களும் சொல்கின்றன.
1. “ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்”…இங்குள்ள அனைத்தும் ஒன்றே
2. “தத்துவமஸி”…நீயும் அந்த ஒன்றே
3.”அகம் பிரம்மாஸ்மி”…முதல் இரண்டையும் நீ உணரும் தருணம்.