சாய்வாக ராஜாஜி கூடத்தின் படிக்கட்டுகளில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது அந்த கண்ணாடிப்பேழை. தனக்கேயுரிய அழகோடு அந்த கறுப்புக் கண்ணாடி மலர்ந்து உறைந்திருக்கும் இந்த சூரியனின் கண்களை திகைப்போடும் துயரோடும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. தோளில் எப்போதுமிருக்கும் மஞ்சளாடை அந்த சூரியன் உதிக்கும் மலை போன்ற தோள்களை அதே காதலுடன் ஆரத்தழுவியிருக்கிறது. தமிழ்த்தாயின் மூத்தமகனை மார்பிலிருந்து கால்வரை போத்தியிருக்கிறது தேசியக் கொடி.
சுவாசித்திருக்கும் போது அனைத்து தலைவர்களுக்கும் ஒன்றுதான். சுவாசம் நிற்கும்போதுதான் அத்தலைவர் எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியவருகிறது. நான் முதன் முதலில் கண்ட இந்திராவின் இறுதி ஊர்வலத்திலிருந்து ஜெயலலிதா வரை கண்டுணர்ந்து கொண்டது இதைத்தான். ஓங்கியெழும் கடலலை போல எங்கும் மக்கள் திரள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் ஒருவர் மரணத்தின் போதும் தன் காழ்ப்புணர்ச்சியை காட்டும் ஒரு முதிரா கூட்டமும் அந்த அலையிலிருக்கிறது.
இவையனைத்தையும் அதே மாறாத புன்னகையுடன் கிரகித்துக் கொண்டிருக்கிறார் அந்த சாய்த்து வைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில் வீற்றிருக்கும் இந்த… .எதைச் சொல்லி இந்த ஆளுமையை சுட்டிக்காட்டுவதென்று தெரியவில்லை. கண்ணீரை இமையணை கொண்டு தடுக்கவும் முடியவில்லை.
எல்லாம் முடிந்து அந்த சாய்த்து வைக்கப்பட்டடிருந்த காலியான கண்ணாடிப்பேழையை ஒரு இராணுவ வீரர் அகற்றிக் கொண்டிருந்தார். வெற்றிடம், காலியான அந்த கண்ணாடிப்பேழையில் மட்டுமல்ல…
RIP Mr.Karunanidhi