சந்தோஷ் சுப்ரமணியம். கிட்டத்தட்ட நூற்றி xவது தடவையாக தொலைக்காட்சியில். நானும் பார்ப்பது கிட்டத்தட்ட பதிxஆவது தடவை. பத்து வயதான என் பொண்ணும் கடந்த இரண்டாண்டுகளாக எப்போது போட்டாலும் இந்தப் படத்தை கைகொட்டி சிரித்து ரசிக்கிறாள். நானும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் அந்த நேர்த்தியான இறுதிக்காட்சிகளை தவறவிடுவதில்லை. இப்போது தான் நமக்கு கொஞ்சம் எழுத வருகிறதே என்ற உந்துததில் இப்படம் பற்றிய என்னுடைய அவதானிப்புகள் இவை.
மிகவும் சிரத்தையுடன் எடுக்கப்படும் இறுதிக்காட்சிகள் நம்மையும் திரைக்குள் இழுத்து, படம் முடிந்தும் திரையிலிருப்பவர்களை நம்மோடு எடுத்துச் செல்ல வைக்கிறது. இறுதிக்காட்சி என்றவுடனேயே ‘காதலுக்கு மரியாதை’ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட காட்சிகளில் முடிவுகளை விட, அதையடைந்த விதமே நம்மை ஈர்க்கிறது.
பாசத்தை உடல் முழுதும் சேறாய் அப்பிக்கொண்டிருக்கும் தந்தை சுப்ரமணியம் . அச்சேற்றிலிருப்பதே சுகம் என்றிருக்கும் அவரின் குடும்பம். அச்சேற்றிலிருப்பது பாதுகாப்பு மட்டுமே என்பதையுணர்ந்த அவரின் மகன் சந்தோஷ். ஆனால் சுதந்திரமாக பறக்க முடியாமல் அவனுடைய சிறகுகள் அப்பாசச் சேற்றில் தோய்ந்து போயிருக்கின்றன. அம்மகனின் காதலி ஹாசினி, ஒரு சுதந்திர பறவை. இப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இவர்களுக்கிடையேயுள்ள சிக்கலான வேறுபாடுகளை, கூர்மையான வசனங்களையும்; கச்சிதமான காட்சியமைப்புகளையும் கொண்டு மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
ஹாசினியைப் பற்றி தன் குடும்பத்தினர் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பிய சந்தோஷைப் பற்றி ஹாசினியும், அக்குடும்பத்தினரும் நிறைய தெரிந்து கொள்வதுதான் திரைக்கதையின் பலம். வீட்டிலிருக்கும் சந்தோஷைப் பற்றி ஹாசினியும்; வெளியிலிருக்கும் சந்தோஷைப் பற்றி அக்குடும்பத்தாரும் என. தெரியாத சில விஷயங்கள் தெரியவரும் போதுதான் நம் புரிதல்களின் எல்லைகளை மறுவரையரை செய்து கொள்ள முடிகிறது. ஹாசினியை இப்புரிதல், சந்தோஷ் தனக்கு வேண்டாமென்ற ஒரு தெளிவான முடிவை நோக்கி நகர்த்துகிறது. சந்தோஷ்போல் நானும் பாசச் சேற்றில் சிக்கி தன் சுதந்திரச் சிறகுகளை இழக்க நேரிடும் என்று பயந்தே இம்முடிவுக்குச் செல்கிறாள். ஆனால் சந்தோஷ் மேலிருக்கும் காதல் சற்றும் குறையவேயில்லை.
காதலா? சுதந்திரமா? என்றால், சுதந்திரம் இல்லையேல் காதலும் மரித்துப் போகுமென்று சுதந்திரத்தின் பக்கம் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் சாயும் ஹாசினியின் முடிவு, அவளை பெரிய மனுசியாக காட்டுகிறது.
சந்தோஷ் துவண்டு போயிருந்தாலும், சுதந்திரமாக தன் இயல்புத்தன்மையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை ஹாசினியின் முடிவு மூலம் அவன் தந்தைக்குக்கும் குடும்பத்தினருக்கும் உணர்த்துகிறான். “என் கையைப் பற்றிக் கொண்டு என்னுடைய விளையாட்டையும் நீங்களே ஆடினா, என்னப்பா நியாயம் “, “நீங்க சொல்லி கொடுத்த மாதிரியே வாழ்வது சாப்பாட்டை தொண்டை வரைக்கும் மட்டுமே அனுப்புவது போலுள்ளது. அதற்கு மேல் செல்ல மறுக்கிறது” என்ற சந்தோஷின் பரிதாபமான வார்த்தைகள் அவன் தந்தையை மட்டுமல்ல, அவன் குடும்பத்தினரையும், அக்காட்சிக்குள் இழுக்கப்பட்ட நம்மையும் உடைந்து அழச் செய்கிறது.
ஹாசினியைத் தெரிந்து கொள்ள விரும்பிய குடும்பம், தாங்கள் யாரென்று அவள் வழியாகவே புரிந்து கொண்டு, ஹாசினியை மகளாக அரவணைத்துக் கொள்கிறது.
பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஏற்படும் சிதைவுக்கு இணையானது அதீத பொறுப்புள்ள பெற்றோரைக் கொண்ட பிள்ளைகளின் சிதைவு. பறவையின் சிறகுகள் குஞ்சுகளை பாதுகாப்பிற்குத்தானேயன்றி, சிறைப்படுத்துவதற்கல்ல.