நுகர்வு கலாச்சாரம் தனக்கான குழியை தானே தோண்டிக் கொள்ளுமென்றார் கார்ல் மார்க்ஸ். நுகர்தல் பொருட்கள் மேல் அளவில்லாப் பற்றுக் கொள்ளச் செய்து, தான் கடலில் விழ நேர்ந்தாலும் தன் ஐபோனை கரைநோக்கி வீசிவிட்டு விழும் உன்னதமான நுகர்வோர்களை உருவாக்கி வைத்திருக்கிறது.
மாரக்ஸியத்தின் அறிமுகம் அதன் குறைகளை ஆராயும் ஜெயமோகனின் நாவலான பின்தொடரும் நிழலின் குரல் வழியாகத்தான் எனக்கு கிடைத்தது. மார்க்ஸின் காலகட்டத்தில் ஓங்கியிருந்த கருத்து முதல்வாதக் கொள்கைக்கு எதிராக மார்க்ஸ் முன்வைத்த பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவம் தான் மார்க்ஸியம்.
எது முந்தியது? கருத்தா?. இல்லை பொருளா?
கருத்துதான் முதலில் என்றும் அதிலிருந்துதான் இவ்வுலகம் நம்மால் சிருஸ்டிக்கப்பட்டுள்ளது என்கிறது மதம். இது கருத்துமுதல்வாதக் கொள்கை (அகம் or subjective).
பொருள்தான் முதலில் என்றும் அதிலிருந்துதான் கருத்துக்கள் சிருஸ்டிக்கப்பட்டுள்ளது என்கிறது மார்க்ஸியம். இது பொருள்முதல்வாதக்கொள்கை(புறம் or objective)
மிகவும் எளிமைப்படுத்திச் சொல்ல வேண்டுமென்றால் முதல்வகை ஆத்திகம். பின்னது நாத்திகம்.
இது புரியாமல் மார்க்ஸியம் முதன்மைப்படுத்தும் பொருளும் (புறம் or objective), நுகர்வுக் கலாச்சாரம் முதன்மைப்படுத்தும் பொருளும் (thing) ஒன்றென பாமரத்தனமாக எண்ணியதும் உண்டு.
நுகர்வு கலாச்சாரத்திற்கு எதிராக சமீபகாலமாகத்தான் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பெரும்பாலும் எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டும் காரணம் இக்கலாச்சாரம் ஏற்படுத்தும் சூழலியல் மற்றும் இயற்கைச் சார்ந்த அழிவுகளைத்தான்.
மனிதனின் ஒட்டுமொத்த நாகரீக வளர்ச்சியே காடுகளையும் இயற்கையையும் அழித்ததில் இருந்து தான் தொடங்கியிருக்கிறது. அழித்தது போதுமென்றால் வளர்ந்தது போதும் என்கிறார்களா என வெகுண்டெழுந்து மீண்டும் பாமரத்தனமாய் கேட்டபோது தான் யவனிகா ஶ்ரீராமின் இக்கவிதை கிடைத்தது.
வளர்ச்சியா வீக்கமா
ஆசியப் பகுதியில் இருப்பது
தொப்பியை தலையில் சரியாக
வைத்துக் கொள்ள
தாடையிலுள்ள பற்களை அகற்றுவது.
வளர்ச்சி என்ற பெயரில் தனக்குப் பொருந்தாத ஒன்றைச் செய்து தாடையை வீங்க வைப்பதைத் தான் நுகர்வுக் கலாச்சாரம் செய்து வருகிறது.
தொப்பிக்காக பற்களை இழப்பது எப்படி வளர்ச்சியாகும்?