ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஸ்கெட்ச் போட்டு விக்ரமையும் தமன்னாவையும் சினிமாத்துறையிலிருந்து தூக்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
விக்ரம் எப்போதும் ஒரு மெனக்கெடல்களின் மனிதர். அவர் பெயரைக் கேட்டவுடன் கண்முன் வரும் அந்த உழைப்பு தான் அவர் படங்களுக்கான ஈர்ப்பு. ஆனால் சென்ற வேகத்திலேயே சுவற்றிலடித்த பந்தாய் நம்மை திரை அரங்கத்தை விட்டு வெளியேற வைக்கின்றன, அவருடைய சமீபத்திய படங்கள். ஸ்கெட்சும் இதற்கு விதிவிலக்கல்ல.
நான் இன்னும் இளமையாய் தான் இருக்கிறேன் என்றுணற்துவதற்காகவே வேறு எந்தவிதமான மெனக்கெடல்களும் இல்லாத இயக்குனர்களிடம் தன்னை ஒப்புவித்து கொள்கிறாரோ இந்த அசாத்தியமான கலைஞன் என்றும் எண்ணத் தோன்றுகிறது. படம் நெடுகிலும் விக்ரமின் ஆடைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வேறெதற்குமில்லை. தமன்னாவின் உடைகளுக்குக் கூட. அந்த அடர் பச்சை நிற கைலியும், அடிக்கடி மாற்றப்படும் கட்டம் போட்ட சட்டைகளும், நம் இருக்கையை விட்டு எழுந்து வெளியே செல்ல வைக்கும் பாடல் காட்சிகளில் வரும் விடுமுறைகால தொல தொல பேண்ட்டுகளும் ஆண்களின் ஃபேஷன் உலகில் சில மாற்றங்களை கொண்டு வரலாம்.
கதைக்கு வரவே முடியவில்லை. பூதக்கண் ணாடி கொண்டு தான் தேடவேண்டும். வழக்கம் போல் வடசென்னை என்றாலே சேட்டு, வட்டிக்கடை,காட்சியில் வரும் அனைவரும் குடித்துக் கொண்டே இருப்பது என அயர்ச்சி அளிக்கும் காட்சியமைப்புகள். கிட்டத்தட்ட டாஸ்மாக் மற்றும் சிகரெட் விளம்பரம் போலத்தான் இருந்தது ஒட்டுமொத்தப் படமும்.
கடனுக்கு தவணை கட்ட தவறுபவர்களின் வண்டியை பறிமுதல் செய்து சேட்டிடம் ஒப்படைக்கும் வேலை விக்ரம்&Co விற்கு. ஒரு தாதாவின் வண்டியைத் தூக்கி சிக்கலில் மாட்டி தன் குடிகார நண்பர்களை ஓவ்வொருவராக இழக்கிறார். கடைசியில் அக்கொலைகளை செய்தவர்களை கண்டு அதிர்ந்து போகிறார். கிட்டத்தட்ட நாமும் தான். அதுவரை பல்லைக் கட்டிக் கொண்டும், முடியவே முடியாத தருணங்களில் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்ததிற்கும் கிடைத்த ஒரு கடுகளவு ஆறுதல்.
குழந்தைத் தொழிலாளர்களை மையப்படுத்தி அசத்தியிருக்க வேண்டிய கதை. இயக்குனரின் அசிரத்தையால் வாலிழந்த பட்டமாய் காற்றில் இலக்கின்றி மிதந்து படம் பார்ப்பவர்களை பொறுமையிழக்கச் செய்து விடுகிறது.
விக்ரம் தன் இளமையையோ நடிப்புத்திறமையையோ நிரூபிக்க வேண்டிய நிலைமையிலில்லை தான். ஆனால் தமிழ் சினிமா அறம் அருவி என படுவேகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது. அவரது ரசிகர்களும் கூடத்தான்.