காலம் கடந்தும் நம்மால் ரசிக்கப்படும் படைப்புக்களையே செவ்வியல் (Classic) படைப்பென்கிறார்கள். கலைஞரின் உதிரத்திலிருந்து சிந்திய எழுத்துக்களைப் பருகி தன் உடல்மொழி வழியாக நமக்குக் கடத்திய சிவாஜியின் பராசக்தியை இப்போதும் அதே பரவசத்துடன் பார்க்க முடிகிறது. மானுடத்தின் என்றுமிருக்கும் சிக்கல்களைப் பேசும் அனைத்து படைப்புகளும், காலப்போக்கில் செவ்வியல் படைப்புகளாக உருமாறுகின்றன. பெரும்பாலான ரஷ்ய இலக்கியங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. ‘நிலவறைக் குறிப்புகள்’ என்ற அப்படியொரு வகையான நாவலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. 1800களில் வாழ்ந்த பிரசித்திபெற்ற நாவலாசிரியரான பியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதியது. அவரின் தமிழ்க்குரல் என்று அனைவராலும் பாராட்டப்படும் எம்.ஏ.சுசீலா அவர்களால் இந்நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு நாவலின் பாதிப்பகுதியைக் கடந்திருக்கிறது தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’. அந்த ஒரு கதாபாத்திரத்தை, நீ யார்? உன் பெயர் என்ன? என்று கேட்பதற்குக் கூட யாருமில்லாமல் கதைசொல்லியான நானொருவனே போதுமென்ற இறுமாப்புடன் படைக்கப்பட்டிருக்கிறது இக்குறுநாவலின் முதல் பகுதி. படைப்பூக்கத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு படைப்பாளியின், அன்றாடங்களைப் பற்றிய நுண்ணிய அவதானிப்பாகத்தான் இந்நாவலை நான் கருதுகிறேன்.
ஆரம்பித்து முற்றுப் பெறாமலேயே சென்று கொண்டிருக்கும் கதைசொல்லியின் சொல்லாடல்களில் நம்மை அறியாமலே நாமும் ஒரு கதாபாத்திரமாக மாறுவது தான் இந்நாவலாசிரியனின் வெற்றி. ஒரு வாசகனாக நாமும் இங்கே வெற்றியடைகிறோம். தஸ்தயேவ்ஸ்கி சித்தரிக்கும் அன்றாட மனிதர்களின் உளச்சிக்கல்களை எந்த விதச் சிக்கலுமில்லா மொழி நடையில் தெளிந்த நீரோடை போல நமக்கு கடத்தியிருக்கிறார் எம். ஏ. சுசீலா அவர்கள். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்கள், மூலநாவலைப் பற்றிய மொழிபெயர்ப்பாளரின் அவதானிப்பாகவோ அல்லது விமர்சனமாகவோ தொனிக்கும் வாய்ப்பு அதிகம். இதை மிக கவனமாக எம்.ஏ.சுசீலா அவர்கள் தவிர்த்திருக்கிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. மூலநாவலில் தஸ்தயேவ்ஸ்கி மறைந்திருப்பதுபோல, மொழிபெயர்ப்பில் சுசீலா அவர்களும் மறைந்தே இருக்கிறார்.
ஒரு நுண்ணணர்வு கொண்ட மனிதன் அன்றாட மனிதர்களின் உணர்வுகளோடு தன்னை எப்படி பொருத்திப் பார்த்துக் கொள்கிறான் என்பதாகவே இந்நாவலின் முதல்பகுதி முழுதும் நகர்கிறது. தன்னை அதிபுத்திசாலியாகவும், சுயமரியாதையோ அல்லது சுயவெறுப்போ இல்லாத சமநிலையில் இருப்பவனாகவும், அதுவே தன்னை செயலின்மைக்கு கொண்டு செல்வதாகவும் கருதிக் கொள்கிறான். ஆனால் அதே சமயத்தில் நான் சோம்பித் திரிபவனும் இல்லை என்கிறான். செயலூக்கத்தின் உச்சமாகிய செயலின்மையா அது?
“இங்கு இயல்பானவர்களெல்லாம் இயற்கைக்கு பிறந்தவர்கள் போலும். என்னைப் போன்ற நுண்ணுணர்வுள்ளவர்கள் சோதனைக் குழாய்க்குத்தான் பிறந்தவர்கள் போலும்” என்ற கதைசொல்லியின் சொல்லாடல் நம்மை உயர்த்துவது போலிருந்தாலும் அதைத் தொடரும் “புத்திசாலிகள் எல்லாம் மந்த புத்திக்காரர்கள்” என்ற சொல்லாடல் அன்றாடங்களை நுண்பகடி செய்கிறது.
இது தான் என்று அறுதியிட்டு கூறிவிடமுடியாததே மனித மனம். அப்படி அறுதியிட்டு கூறிய மறுகணமே அதைப் பொய்யாக்குவதற்கான முயற்சியில் இறங்கிவிடும் வினோத குணம் கொண்டது மனித மனம். இந்த வினோத குணம்தான் மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது போலும். விஞ்ஞானம், பகுத்தறிவு முதலியன சொல்பவற்றை புரிந்து கொள்ளும் அறிவைப் பெற்றுவிட்டாலும், அதை ஒத்துக் கொள்ளும் பக்குவமோ அறிவோ இல்லாத ஆதிமனநிலையிலேயே நாம் இன்னும் இருக்கிறோம் என்கிறது நாவல். நுண்ணர்வு கொண்டவர்கள் தன்னிலுள்ள இப்பக்குவமற்ற மனநிலையை வெளியிலிருந்து காணும் சாட்சியாக இருக்கிறார்கள். இந்த மீறல்களைக் கண்டு ஆச்சரியமோ அச்சமோ கொள்ளாமல் கடந்து முழுமையை நோக்கி பயணிக்கிறார்கள். இது தான் இந்நாவலின் முதல்பகுதி வழியாக எனக்கு கிடைத்த தரிசனம். இதை எனக்கு சாத்தியப்படுத்திய சுசீலா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.