அமேசானில் முன்பதிவு செய்த டங்கல் தமிழ் டிவிடி அந்தா இந்தா என்று ஒரு மாதம் கழித்து வந்து சேர்ந்தது. பட் இட்ஸ் வொர்த் எ வெயிட்.
பல தலைசிறந்த இயக்குனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது, எதை படத்தின் முதல் காட்சியாக வைப்பது அல்லது முதல் காட்சியை எப்படி எடுப்பது என்பது தான்.
இந்த தலைவலி சிறந்த எழுத்தாளர்களுக்கும் உண்டு. முழுக்கதையையும் எழுதி முடித்து விட்டு, முதல்வரிக்காக முடிவில்லாமல் தவமிருக்கும் அவஸ்தை.
“என் மாமியாரிடம் கேட்டுட்டுத்தான் நம்ம கல்யாணத்தப் பத்தி யோசிக்கணும்…” என்றாள்.
“மனைவியின் பெயர் ஏந்திய பலகையோடு விமான நிலையத்தில் காத்திருந்தான்…”
இது போன்ற முதல் வரிகள் , அவை என்ன மாதிரியான கதைகள் என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தி வாசகனை உள்ளிழுத்துக் கொள்கின்றன.
டங்கலின் முதல் காட்சியும் அது போல் தான். ஆண்டெனாவை காட்டி டிவி க்குள் வ்ரெஸ்ட்லிங்ஐ இழுத்து, மகாவீரின் வழியாக டிவியில் இருந்து வ்ரெஸ்ட்லிங்ஐ வெளியே இழுத்திருக்கிறார் இயக்குனர். அருமையாக நம்மை உள்வாங்கிக் கொள்கிறது இந்த ஆரம்பக் காட்சி.
மகாவீர் ஆணியவாதியா இல்லை பெண்ணியவாதியா? பெண்ணை வெறும் உடம்பாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதுதான் ஆணியவாதம் என்றால் மகாவீர் நான்கும் பெண்ணாக பிறந்ததும் காட்டும் முகபாவனை அதைத்தான் வெளிப்படுத்துகிறது.அவர் தனக்கு தலைமுறை தலைமுறையாக என்ன சொல்லி வளர்க்கப்பட்டதோ அதையே நம்புகிறார்.
ஆனால் திடீரென்று ஒரு நாள் தன் மகள்களின் உடல் வலிமையை (தன்னை கேலி செய்த இரண்டு பசங்களை துவம்சம் செய்திருப்பதைப் பார்த்து) உணர்ந்து தன் ஆணியவாதம் சார்ந்த முன்முடிவுகளை மாற்றிக்கொண்டு தன் பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிக்கிறார்.
அப்போ, மகாவீர் பெண்ணியவாதியா? ஆண்களால் முடிந்தவை எல்லாம் பெண்ணாலும் முடியும் என்பது பெண்ணியம் என்றால், மகாவீர் பெண்ணியவதிதான்.
ஆனால், இந்த ” …வாதியங்கள்” எல்லாம் ஒன்றை ஒற்றைப்படையாக்கி உருவகித்துக் கொள்ளும் ஒரு போதாமையால் விளைந்தவை என்று எண்ணுகிறேன். இதுதான், நம்மை இருபாலினத்தினரை வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல பார்க்கவைக்கிறது. இருபாலினத்தினரே தங்களை அந்நியமாக உணர்வதும் இந்த ஒற்றைப்படைத் தன்மையான உருவகத்தினால் தான்.
இந்த உருவகத்திற்கு முதுகெழும்பாக இருப்பது உடல். ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி என்று அனைத்துமே உடலை அஸ்திவாரமாக்கியே எழுந்துள்ளன. ஆணில் பெண்ணும், பெண்ணில் ஆணும் உண்டு என்ற மனமாகிய பன்முகத்தன்மையை உடல் கொண்டு மறைத்தே இந்த ” …வாதியங்கள்” ஒற்றைப்படையாக எழுந்துள்ளன.
என்னைப் பொறுத்தவரை மகாவீர் எந்த வாதியும் கிடையாது. இந்த ” …வாதியங்கள்” எனும் ஒற்றைப்பனிக்குள் உறைந்திருந்த மனம் என்னும் பன்முகத்தன்மையை கண்டடைந்த ஒரு புத்திசாலி தகப்பன்தான் மகாவீர். உடல் எனும் கடும் உறைபனியை உருக்கி மனம் எனும் தண்ணீரைக் கண்டடையத் தேவையான ஆற்றல் எனும் வெப்பத்தைத் தந்தது, அவர் வ்ரெஸ்ட்லிங் மேல் வைத்திருந்த தீராக்காதலே அன்றி, ஒன்றுக்கும் உதவாத வெட்டி ஆணியமோ, பெண்ணியமோ அல்ல.
அமீர்கான் மகாவீராகவே உருமாறியிருக்கிறார் வ்ரெஸ்ட்லிங் துணைகொண்டு. மகாவீரை நம்மிடம் கடத்துவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அவர் முகம் தாண்டியும் நிறைந்து வழிந்து உடம்பு முழுவதும் வெளிப்படுகின்றன. மகாநடிகன் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தியுள்ளார் அமீர்.
இந்த எல்லாவற்றையும் விட இப்படத்தில் வென்றிருப்பது வ்ரெஸ்ட்லிங் தான். மிக சுவாரஸ்யனான காட்சிகளின் மூலம் வ்ரெஸ்ட்லிங் பற்றிய சிக்கலான விதிமுறைகளை படம் பார்ப்பவர்களுக்குக் கடத்தி அவர்கள் அனைவரையும் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்குள் கிரிக்கெட் க்ளைமாக்ஸ் பார்ப்பதுபோல் இழுத்துக் கொண்டதின் மூலம் இயக்குனர் நிதிஸ் திவாரி தான் ஒரு தேர்ந்த கதை சொல்லி என்பதையும் நிறுவிக்கொண்டார்.
மகாவீரையும் அவர் பெண் கீதாவையும் இருளில் முன்னகர்த்திச் சென்றது, வ்ரெஸ்ட்லிங் மேல் அவர்கள் வைத்திருந்த பற்று எனும் நெருப்பே. மற்றபடி எந்த வெட்டி ” ..இயங்களும்” அல்ல.
[…] […]
LikeLike