உடலில் ஊறிக்கொண்டிருக்கும் சாமி எறும்பின் உணர்வைத் தருபவை இயக்குநர் விக்ரமனின் படங்கள். வன்முறை என்றால் அந்த சாமி எறும்பு கடிக்கும் அளவுக்குத்தான் இருக்கும். பெரும்பாலும் நல்லுணர்வுகளான பாசம் ,மரியாதை, பொறுப்புணர்வு, பொறாமை கொள்ளாமை என அனைத்தையும் கலவையாக்கி சிமெண்ட் போல நம்மேல் பூசியனுப்புவார். 90களின் இளைஞர்களிடம் நேர்மறை எண்ணங்களை விதைத்து அவர்களின் ஆளுமையை செதுக்கிய அக்கறையுள்ள இயக்குநர். இப்படிப்பட்ட படங்களின் தேவைகள் இப்போது குறைந்து விட்டனவா என்ன? இப்போதுள்ள பெரும்பாலான படங்கள் “நீ பச்சை தமிளேண்டா ஷேர் பண்ணு” என்ற உணர்வோடே நின்று விடுகின்றன.
எதிரிகளுக்கு வன்மத்தை அளிப்பதைவிட, அவர்களை குற்றஉணர்வுக்குள் தள்ளி அவர்களை மனரீதியாக வென்றெடுக்கும் வழியை விக்ரமன் தன்னுடைய நிறைய படங்களில் நிறைய காட்சிப்படுத்தியிருப்பார். அவரின் ‘சூரியவம்சத்தை’ சமீபத்தில் மீ்ண்டும் பார்க்க நேர்ந்தது.
தன் கணவனை உதாசினப்படுத்திச் சென்ற அவரின் முன்னால் காதலிக்கு பொருளாதார ரீதியான உதவியைச் செய்கிறார் அவரின் இந்நாள் காதல் மனைவி. பாவ மன்னிப்பு கேட்க வந்த தெய்வத்தின் முன் கூசி நிற்பது போல் அந்த முன்னால் காதலி கூசி நிற்கிறாள். அந்த குற்றஉணர்வு அவளைக் கொல்வதற்கு முன், அதிலிருந்து அவளை மீட்டெடுக்க அவள் செய்த ஒவ்வொரு தவறுகளையும் சுட்டிக்காட்டி அதை மறப்பதற்கு நானொன்றும் தெய்வமல்ல என்பதை அவளுக்கு உணர்த்துகிறார் இந்நாள் மனைவி.
தெய்வங்கள் முன் நாம் கூசி நிற்பதற்குக் காரணம், நம் பாவங்களைனைத்தும் அவர்களால் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுவதால்தான். ஒரு புனித வெள்ளியில், தச்சனின் மகனாகிய ஏசு தன் பசுங்குருதி பீய்ச்ச மரச் சிலுவையில் அறையபட்ட போது, அக்குருதியிலிருந்து எழுந்த மலர்போன்ற வாசனையே அவர் யாரென்பதை அங்கிருந்த மூடர்களுக்கு உணர்த்தியிருக்கும். அக்குற்றஉணர்விலிருந்து மீளமுடியாமல் வாழ்நாள் முழுவதும் அவன் அறையப்பட்ட சிலுவையை மனதில் சுமந்து அலைந்து திரிந்தார்கள். இந்த குற்றஉணர்விலிருந்தும் அவர்கள் மீளவேண்டும் என்பதே ஏசுவின் பிரார்த்தனையாக இருந்தது. அதன் பொருட்டே அந்த சாம்பல் ஞாயிறன்று உயிர்த்தெழுந்தார்.
ஆனால் பாவங்கள் நம்மோடிருக்கும் வரை நாம் மீளமுடிவதில்லை. மீண்டதுபோல் ஒரு பாவனை செய்து கொள்கிறோம். அப்பாவனையின் விளைவுதான் இங்குள்ள அனைத்து தெய்வங்களும்.
மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவ மனுஷ…ஆனா மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷ…
நம்புங்கள், இந்த விருமாண்டி போன்ற பெரிய மனிதர்கள் தான் இங்கு தெய்வங்களாக்கப் படுகிறார்கள்.
Good Friday and Easter Sunday wishes!!!