“எதுக்கு வேணாலும் தரகர் வச்சுக்கலாம்டா…ஆனா…காதலுக்கு மட்டும் கூடவே கூடாது மாப்ள….” கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு மின்சாரகனவை பார்த்தபோது கிடைத்த ஞானம். ஆனால் சமீபத்தில் மீண்டும் பார்த்தபோது கிடைத்த ஞானமே வேறு. இருக்காதா பின்ன…எலக்கியம்லாம் இப்ப நிறைய படிக்கிறோம்ல..
கடவுளைத் தேடிய பயணத்தில் கஜோல் கண்டடைந்தது தன் காதலை. காதலைத் தேடிய பயணத்தில் அரவிந்த்சாமி கண்டடைந்தது கடவுளை.
ஹெகல் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளையும்; புத்தர், ஆதி சங்கரர் போன்ற கீழை நாட்டு தத்துவ ஞானிகளையும் கேட்டால் கடவுள், காதல் எல்லாம் ஒன்றின் வெவ்வேறு வடிவங்கள் என்பார்கள். ஆனால், இப்பதிவு இதைப்பற்றியதல்ல.
எது முக்கியம்? பயணமா அல்லது பயணிக்கத் தூண்டும் இலக்குகளா? இலக்குகளை அடைந்து திரும்பிப் பார்க்கையில் கிடைக்கும் பயண அனுபவங்களே இலக்குகளை கொண்டாட வைக்கின்றன; தேவைப்பட்டால் இலக்குகளையும் மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள உதவுகின்றன.
வரலாற்று நெடுக இதற்கான உதாரணங்கள் நிறைய உள்ளன, கடந்த வருடம் தமிழகம் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான போராட்டப் பயணம் உட்பட. தனிமனித இலக்குகளுக்கும் இது பொருந்தும்.
இலக்குகள் முக்கியமாக இருந்தாலும், அதற்கான பயணங்கள் மிக முக்கியமானவை.
2018லும் உங்கள் இலக்கை நோக்கிய பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.