நள்ளிரவு கடந்து கொண்டிருந்தது. நிலவொளி மங்கி அந்த மொட்டை மாடியைத் தழுவியிருந்தது. கோடை இரவாக இருந்தாலும் கடற்கரையிலிருந்து வரும் மெல்லிய காற்று இருவரின் வியர்வையையும் அடக்கியிருந்தது.
நடுவே சிறு வட்ட வடிவிலான மேஜை. எதிரெதிராக இரு நாற்காலிகள். மேஜையில் இரண்டு மூன்று தமிழ் நாவல்கள். திஜாவின் மரப்பசு, இபாவின் வேர்ப்பற்று மற்றும் ஜெமோவின் இரவு…அப்போ அந்த நாற்காலியில்…
நீங்கள் ஊகித்தது சரிதான். இரண்டு எழுத்தாள அறிவுஜீவிகள் தான் அங்கே ஒரு சுவாரஸ்யமான விவாதத்தில் இருந்தார்கள்.
ஒருவர் பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர். மற்றொருவர் அவருடைய ஆண் எழுத்தாள நண்பர்.
வழக்கம்போல் எது பெண்ணியம் என்று பெண் எழுத்தாளர் தான் படித்த அனைத்துப் புத்தகங்களின் கடைசி வரி வரைத் திரட்டி நிறுவிக்கொண்டிருந்தார்.
மொட்டைமாடியின் கதவை மெதுவாகத் தான் திறந்து கொண்டு எழுத்தாளரின் மனைவி வந்தாலும், பழைய கதவு “கிரீச்…” என அவர்களின் விவாதத்தை துண்டித்து அணைத்தது.
சட்டென சுயபிரஞ்கை வந்தவர் போல மணிக்கட்டு வழியாக நள்ளிரவு கடந்து விட்டதை உணர்ந்தார், எழுத்தாள நண்பர்.
மனைவி “எக்ஸ்கியூஸ் அஸ்” என்று சொல்லி விட்டு, கணவனை மட்டும் அழைத்துக் கொண்டு கீழே உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து எழுத்தாள நண்பர் மட்டும் மாடிக்கு திரும்பி வந்து கிளம்பலாம் என்றார். நிலவொளி இன்னும் மங்கியிருந்தது.
“என்ன? நேரம் கெட்ட நேரம் என்கிறாரா உங்கள் மனைவி” , என்றார் சற்று அலட்சியத்தோடு.
“இல்லை. உன்னை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வரச்சொன்னாள். உனக்கு அசௌகரியம் இல்லை எனில் என்னையும் உன்னுடனேயே உன் வீட்டில் தங்கி விட்டு காலையில் வா என்றாள்“, என்றார் புன்னகையுடன்.
“மேலும் , நீ எங்களுடன் இவ்விரவு தங்க விரும்பினாலும் அவளுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லை என்றாள்“, என்றார் தோளை உழுக்கிய படி.
எழுத்தாளனின் தோழி என்ன முடிவெடுப்பதென்று அறியாமல், அதாவது தான் எடுத்திருந்த முடிவான என்னை என் வீட்டில் விட்டு விட்டு நீ கிளம்பிடு என்பதை சொல்லமுடியாமல் திணறினாள்.
அப்பெண் எழுத்தாளரின் பெண்ணிய பிம்பம் உடைந்து மாடி முழுவதும் சிதறியிருந்தது. மங்கலான நிலவொளியையும் அச்சிதறல்கள் அணைத்து மாடியை முற்றிலும் இருளாக்கியிருந்தன.
அச்சிதறல்களை, தட்டுத்தடுமாறியபடி, ஒவ்வொன்றாக மனதில் பொறுக்கியவாறு காரில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
வீட்டை அடைந்து, நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு நிதானமாக தன் அறை நோக்கி நடந்தாள்.
மனதில் பொறுக்கிய அச்சிதறல்கள் ஒரு ஒழுங்கமவை அடைந்திருப்பதை உணர்ந்தாள். எவ்வொரு ஒளியும் இல்லாமலே, அவ்வொழுங்கமைவு பிரகாசிப்பதை உள்ளுணர்ந்தாள்.
பெண்ணியம் என்றால் என்ன என்று புலப்படத் தொடங்கியது. தான் கொண்டிருந்த பெண்ணிய பிம்பத்தை உடைத்து மறுவார்ப்பெடுத்த நண்பனின் மனைவிக்கு மானசீகமாய் நன்றி கூறிக்கொண்டாள்.