எழுதுபவர்களுக்கு மேடையில் உரையாற்றுவது வசப்படுவதில்லை என்பதற்கு விதிவிலக்கு எழுத்தாளர் ஜெயமோகன். படிப்படியாக தன் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொணடவர். மிக நீண்ட, அதே சமயத்தில் மிகச் செறிவானவை அவருடைய உரைகள். தன்னுடைய வாசிப்பெனும் கடலில் இருந்து மத்து கொண்டு கடைந்தெடுத்தவை.
இச்செறிவான உரைகளை முழுமையாக உள்வாங்கி செரித்துக் கொள்ள முடியுமென்றால், ஒரு குறுநாவலே எழுதிவிடமுடியும். என்னால் முடிந்தது இச்சிறிய பதிவு மட்டுமே.
சமீபத்தில் அவர் செங்கல்பட்டில் ஆற்றிய உரையிலிருந்து கருக்கொண்டு புனையப்பட்ட பதிவு இது.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் குதிரையின் உடலுடன் விரைந்து வந்து கொண்டிருந்த மனிதர்கள் போல் முகம் கொண்ட ஒன்றைப் பார்த்து ஒரு கணம் திகைத்துப் போனான் எல்லைக் காவலன்.
இதென்ன விசித்திரமான விலங்கு. மனிதனுக்கும் குதிரைக்கும் பிறந்தது போல் என்ற வியப்புடனும், ஒருவகைப் பயத்தோடும் தன் இனத்தலைவனான கோண்டுவை நோக்கி விரைந்தான் கோண்டு. இவ்வினக்குழுவைச் சேர்ந்த அனைவருக்குமே பெயர் கோண்டு தான். அதுதான் அவ்வினத்தின் பெயரும். தனித்தனியாக பெயர் என்ற ஒன்று தேவையற்ற ஆதிப்பழங்குடிகள் அவர்கள்.
கோண்டு சொல்வதைக் கேட்டு வியந்தார் கோண்டு. “…என்னது மனிதத் தலையுடன் குதிரைகளா? உளறுகிறாயா கோண்டு” என்றார்.
“உண்மை தான் கோண்டுத் தலைவரே“ என்று இன்னொரு கோண்டுவும் சேர்ந்து கொண்டான்.
“அப்படி நிறையவற்றை நானும் பார்த்திருக்கிறேன. என்ன ஆச்சர்யமென்றால், அதைப்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது குதிரைத் தலையும் இருக்கும். சில சமயங்களில் அவை இரு வேறு உருவமாகவும் பிரிந்து விடுகின்றன. ஒன்று முழு மனிதனாகவும், இன்னொன்று நம்மிடமுள்ள குதிரை போலவும் உள்ளது.” என்று அந்த கோண்டுவின் கூற்றுக்கு மேலும் வலு சேர்த்தான் இந்த கோண்டு.
தலைவன் கோண்டு கண் மூடி யோசனையில் ஆழ்ந்து விட்டான். திடீரென்று கண்கள் பிரகாசிக்க, முகம் மலர, உதடுகள் புன்னகைக்க , கைகளிரண்டையும் விரித்து “அவர்கள் நம்மை காக்க வந்த தெய்வங்கள்” என்றான்.
குதிரைகளை தன் வசதிக்கேற்ப பழக்கிக் கொள்ள முடியும் என்ற புத்திசாலித்தனமில்லாத சுயநலமற்ற அத்தனை கோண்டுத் தெய்வங்களும் அதை ஆமோதித்து அந்த மனிதக் குதிரைகளை தெய்வங்களாக ஏற்றுக் கொண்டனர்.