அன்றாடங்களில் சிக்கிக் கொள்ளாத ரஷ்ய இலக்கிய ஆளுமையான தஸ்தயெவ்ஸ்கியை மிகவும் பிரபலபடுத்தியுள்ளது அவரின் தமிழ்குரலான எம்.ஏ. சுசீலா அவர்களை கௌரவிக்கும் பொருட்டு விக்ஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் (எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர் குழு) சென்னை ரக்ஷ்ய கலசார மையமும் இணைந்து நடத்திய விழா. விழாவை தலைமை தாங்கியவர்களில் ஒருவரான திரு. மிஹாயில் கோர்பட்டேவ் ஆச்சரியபட்டதைப்போல, ரஷ்யர்களுக்கே சிக்கலான தஸ்தயெவ்ஸ்கி எனும் புதிரை, தன் மொழி ஆளுமையாலும், கடின உழைப்பாலும் அவிழ்த்திருக்கும் எம்.ஏ.சுசீலா அவர்களைக் கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.
விடுதி
முதன் முதலாக ஜெமோவை (ஜெயமோகன்) நேரில் சந்தித்தது கடந்த ஆண்டு அவரின் விக்ஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய ‘குமரகுருபன் நினைவு கவிதை விருது’ விழாவில்தான். அப்போதிருந்த படபடப்பில் நாவெல்லாம் வறண்டு உதடுகள் ஒட்டி சொற்கள் சிறைப்பட்டிருந்தன. அவர் வாஞ்சையாக கைகுலுக்கிய பின்னரே என்னால் பேச முடிந்தது. அந்த படபடப்பெல்லாம் இந்நிகழ்வின்போது கொஞ்சம் குறைந்திருந்தது. இடைப்பட்ட இந்த ஓராண்டு காலத்தில் அவரை இருமுறை சந்திக்க கிடைத்த வாய்ப்பும், என் தொடர் எழுத்துக்களின் மூலம் கிடைத்த அணுக்கமும் இதற்கு காரணமாயிருக்கலாம்.
வழக்கம்போல் காளிபிரசாத்தின் மூலம் ஜெமோ தங்கியிருக்கும் இடத்தை அறிந்துகொண்டு கிளம்பினேன், இந்தமுறை விழாவிற்கு முன்னே அவரைச் சந்திக்கலாமென்று. சென்னையிலிருந்து வெளியே இருப்பவர்களிடமிருந்தே சென்னையின் இன்னொரு முகத்தை அறிந்து கொள்ள முடிகிறது. தி.நகர் ஹபிபுல்லா சாலையின் குறுக்குத் தெருவிலுள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் home stay hotelகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. கூகுல் வழிகாட்டி நிறுத்திய இடத்தில் இருந்தது அடுக்குமாடி குடியிருப்பா இல்லை விடுதியா என்று குழம்பிய போது சுரேஸ் பிரதீப் எதிரே வந்து கூகுல் சரியென்று உறுதிசெய்தார் (இவ்வுலகைப் பற்றி கூகுல் அறியாதது ஒன்றுமேயில்லை). ஜெமோவால் கண்டெடுக்கப்பட்ட வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் இவர். ‘ஒளிற் நிழல்’ என்ற தலைப்பில் தன் நாவல் கணக்கை துவக்கியிருப்பவர். அவருடனான ஒரு சிறு அறிமுகத்திற்கு பிறகு ஜெமோவின் அறைக்கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். திருவிழா கலைஞர்களின் ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்ததைப் போன்றொரு உணர்வு.
அது ஒரு நீண்ட செவ்வக அறை. சீரான இடைவெளியில் போடப்பட்டிருந்த மூன்று மெத்தைக் கட்டில்கள். போரிட்ட களைப்பில் அயர்ந்து தூங்கிடும் வீரர்களைப்போல உண்ட மயக்கத்திலும் பயணக் களைப்பிலும் மெத்தையின்மேல் வீழ்ந்திருந்த ஒரு சிலரைத் தவிர அங்கிருந்த அனைவரின் கண்களும் சிந்தையும் ஜெமோவின் மேல் தான் குவிந்திருந்தது. முதலிரண்டு கட்டில்களுக்கு நடுவே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ பற்றி பேசிக்கொண்டிருந்தார். செவ்வியல் நாவல் என்றால் என்ன? ஒரு கதையோட்டத்தை எதிர்பார்த்து ஏன் செவ்வியல் நாவலை அணுகக்கூடாது? என விரிந்த அந்த உரை மாலை விழாவின் சாராம்சத்தை உணர்த்தியது.
மணி நான்கை தொட்டுக்கொண்டிருந்தது. அதுவரை உறக்கத்திலிருந்த சிறில் அலெக்ஸும், ராஜகோபாலும் திடீரென புத்துயிர்ப்பு பெற்று ஜெமோவை வற்புறுத்தி உறங்க வைத்தனர். இருவரும் தாங்கள் பேசவேண்டிய உரையை மனதுக்குள் ஓட்டியவாறே விழாவின் கடைசிக்கட்ட ஏற்பாடுகளை முடுக்க ஆரம்பித்தனர். அதற்கு முன்னரிருந்தே காளி பரபரப்பாக இயங்க ஆரம்பித்திருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது. உறக்கத்திலிருந்த அனைவரும் ஒவ்வொருவராய் உயிர்த்தெழுந்து ஒப்பனை அறைகள் நோக்கி விரைந்தனர். விழாக்கோலம் பூண்டது அவ்வறை.
சிறிலும் சில நண்பர்களும் விழாவை தலைமையேற்று நடத்தும் இருவரில் ஒருவரான இ.பா.வை (இந்திரா பார்த்தசாரதி) அழைத்து வரச்செல்ல, ராகவும் நானும் விழாவின் நாயகியான எம்.ஏ.சுசீலா அவர்கள் தங்கியிருந்த ஆயக்கர் பவன் நோக்கி விரைந்தோம். மணி 4.30ஐத் தாண்டியிருந்தது.
ஆயக்கர் பவன்
இதற்கு முன்னால் அவர்களை நேரில் சந்தித்ததில்லை. நல்லவேளையாக அன்று தான் ஜெமோவின் தளத்தில் ‘நிலவறைக் குறிப்புகள்’ பற்றிய என்னுடைய அவதானிப்புகள் வெளியாயிருந்ததால் அது என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள போதுமாய் இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கும்போதே ராகவின் கார் ஆயக்கர் பவனில் நுழைந்திருந்தது.
சென்னையின் மிகமுக்கியமான அடையாளம் ஆயக்கர் பவன். இந்தியாவிற்கும்கூட. இங்குள்ள வருமானவரி அலுவலகத்தால் வாரநாட்களில் கவலைதோய்ந்த முகங்களும் தளர்ந்த உடல்களுமாக நிரம்பி வழியும் வளாகம் அன்று விடுமுறையால் இளைப்பாறிக் கொண்டிருந்தது. மிகவும் ரம்மியமாக இருந்தது. அங்கிருந்த விருந்தினர் விடுதியின் முன் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ஏற்கனவே சுசீலா அவர்கள் காத்துக்கொண்டிருந்தார். உதட்டில் பூத்திருந்த புன்னகையால் அவரின் முகம் முழுதும் மலர்ந்திருந்தது.பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின் துவங்கிய கடும் உழைப்பைக்கோரும் அவருடைய இரண்டாவது இன்னிங்ஸிக்கு கிடைத்த அங்கீகாரத்தின் பூரிப்பது. ராகவை அடையாளம் கண்டு காரில் ஏறிக்கொண்டார். அவரின் உற்சாகமும் ஆற்றலும் எங்களைப் பற்றிக்கொள்ள விழா நிகழும் ரஷ்ய கலாச்சார மையம் நோக்கி விரைந்தோம்.
தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவல் தான் மொழிபெயர்ப்பதற்கு மிக அதிக நாட்கள்(கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்) எடுத்து கொண்டதாக கூறினார். அந்நாவல் சித்தரிக்கும் இருண்மைகளே அதற்குக் காரணம் என்றார். ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு இக்குறுநாவல் தன் முக்கால்வாசிப் பகுதியை கடந்திருக்கும்.
ஜெமோ அடிக்கடி கூறுவதைப் போல நம்முடைய இலக்குகள் நாம் எட்டுவதைவிட பெரியதாக இருக்கும்போது நம்மில் இயல்பாக செயலூக்கம் குடிகொள்கிறது. இத்தனை அசாத்தியமான மொழிபெயர்ப்புகளுக்குப் பின்பும், கையிலெடுத்துக் கொள்ளப்போகும் தன் சொந்த நாவல்களைப் பற்றி பேசினார். செயலூக்கம் கொள்பவர்கள் ஒவ்வொரு நாளும் புதிதாய்தான் பிறக்கிறார்கள்.
ரஷ்ய கலாச்சார மையம்
மணி ஐந்தை தொட்டிருந்நது நாங்கள் கஸ்தூரி ரங்கன் சாலையில் நுழைந்தபோது. சென்னையின் மிக முக்கியமான அடையாளமான போயஸ் தோட்டத்தை உள்ளடக்கிய பகுதி. பாரம்பரிய செல்வச் சீமான் சீமாட்டிகளின் வசிப்பிடம். அங்குள்ள தரமான சாலைகளில் வழுக்கிச் செல்லும் கார் வகைகளும், வழுக்கி விழுந்து கொண்டே இருக்கும் அச்சாலையின் நடைபாதையில் நடக்கும் பெண்களின் ஆடை வகைகளும் அப்பகுதி கலாசாரங்களை தாண்டிய அல்லது மீறிய Globizen (உலகக் குடிமகன்?) களுக்கானது என்பதை உணர்த்தியது.
அச்சாலையின் ஒருமுனையில்தான் ரஷ்ய கலாச்சார மையம் எந்த ஆராவாரமும் இன்றி எழிலாக வீற்றிருந்தது. மையத்தின் காவலாளி சில வழக்கமான சோதனைகளுக்குப் பிறகு எந்தவித பதற்றமுமின்றி எங்கள் காரை உள்ளே அனுமதித்தார். அம்மையத்தின் கடைநிலை ஊழியர்வரை அன்றைய நிகழ்வு பற்றிய விபரங்கள் பகிரப்பட்டிருக்கின்றன.இதைத்தான் தொழில்முறை நேர்த்தி (Professionalism) என்கிறார்களோ? இவர்களோடு “செய்வன திருந்தச் செய்” எனும் மனப்பாங்கு கொண்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கைகோர்த்திருப்பது இவ்விழாவை மேலும் சிறப்பிக்கும் என்றே தோன்றியது.
அரங்கத்தின் வரவேற்பறையில் சௌந்தர் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். அங்கிருந்ந சிலர் சுசீலா அவர்களை சூழ்ந்து கொண்டார்கள். அவர் கால்தொட்டு ஆசிபெற விரும்பிய ஒரு வாசகியை, விழுவதற்கு முன்பே தோள்தொட்டு எழுப்பி அவர் கட்டியணைத்தது ஒரு நெகிழ்வான தருணம்.
சிறிது நேரத்திலேயே ஜெமோவும் துள்ளலாக மையத்தினுள் நுழைந்தார். முகம் முழுதும் பெருமிதம். சுசீலா அவர்களின் செயலூக்கத்தை முடுக்கி விட்டவர் என்பதாலா? கூடவே கொஞ்சம் பதட்டமும் தெரிந்தது. அங்கு காத்திருந்த அனைவரும் ஒவ்வொருவராய் தயங்கித் தயங்கி அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். தன் வீட்டிலுள்ள ஒருவரைப்போல நலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஜெமோவை முதன் முதலாக பார்ப்பவர்கள் அவரை மிக அணுக்கமாக உணர்வார்கள். அவரைப்பற்றிய அனைத்து பிம்பங்களும் உடைந்து விடுவதே இந்த அணுக்கத்திற்கு காரணம்.
மணி ஐந்தை தொட்டு பதினைந்து நிமிடங்களாயிருந்து. இருவரால் கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டாலும்,மிடுக்கோடும், எப்போதுமிருக்கும் குறும்பான முகத்தோடும் இ.பா. மையத்திலுள்ள விழா அரங்கு நோக்கி சென்று கொண்டிருந்தார். 88 வயது இவருக்கு. தமிழ் உலகின் மூத்த இலக்கிய மேதை. வணிக எழுத்துக்களைத் தாண்டியிராத காலங்களில், கல்கியில் வெளிவந்த ‘வாழத்தூண்டும் மரணம் ‘ எனும் இவர் எழுதிய தொடரின் வழியாக இவ்விலக்கிய மேதையின் மேல் ஈர்ப்பு கொண்டு அவர் நாவலான ‘வேர்ப்பற்று’ பற்றிக் கொண்டு இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன். இவ்வாசிப்பு ‘குருதிப்புனல்’, ‘ஏயேசுவின் தோழர்கள்’, ‘வெந்து தணிந்த காடுகள்’ என கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இவருடைய அனைத்து நாவல்கள் வழியாக நீண்டது. இதைத் தொடர்ந்து நான் வந்து சேர்ந்த இடம் தான் ஜெமோவின் ‘இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’. இ.பா. வின் அந்த குறும்புப் புன்னகை என் நினைவடுக்குகளின் வழியே பயணம் செய்ய ஆரம்பித்தது.
விழா
நினைவு தட்டி மணிக்கட்டை நோக்கியபோது ஐந்தரையை தொட இன்னும் ஐந்து நிமிடங்கள் பாக்கியிருந்தது. அரங்கம் முக்கால்வாசி நிரம்பியிருந்தது. நேரடி நிகழ்வுகளுக்கென வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான அரங்கு. தலைக்குமேல் மிக உயரத்திலிருந்த கூரையும், இரு பக்கமும் விரிந்திருந்த கிட்டத்தட்ட 500 அல்லது 600 அடர் சிவப்பு மெத்தை இருக்கைகளும் அரங்கின் பிரமாண்டத்தை உணர்த்தின. ஆனால் விழாமேடையில் அமரப்போகிறவர்களுக்கு மட்டும் சாதாரண இருக்கையே போடப்பட்டிருந்தது. அரங்கின் பிரமாண்டம் இருக்கைகளில் அமர்ந்தவுடனே மறைந்து நான் மட்டுமே அங்கிருப்பதைப் போன்றொரு உணர்வைத் தந்தது. அரங்கின் வலப்புறமிருந்த மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டு திரும்பிப்பார்க்கையில் கிட்டத்தட்ட அரங்கம் நிரம்பியிருந்தது, முதல் வரிசையைத் தவிர. பள்ளிகளில் ஆரம்பித்த இந்த முதல் வரிசைப் பயம் இன்னும் நமக்கு அகன்றபாடில்லை. அதை வென்ற ஒரு சிலர் மட்டுமே அங்கமர்ந்திருந்தனர்.
சலசலப்புகள் அடங்கியபோது ரஸ்ய கலாச்சார மையத்தின் துணை அதிகாரி மிஹாயில் கோர்பட்டேவும் அரங்கினுள் நுழைந்தார். விழாவை துவக்குவதற்கான கடைசி நிமிட பரபரப்பில் இருந்தது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். ஒரு நீண்ட நிசப்தத்திற்குப் பிறகு கவிதாவின் கணீர் குரலோடு விழா நாயகர்கள் ஒவ்வொருவராக மேடையில் அமரவைக்கப்பட்டனர். சிறிலின் கச்சிதமான ஆங்கில வரவேற்புரையோடு தஸ்தயேவ்ஸ்கியின் டேமிழ் குரலுக்கான பாராட்டு விழா இனிதே துவங்கியது.
மறந்துவிடக் கூடும் என்பதாலோ என்னவோ தாளில் எழுதி எடுத்து வந்திருந்த தன் உரையை மேடையில் அமர்ந்தவாரே இ.பா துவங்கினார். டால்ஸ்டாய் is objective(புறவயம்) என்றால் தஸ்தயேவ்ஸ்கி is subjective (அகவயம்) என இருவரும் ரஸ்ய இலக்கியத்தின் இரு துருவங்கள் என்றவரின் நீண்ட உரையில் அவ்வப்போது அவருக்குள்ளிருந்த இளைஞன் எட்டிப்பார்த்து தாளில் இல்லாதவற்றையும் பேசி குறும்பும் கிண்டலுமாக உரையை நகர்த்திச் சென்றான். அக்கரையிலுள்ளவற்றை இக்கரையிலிருந்து கொண்டே அறியும் அனுபவத்தை நமக்கு அளிப்பவர்கள் அக்கறையுள்ள இந்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் என்றது இலக்கியத்தில் அவர்களின் உன்னத இடத்தை உணரச் செய்தது. மூன்றே நாட்களில் ‘குற்றமும் தண்டனையும்’ வாசித்து முடித்திருக்கிறார் சலிப்பே இல்லாமல். வெறும் காகிதப்பலகைகளாக மட்டுமே தேங்கிவிடும் மொழிபெயர்ப்பு நாவல்களுக்கு நடுவில் சுசீலா அவர்களின் உழைப்பு உணர்வுபூர்வமானது என்பதற்கு இந்த இலக்கிய மேதையின் வாசிப்பே சான்று. இதற்கு முன்னால் பேசிய மிஹாயிலும் இதையே வேறுவகையில்,
ரஷ்யர்களுக்கே சிக்கலான தஸ்தயெவ்ஸ்கியை உங்களால் உணரமுடிவது ஆச்சரியமளிக்கிறது என்றார். இதை சாத்தியப்படுத்திய சுசீலா அவர்களுக்கான விருதை வழங்கி மிஹாயிலும், இ.பா வும் விடைபெற்றனர்.
அதிலும் இ.பா. தன் முதுமையின் இயலாமையை “My soul wants to stay here but by flesh is not allowing me” என தனக்கே உரிய நக்கலோடு சொல்லிவிட்டு அதே குறும்பு முகத்துடன் விடைபெற்றார். அருணாச்சலம் நன்றியுரையில் குறிப்பிட்டதை போல 88 வயதான என்னை எந்த நம்பிக்கையோடு விழா நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அழைக்கிறீர்கள் என அதே குறும்புடன் கேட்டிருக்கிறார். ‘வாழத்தூண்டும் மரணம்’ எழுதியவரின் மன முதிர்ச்சியது. மேடையில் தோன்றிய வெற்றிடத்தை மனதும் உணர்ந்தது.
மீண்டுமொரு சிறிய நிசப்தம். தலைமையேற்ற இருவரின் சிறப்பான உரைகளுக்கு பிறகு இளம் எழுத்தாளர் சுரேஷ் பிரதிப்பை உரையாற்ற அழைத்தார்
கவிதா. மேடையிலிருந்த தன் இருக்கையிலிருந்து துப்பாக்கியிலிருந்து விடுபடும் குண்டு போல விசுக்கென்று உரையாற்றுமிடத்தை அடைந்தார். விரைந்து நடப்பவர் போலும். அது மிக நீளமான மேடை. ஆனால் குறைந்தே பேசினாலும் மிகச் செறிவாக இருந்த அந்த உரையில் தஸ்தயேவ்ஸ்கி பேசும் நவீன தனிமனிதனின் அகச்சிக்கல்கள் தொடங்கி ஏன் அவரை மொழிபெயர்ப்பது கஷ்டம் என்பது வரை மிக நேர்த்தியாக சுட்டிக்காட்டினார் . இவர் ஒரு தேர்ந்த கதைசொல்லியும் கூட என்பதை பதற்றமற்ற அந்த உரை உணர்த்தியது. தன் குழு அடையாளங்களை விட்டு வெளியேறியதின் விளைவாவே தனிமனித சிக்கல்களில் முக்கியமான ஒன்றாகிய நிறைவின்மை தோன்றியது என அதை ‘பள்ளம்’ என்ற குறியீடாக உருவகித்திருந்தது அங்கிருந்தோருக்கு பெரிய திறப்பாக அமைந்திருக்கும்.
அடுத்ததாக சென்னை விஷ்ணுபுரம் வட்டத்தின் குருசாமியான ராஜகோபால் மிக இயல்பாக நெடுநாள் பழகிய நண்பர்களோடு உரையாடுவதுபோல் தன் உரையைத் துவங்கினார். சென்ற தலைமுறை இளைஞர்களை வளர்த்தெடுத்ததில் சமூகத்திலுள்ள எளியவர்களின் பங்கை தன் சிறுவயதில் சந்தித்த தையல் கலைஞர் மாரியப்பன் வழியாக உணர்த்தினார். கம்யூனிஸ தோழர்களின் வழியாகத் தான் ரஷ்ய இலக்கிய மேதைகளான டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயேவ்ஸ்கியெல்லாம் நமக்கு அறிமுகமாயிருக்கிறார்கள். அப்படியான தோழர்களெல்லாம் இப்போது காணக்கிடைக்கிறார்களா என்று தெரியவில்லை. எவ்வளவு நாள்தான் அவர்களை பொன்னுலக் கனவுக்காக மண்ணைத் திங்கவைக்க முடியும். அவர்களெல்லாம் மறைந்து போலி முற்போக்குவாதிகளின் கூடாரமாக கம்யூனிசத் தோழர்கள் மாறிவருவது வரலாற்றுச் சோகம்.
மொழிபெயர்ப்புகள் இல்லாவிட்டால் தமிழ் இலக்கியம் இவ்வளவு செழுமை பெற்றிருக்காது என்பதை உணர்த்தி சுசீலா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு தன் அருமையான உரையை நிறைவு செய்தார்.
விமான பயணிகளின் கவனத்திற்கு என்ற அறிவிப்பு வந்ததைப்போல அரங்கிலிருந்த அனைவரும் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார்கள். ஜெமோவை சிறப்புரையாற்ற தொகுப்பாளர் கவிதா அழைத்ததும், அங்கிருந்த குளிரூட்டி திடீரென அதிக வெப்பத்தை உறிஞ்சு வெளியே துப்பவேண்டியிருந்திருக்கும். அனைவரின் புலன்களும் உரைமேடையில் நின்றிருந்த ஜெமோவின் மேல் சூரியக்கதிர்கள் என குவிந்திருந்தன.எழுத்தும் பேச்சும் அவருடைய வற்றாத ஜீவநதிகள். அதுவும் இமயத் தனிமைக்குப்பிறகு வெள்ளமாய் பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
எப்போதுமே ஜெமோவின் உரைகளை மூன்றாய்ப் பிரிக்கமுடியும். இம்முறையும் சுசீலா அவர்கள் ஏன் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டி, ஏன் மொழிபெயர்ப்பு ஒரு மொழியின் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் முக்கியமானது மற்றும் சுசீலா அவர்களின் மொழியாளுமையும் உழைப்பும் என்ற மூன்று பிரிவாக இருந்தது. ஆனால் இந்த எல்லைகளுக்குள் அவர் சிதறவிட்ட முத்துக்களை கோர்ப்பதெற்கெல்லாம் என் அறிவு பத்தாது. ஒன்றை எடுத்து கோர்ப்பதர்க்குள் மற்றொன்று என அருவி மாதிரி கொட்டிக் கொண்டேயிருந்தார். என்னால் கோர்க்கமுடிந்ததை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.
செய்யுள் மொழியான தமிழ் உரைநடைக்கு பழகியதே மொழிபெயர்ப்பு நாவல்களின் வருகைக்குப் பின்புதான் என்றது மிக ஆச்சர்யமாக இருந்தது. இன்னொரு மொழியின் சாத்தியங்களை, அந்த சமூகத்தின் கலாச்சாரத்தை நமக்கு அணுக்கமாக்குவது மொழிபெயர்ப்புகளே. ஒரு சமூகம் அடைந்த அத்தனை முன்னேற்றங்களுக்கும் பின்னாலிருக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று மொழிபெயரப்பு. இதற்கு உதாரணம் பிரிட்டிஸ்காரர்களின் வளர்ச்சி. உலகின் மிகச்சிறந்த மூலநூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் மொழிபெயர்ப்பு நாவல்கள் கலங்கரை விளக்கமாவதும், காகிதக் கப்பலாவதும் மொழிபெயர்ப்பாளரின் அக்கறை, உழைப்பு, ஈடுபாடு ஆகியவற்றைப் பொறுத்ததே. அந்த வகையில் சுசீலா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் தமிழ் இலக்கியத்திற்கு, முக்கியமாக வருந்தலைமுறை இலக்கிய வாசகர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமே.
செவ்வியல் நாவல்களில் ஏன் கதையோட்டத்தை எதிர்பார்க்க கூடாது என்பதை மிகத்தெளிவாக அடிக்கோடிட்டு காண்பித்தார். ஏனென்றால் அவை ஒரு கதைக்குள் சுருங்குபவையல்ல. முழுமையை நோக்கி விரிந்து நகரும் மானுட தரிசனங்களவை. இந்த செவ்வியல் ஆக்கமோ வாசிப்போ கைகூடாததால் தமிழ் சமூகம் தவறவிட்ட வரலாற்று வாய்ப்புகள் அதிகம் என்று கூறி அதற்கு உதாரணமாக ‘தமிழ் இஸ்லாம்’ பற்றி கூறியது எங்களை வாய் பிளக்கச் செய்தது. உலகமெங்கும் மதமாக அறியப்பட்ட இஸ்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘தமிழ் இஸ்லாம்’ என்றழைக்கப்பட்டிருக்கிறது. செவ்வியல் நாவல்களுத்கான ஆகச்சிறந்த களமிது.ஆனால் தமிழ் இஸ்லாம் பற்றி இங்கு ஒரு நாவல் கூட எழுதப்படவில்லை. இஸ்லாமியர் ஏன் தமிழ் சமூகமா மாறினர் என்பதை இஸ்லாமிய தத்துவப் பின்புலங்களின் வழியாக ஒரு செவ்வியல் படைப்பு நமக்கு உணர்த்தியிருக்கும்.
இப்படி அருவி போல் நிறைய விஷயங்களை கொட்டி விட்டு சுசீலா அவர்களின் உழைப்பிற்கு நன்றி கூறி தன் உரையருவிக்கு அணைகட்டிக்கொண்டார்.
வாழ்த்து மழையில் நனைந்து கனத்திருந்தார் சுசீலா அவர்கள். இருந்தும் அத்தனை எடையுடன் துள்ளலாக உரைமேடைக்கு வந்தார். மறைந்திருந்தவரை முன்னால் வந்து அனைவருக்கும் தெரியும்படி நின்று உரையாற்றவைத்தார் ஜெமோ. மொழிபெயர்ப்பாளர்கள் மறைந்திருக்க வேண்டியதில்லை என்று பூடகமாக உணர்த்தியதைப்போல இருந்தது.
தன்னடக்கத்தோடு இவ்வளவு பெரிய விருதுக்கும் விழாவுக்கும் நான் தகுதியானவள்தானா என்று ஆரம்பித்தார். என்னைப் பொறுத்தவரையில் கர்வமாகத்தான் அவர் உரையை ஆரம்பித்திருக்க வேண்டும். இதைவிட பெரிய விருதுகளும் விழாக்களும் அவர் கொடுத்த உழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன என்றே உள்ளுணர்வு சொல்லியது. என்னுடைய இந்த இரணடாவது இன்னிங்ஸின் வெற்றிக்கு காரணம் ஜெமோவிடம் இருந்து கிடைத்த செயலூக்கம் என்றார். அதிலும் சதமாக அடித்துக் கொண்டே இருக்கிறார். போகப்போக ஏற்புரையாக இருந்த அவ்வுரை நெகிழ்வுரையாக மாறிப்போனது. இம்மொழிபெயர்ப்புக்காக ரஷ்யாவிற்கே சென்று தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்விடங்களை பார்த்து வந்தது. பிரெஞ்ச் கற்றுக்கொணடது என ஒரு உச்சத்திலேயே இம்மொழிபெயர்ப்பு அவரை வைத்திருந்திருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கி என்னை கருவியாக்கித்தான் இந்நாவல்களைத்தையும் எழுதிக்கொண்டார் என்று கூறி தன் உணர்ச்சிவயமான உரையை முடித்தார். அரங்கிலெழுந்த கைத்தட்டல் அடங்க வெகுநேரம் பிடித்தது.
அருணாச்சலம் அனைவருக்கும் நன்றி கூற, இந்திய நாட்டுப்பண்ணும் அதைத்தொடர்ந்த ரஷ்ய நாட்டுப்பண்ணுடனும் விழா இனிதே முடிந்தது. ஜெமோவையும் சுசீலா அவர்களையும் மொய்த்திருந்தார்கள் வாசகர்கள். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அரங்கத்தை விட்டு வெளியே வந்தேன். நற்றிணைப் பதிப்பகத்தார் அங்குள்ள வரவேற்பரையில் கடை விரித்திருந்தனர். அங்கும் ஒரே கூட்டம். வரவேற்பரையை விட்டு வெளியே வந்து கலாசார மையத்தின் care barல் கூட்டம் குழுமியிருந்ததைப் பார்த்தேன். அங்கிருந்த பெரிய திரையில் மஞ்சள் சட்டைக்காரர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். IPL துவங்கியதையே மறந்து விட்டேன். சமீபகாலங்களாக இலக்கியம் என்னுடைய கிரிக்கெட்டை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
LikeLike
[…] […]
LikeLike
[…] […]
LikeLike