கோவில் யானைக்கு சங்கிலியைக் கட்டி அதன் பலத்தை மறக்கடித்து அதன் எல்லைகளை குறுக்குவதைத் போலத்தான் இலக்கணம் படைப்பாளிகளின் படைப்புத் திறனைக் குறுக்கியுள்ளது.
இந்த பாவனையிலிருந்து மீளும்போது மட்டுமே இலக்கியம் படைக்கமுடியும்.
இலக்கணத்தின் படி எழுதப்பட்ட சில பாடல் வரிகள்:
*🖌அடுக்குத்தொடர்:
ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
*🖌இரட்டைக்கிளவி:
ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
*🖌சினைப்பெயர்:
பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
*🖌பொருட்பெயர்:
கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
*🖌இடப்பெயர்:
வீடு வரை உறவு வீதி வரை மனைவி!
*🖌காலப்பெயர்:
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!
*🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
*🖌தொழில் பெயர்:
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!
*🖌இறந்த காலப் பெயரெச்சம்:
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!
*🖌எதிர்காலப் பெயரெச்சம்:
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?
*🖌இடவாகுபெயர்:
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
*🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
*🖌குறிப்புப் பெயரெச்சம்:
அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!
*🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.
*🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!
*🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
*🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
*🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.
*🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
*🖌பெயர்ப் பயனிலை:
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்….
மறக்க முடியாத வரிகள் தான். எளிதில் புரிந்து கொள்ளக் கூடியவையும் கூட. ஆனால், உலகம் இதோடு முடிந்து விடுவதில்லை.
மக்களனைவரையும் முட்டாள்களாக கருதுவதே இலக்கணவாதிகளின் வேலை.
ஆகவேதான் எளிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் நம்மை சிந்திக்கவிடாமல் செய்து விடுகின்றன இலக்கணவாதிகளின் படைப்புகள்.
*எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்* என்ற வரி எந்த இலக்கணத்திற்குள்ளும் அடங்காத ஒன்று.
நாம் யாருடைய பிரதி? இந்த பிரபஞ்சத்தின் பிரதியா இல்லை கடவுளின் பிரதியா என ஒவ்வொருவரின் உள்ளுணர்வு அல்லது நுண்ணுணர்வுக்கேற்ப சாத்தியங்களை விரித்தெடுக்கக் கூடிய சொற்றொடர் இது.
இதுவே நம் சிந்தனையை விரித்து அடுத்த தளத்திற்கு இட்டுச் செல்வது. இது தான் இலக்கியம்.
ஒரு மொழியை புரிந்து கொள்ள இலக்கணம் மிக அவசியமே. ஆனால், அது மூடி மறைத்த சாத்தியங்களை கணடுகொள்வதிற்கு அதிலிருந்து மீண்டே ஆக வேண்டும்.
இலக்கணம் தேங்கிய குட்டை. இலக்கியம் நீரோடை.
இலக்கியத்திற்கு மட்டுமல்ல, எத்துறையிலும் அதன் அடிப்படைகள் தரும் வசதியிலிருந்து மீளும்போது மட்டுமே போலியாகக் கட்டுண்ட யானையின் பலத்தை உணர முடியும்.
கண்ணதாசன் இதை உணர்ந்ததின் விளைவு தான்,
இலக்கணம் மாறுதோ……
இலக்கியம் ஆகுதோ…….
என்ற வரிகளை எழுத வைத்தது.