இராவணனுக்கு மட்டுமா பத்து தலை. ஆசையிலிருந்து பேராசையென; அகந்தையிலிருந்து ஆணவமென; பொன்னாசையிலிருந்து பெண்ணாசையென; அடைக்கலத்திலிருந்து ஆதிக்கமென; தனியுடைமையிலிருந்து தனக்கு மட்டுமேயென முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது நம்மைத் தளைப்படுத்தும் நம்முடைய தலைகள்.
யுத்த களத்தில் இராவணனின் தலைகள் ஒவ்வொன்றாக கொய்யப்படும் பொழுது, பற்று அற்றவனென, எளியவனென, பொதுவுடைமைவாதியென மிளிர ஆரம்பிக்கின்றான் இராவணன். தன்னைத் தளைப்படுத்திய அனைத்து தலைகளையும் களைந்து பொன்னொளி வீசுகிறது எஞ்சியிருக்கும் அவனுடய முகம். குழந்தையின் முகம். அது குழந்தையின் அகமும் கூட. இப்படித்தான் இராமனின் இராவண வதம் நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரஞ்சிததின் காலா காட்டும் இராவண வதம் ஒடுக்கப்பட்டவர்களின் கண்கள் வழியாக வேறொரு சித்திரத்தை நமக்களிக்கிறது.
அடிக்கடி மின்சாரத்தை இழந்து, மேலும் தன்னை இருளாக்கிக் கொள்ளும் மும்பையின் தாராவிப் பகுதி அன்று மாலை மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. உள்ளே பெரும் படபடப்போடும், வெளியே அதை வலிந்து மறைக்க முற்பட்டு தோற்று ஒரு மெல்லிய புன்னகையோடும் கரிகாலன் தன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், காலாவின் படபடப்பிற்கும் தாராவியின் பிரகாசத்திற்குமான காரணம் நமக்குப் புலப்படுகிறது.
அங்கிருக்கும் வீடுகளிலேயே சற்று பெரிதான, ஓரளவேனும் காற்றோட்டமும், முன்பக்க வாசலின் முன்புறம் சற்றே பெரிய அளவினாலான திறந்த வெளியும் கொண்ட இராவணனாக உருவகிக்கப்பட்ட காலாவின் வீட்டில் நடுநாயகமாக வீற்றிருக்கார் செரீனா. அவரைச் சுற்றி காலாவின் மனைவியும் மகன்களும். மஞ்சள் நிறம்….. செரீனா, அவள் உடை, அங்கு காலாவின் உள்மன படபடப்பை பிரதிபலித்துக் கொண்டிருந்த காற்றிலழையும் மெழுகுவர்த்தியின் சுடர் என மூன்றும் மஞ்சள் நிறம். இந்த மூன்றும் சேர்ந்த அந்த தகதகப்பில் காலாவின் படபடப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது. செரீனாவா? அவர் உடையா ? இல்லை அச்சுடரா?. எது தகதகக்கிறது என்று பிரித்தறியமுடியாத ஒரு அத்வைத நிலையில்தான் ‘இராவண வதம்’ படிக்கும் காலா அங்கிருக்கிறார்.
காலாவின் இந்த முன்னால் காதலி சிரிக்கும் பொழுதும் பேசும் பொழுதும் அவளது நீண்ட கழுத்தின் பக்கவாட்டிலிருந்து புடைத்தெலும்பும் சதையின் அசைவுகள் கிரங்கடிப்பவை. கருப்பு லினன் சட்டை வேஷ்டியுடனும்,அதோடு பொருந்திப் போகும் வெள்ளைத்தாடியுடனும், தன் முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த வசீகர சிரிப்போடும் காலா இத்தனை ஆண்டு கழித்தும் செரீனாவிடம் மெய்மறப்பது ஏன் என்பது புரிகிறது.
காலாவின் மனைவியான ஈஸ்வரி ராவ் இடைவெளியில்லாத ஓயாத பேச்சால் நம்மைக் கவர்கிறார் என்றால், முன்னால் காதலி ஹீமா குரேஷி புன்னகையாலும் கம்பீரத்தாலும்.
வழக்கம் போல் ரஞ்சித் படத்திற்கே உரிய நேர்த்தியான காட்சியமைப்புகள் மற்றும் கூரிய வசனங்கள் படம் முழுக்க நிறைந்து ததும்பி வழிகின்றன. குறிப்பாக இராவண ரஜினிக்கும் தன்னை இராமவதாரமாக எண்ணிக்கொள்ளும் நானா படேகருக்கும் இடையே நடக்கும் அந்த சந்திப்புகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. அதிலும் குறிப்பாக நானாவின் உடல்மொழி. வீட்டிலிருந்து படபிடிப்புக்காக கிளம்பும்போதே அன்று நடிக்க வேண்டிய குணச்சித்திரமாக மாறிவிடுவார்போல.உடலிலுள்ள அனைத்து பாகங்கள் வழியாகவும் சமூகப்பிரமிடின் கீழிருப்பவர்களின் மேலான தன் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறார். தாழ்ந்தவர்கள் தன் கால்தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆணவமாகட்டும், “தாராவி இனிமேல் உன் கடந்த காலம் மட்டுமே காலா” என்ற அலட்சிய பேச்சாகட்டும், அம்பேத்கரின் எழத்துகளில் கண்ட உயர்சாதி ஆணவ வெறுப்பை; அதிகாரத்தின் கையில் இருக்கும் மதம் எவ்வளவு அபாயகரமானது என்பதை நானாவின் வழியாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இரஞ்சித்.
ரஜினியையும் தனக்கே உரிய பாணியில் கலக்க வைத்திருக்கிறார். “காலாவ
கேட்காம நீ தாராவிய விட்டு வெளியே போகமுடியாது” என நானாவை மடக்குவதாகட்டும், தன் காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற வந்த நானாவின் பேத்தியைத் தடுத்து “பெரியவங்கள பார்த்து நமஸ்காரம் மட்டும் பண்ணினால் போதும்” என்று சுயமரியாதை பற்றி கற்பிக்கும் கெத்தாகட்டும், “நான்கு புத்தகங்களைப் படித்து விட்டு, அடிப்படை எதுவும் தெரியாமல் போராடக்கூடாது “ என்று தன் மகனிடம் காட்டும் கரிசனமாகட்டும், காலா ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக இலாவகமாக நம்முள் நுழைந்து விடுகிறார்.
இவ்வளவு வலுவான காட்சிகள் இருந்தும், இவையனைத்தையும் நிரப்பிக் கொள்ளும் திரைக்கதை எனும் கொள்கலன் வலுவற்று அனைத்து காட்சிகளையும் ஒழுகவிட்டிருக்கிறது. அதிலும் வலிந்து சேர்க்கப்பட்ட கடைசிகட்ட போராட்ட காட்சிகள் கதையோடு ஒட்டாமல் தனித்து திரைக்கதையை மிகவும் பலவீனப்படுத்தி விட்டன.
ஆனால் இதுபோன்ற படங்கள் இன்னமும் தேவையா? என்ற பலகுரல்களுக்கு நடுவில் , “ஆம். தேவைதான்” என்று ஓங்கி ஒலிக்கிறது காலா. இடஒதுக்கீடுகளாலும் சலுகைகளாலும் சமூகபிரமிடின் கீழடுக்கிலிருந்த நிறையபேர் முன்னேறி அப்பிரமிடை இப்போது தலைகீழாக்கியிருக்கிறார்கள். ஒருகாலத்தில் சிறுபான்மையினராக இருந்த உயர்சாதியினர் இன்று பெரும்பான்மையினராக மாறியுள்ளனர். ஒடுக்கப்படுபவர்களைவிட ஒடுக்குபவர்களே இப்போது அதிகம். ஒடுக்கப்படுபவர்களின் குரல்கள் முன்பைவிட இப்போது வலுவாகவே ஒலிக்க வேண்டியுள்ளது.
ஆனால் இதற்கெல்லாம் தீர்வுபோல ரஞ்சித் வைக்கும் “நிலம் எங்களின் உரிமை” என்ற கோஷம் மீண்டும் நிறைய உயர்சாதியினரையே உருவாக்குமென்று தோன்றுகிறது. உரிமை எப்போது வேண்டுமானாலும் தனியுடைமை என்று மாறலாம்.”நிலம் பொதுவுடைமை” என்ற கோஷமெல்லாம் காலாவதியாகி விட்டிருக்கிறது.