வாசிப்பு ஏன் இவ்வளவு கஷ்டமாக உள்ளது? காட்சி ஊடகங்களைப் போலில்லாமல் வாசிப்பிற்கு கொஞ்சம் மெனக்கெடல் தேவை என்பதாலா? இல்லை, கொஞ்சம் கற்பனை தேவை என்பதாலா? இவ்விரண்டையும் விட எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று அகப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கடைசி சொட்டு ஆர்வத்தையும் வடிந்து விடச் செய்கின்றனவா?. பெரும்பாலும் சுவாரஸ்யமின்மையே நம்மை வாசிப்பிலிருந்து விலக்கி வைக்கிறது எனலாம்.
இந்த சுவாரஸ்யம் எழுதுபவனால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை. வாசகனின் மெனக்கெடலும் கற்பனையும் அதற்கு மிக அவசியம். ஒரே கதை தான், ஆனால் வாசிப்பவர்களின் அனுபவங்களைப் பொறுத்து அம்பியாகவோ ரெமோவாகவோ அந்நியனாகவோ உருமாறும் சாத்தியங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் எழுத்தையே பெரும்பாலான இலக்கிய விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அப்படியான ஒரு சிறுகதையை எழுத்தாளர் ஜெயமோகனின்(ஜெமோ) தளத்தில் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ‘ஒரு கோப்பை காப்பி’ என. புத்துணர்ச்சி தரும் காபி தான். பருகி சில நாட்கள் கழிந்தும் இப்பதிவை எழுதத் தூண்டும் அளவிற்கு நாவில் இன்னும் அந்தச்சுவை ஒட்டிக்கொண்டிருக்கிறது.
கதை
http://www.jeyamohan.in/104669#.WmSt1YFX7R4
இக்கதையைப் படித்து முடித்தவுடன் மனதில் பெரிதாகச் சலனம் ஒன்றுமில்லை தான். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் கதையின் நாயகன் தன் முதல் மனைவியிடம் தனக்கேற்பட்டிருக்கும் மனச்சிக்கலுக்கான தீர்வு கோரி நிற்கிறான். வாசித்த முதல் சில வரிகளிலேயே யூகித்தது போல் கதையின் களம் அமெரிக்காவில் தான். நாயகன் ஒரு இந்தியன்; நாயகி அமெரிக்கியான அவனுடைய முதல் மனைவி.
ஜெமோவின் பெரும்பாலான கதைகள் உடனடியாக எந்தச் சலனத்தையும் நம்முள் ஏற்படுத்துவதில்லை( என்னைப் பொறுத்தவரை). விழுங்கிய மாத்திரை சற்று நேரத்திற்குப் பிறகு வேலை செய்வது போல் கதையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து ஆச்சரியமூட்டும். அதிலும் மற்ற வாசகர்களுடைய அக்கதை பற்றிய அவதானிப்புகளை அவர்கள் எழுதிய கடிதங்கள் வாயிலாக வாசிக்கும் போது அந்த ஆச்சரியம் பன்மடங்காகும்.
கடிதங்கள்
http://www.jeyamohan.in/105339#.WmVOOYFX7R4
http://www.jeyamohan.in/105351#.WmVPmYFX7R4
http://www.jeyamohan.in/105361#.WmVQH4FX7R4
http://www.jeyamohan.in/105592#.WmVS4YFX7R4 (இதிலுள்ள இரண்டாவது கடிதம் நான் எழுதியது)
ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த நாலு பக்க சிறுகதை விரித்தெடுத்த சாத்தியங்கள் பிரமிப்பூட்டுபவை.