இது சமூக அவலங்களுக்கான சீசன் போலும். அறம், அருவி வரிசையில் வேலைக்காரன். நல்லவேளையாக பேய் சீசன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
அறம், அருவி போல் சொல்ல வந்த அவலங்களை கச்சிதமாக சொல்லாவிட்டாலும், அவலங்களுக்குரிய முக்கிய காரணமான நம்முடைய சொரணமின்மையை சுட்டிக் காட்டி அதற்கான எளிய தீர்வையும் முன்வைத்த விதத்தில் வேலைக்காரன் கவனிக்கப்பட வேண்டிய படமே.
முன்னேறுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போன அல்லது மறுக்கப்பட்ட ஒரு குப்பத்திலிருக்கும் ஒரு படித்த இளைஞனின் சுய முன்னேற்றத்திற்கான பயணம் தான் இந்த வேலைக்காரன். தான் முன்னேறுவதோடு தன் குப்பத்திலுள்ள இளைஞர்களும் கூலிப்படையாக மாறுவதை தடுக்க விரும்பும் ஒரு சமூகப் போராளியாகவும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த whatsup யுகத்தில், தான் கொண்டு வர விரும்பும் மாற்றத்துக்கு சிவா தேர்ந்தெடுப்பது பண்பலை வானொலியை.
சமூக மாற்றமென்றாலே அது முற்போக்கு சிந்தனை தான்.தமிழகத்தைப் பொறுத்தவரை முற்போக்கு சிந்தனையென்றாலே அது கம்யூனிசம் தான் என்ற எண்ணம் உள்ளது. இது இப்படமெங்கும் உணர்த்தப்பட்டுள்ளது, குறியீடுகளாகவும் வசனங்களாகவும். சிவாவின் பண்பலை வானொலியை கம்பி வெட்டி அனல் பறக்க துவங்கி வைக்கும் வெல்டிங் தொழிலாளி; குப்பத்தை காண்பிக்கப்படும் போதெல்லாம் தோன்றும் சர்ச். அதுவும் சிகப்பு நிற சிலுவையோடு என படம் முழுக்க கம்யூனிச நெடி. எங்கே மத நல்லிணக்கத்திற்கு எதிரான படமாகி விடுமோ என்ற அச்சத்தில் அவ்வப்போது புத்திசாலித்தனமாக காண்பிக்கப்படும் மசூதியும் பிள்ளையார் படங்களுமென குறியீடுகளால் நிரம்பியுள்ளது இக்குப்பம்.
அக்குப்பத்தின் சர்ச்சுக்குள்ளிருக்கும் பரமபிதா போல அக்குப்பத்தின் இரட்சகராக (கூலிப்படை தலைவனாக) பிரகாஸ்ராஜ். இவரிடமிருந்து குப்பத்து இளைஞர்களை மீட்டு பெருநிறுவனங்களின் உணவுப் பொருட்களை கூவி விற்கும் நவீன கூலிகளாக மாற்றுகிறார் சிவா. அங்கு அவருக்கு அறிமுகமாகும் பகத்பாஸில் வழியாக வியாபார சூட்சுமங்களை கற்றுக் கொள்கிறார். விற்பதிலிருந்து, பொருட்களை சூப்பர் மார்க்கெட்டில் எவ்வாறு அடுக்குவது என்பது வரை.
ஆனால் அந்நிறுவனத்தில் நடக்கும் சதிகள், உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம், அதனால் ஏற்படும் ஒரு குழந்தையின் உயிரிழப்பு; அதையொட்டி நடக்கும் கொலைகளுக்கு அவர் குப்பத்து பரமபிதாவே கூலிப்படையாக இருப்பது என அனைத்தையும் உணர்ந்து, தான் கொண்டு வர நினைத்தது இந்த மாற்றத்தைத்தானா என விக்கித்துப் போகிறார் சிவா. தன்னுடைய குருவான பகத்தே இதற்கு பின்னாலிருப்பதை கண்டு உடைந்தும் போகிறார்.
நயன்தாரா படத்திலிருக்காரென்பதே அவர் வரும் போது மட்டுமே தோன்றுகிறது. வீணடிக்கப்பட்டிருக்கிறார். சிவாவுக்கும் நயனுக்கும் உள்ள கெமிஸ்டிரியை விட, சிவாவுக்கும் பகத்துக்கும் இடையேயுள்ள கெமிஸ்டிரியை மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
முதல்பாதி முடிவதற்குள்ளே ஒரு பெரிய பட்டாளமே திரையில் வருகிறார்கள். ரோகினி, சார்லி, சதீஷ், சிநேகா etc.etc. என. அனைவரையும் வீணடிக்க கூடாது என்ற கடும் சிரத்தையில் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை பலியிட்டிருக்கிறார் இயக்குநர். ஒவ்வொருவரும் என்ன பண்ணினார்கள் என்பதே இப்போது நினைவுக்கு வர மறுக்கிறது. இரண்டாம் பகுதியில் வலிந்து உருவாக்கப்படும் twistகளால் முதல் பாதியை விட இரண்டு மடங்கு பட்டாளம் சேர்ந்து படத்தை சோர்ந்து விடச் செய்கிறார்கள்.
கிட்டத்தட்ட வழக்கமான கம்யூனிச பிரச்சார படம் போல் முதலாளித்துவத்தின் தலையில் அத்தனை தவறுகளையும் சுமத்தும் வேலையைச் செய்யப்போகிறார்கள் என்று நினைக்கும் போது அங்கே ஒரு வித்தியாசமான தீர்வை சிவா முன்னிறுத்துவதும்; அதை முறியடிக்க பகத் காட்டும் முதலாளித்துவ புத்திசாலித்தனமும் படத்தின் இயக்குநருக்கு சபாஷ் போடவைக்கின்றன.
ஒரு பொருளை விதிகளின் படி தயாரிப்பது முதலாளியின் கடமை மட்டுமல்ல. தொழிலாளிகளின் கடமையும் கூடத்தான். லாபத்திற்காக முதலாளிகள் வலியுறுத்தும் கலப்படத்தை செய்யமாட்டோம் எனக் கூறி வேலை நிறுத்தம் செய்யாமல் கலப்படமற்ற பொருட்களை உற்பத்தி செய்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள் அந்நிறுவனத் தொழிலாளர்கள். கிட்டத்தட்ட ஜப்பானியத் தொழிலாளர்கள் செய்த வலது காலுக்கான செருப்பை மட்டும் உற்பத்தி செய்த உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம் போலத்தான் இதுவும்.
ஆனால் இதைச் செய்யத் தடையாக இருப்பது ஆண்டான் அடிமை காலம் முதற்கொண்டே தொழிலாளிகள் முதலாளிகள் மேல் கொண்ட விசுவாசமே (அல்லது அவர்கள் அளிக்கும் பணத்தின் மேல் உள்ள விசுவாசம்). தொழிலாளர்களின் இவ்விசுவாசத்தை நம் பொருட்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் பக்கம் மடைமாற்றி விட்டதே, அத்தடையை நீக்க சிவா செய்த யுக்தி. அதாவது,அனைத்து தொழிலாளர்களையும் இது முதலாளிக்கெதிரான போராட்டமல்ல;வாடிக்கையாளர்களுக்கு ஆதரவான போராட்டம் என நேர்மறையாக சிந்திக்க வைத்தது.
இதைத்தான் காந்தியப் பொருளாதாரம் “நமது வாடிக்கையாளர்கள் கடவுளுக்குச் சமம்” என்கிறது.
கம்யூனிச நெடி கொண்ட படத்தில் காந்தியத்தை தீர்வாக முன்னிறுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இதை தெரிந்து செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்று தெரியவில்லை. படத்தின் இறுதியில் காட்டப்படும் முஷ்டி மடக்கிய சின்னங்களும் செங்கொடிகளும் கம்யூனிசம் தான் தீர்வென்பதைப் போல் காட்டுகின்றன். குறியீடுகளால் நிரப்பப்பட்ட இப்படத்தில் எங்குமே காந்தியின் உருவமோ படமோ தென்படவில்லை.