“வயசுக்கு மீறுன சுமைய தன் தலைமேல சுமந்துட்டு இருக்கான்டா எம்புள்ள…” என ஏழுவருடம் கழித்து நடந்து கொண்டிருக்கும் வேட்டக்கருப்பு திருவிழாவை நல்லபடியாக நடத்த வேண்டிய கட்டாயத்தின் பொருட்டு முதிர்ச்சியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் விஷாலைப் பார்த்து வெட்டுண்ட கழுத்துடன் கம்பீரமாக பேசுகிறார் ராஜ்கிரண். இப்படி, இருக்கிற வெற்றிடத்துக்கு நானும் இருக்கிறேன் என படம் முழுதும் கொடி கட்டிப் பறக்க முயன்றிருக்கிறார் விஷால்.
அறம் அருவி மேற்குத்தொடர்ச்சி மலை பரியேறும் பெருமாள் மற்றும் 96 என எதார்த்த சினிமாக்களிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்புவர்களுக்கு சினிமாத்தனங்கள் நிறைந்த இந்த சண்டக்கோழி 2 சினிமா ஒரு நல்ல வாய்ப்புதான் என்றாலும், சண்டக்கோழியின் தொடர்ச்சி என்ற எதிர்பார்ப்பையும் அதன் சுவாரஸ்யத்தையும் இச்சினிமா தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு முக்கிய காரணம் படம் முழதும் விஷாலைச் சுற்றியே எடுக்கப்பட்டுள்ளது, “ஆளப்போறான் இன்னொரு தமிழன்” கிற ரேஞ்சில்.
படம் முழுக்க திருவிழாதான். சுவாரஸ்யமான திரைக்கதைக்கு அத்தனை வாய்ப்பிருந்தும் வலிந்து திருவிழாவைக் காட்சிப்படுத்துவதில் மட்டுமே கவனமாய் இருந்திருக்கிறார்கள். கதைக்கு வலுசேர்க்காத கீர்த்தி சுரேஷின் நக்கல் நடிப்பு மட்டுமே நாம் நினைத்த ஆசுவாசத்தைத் தருகிறது. முதல் பாகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் முதுகுத்தண்டை சில்லிடவைக்கும் வலுவான வில்லன் இருந்ததுதான். இரண்டாம் பாகத்திற்கு அதைவிட மிரட்டவைக்கும் நடிப்புத்திறனைக் கொண்ட வரலட்சுமி இருந்தும், தொண்டைகிழிய அவரை கத்தவைத்தே அவருடைய ஆற்றல் அனைத்தையும் வீணடித்திருக்கிறார்கள். கீர்த்தியும் வரலட்சுமியும் சந்தித்துக் கொள்ளும் ஒரு காட்சிகூட இல்லாதது, திரைக்கதை எவ்வளவு பலவீனமானது என்பதற்கு ஒரு சான்று.
சண்டைக் காட்சிகளில் மட்டுமே முதல் பாகத்தில் காட்டிய அதே அக்கறை காட்டப்பட்டுள்ளது. விஷாலும் ராஜ்கிரணும் வேட்டைக்கருப்பாகவே மாறியிருக்கும் இக்காட்சிகளிலிருந்து கண்களை விலக்க முடியவில்லை. அதிலும் ராஜ்கிரணை தெரியாமல் வெட்டிவிட்டு அந்த எதிர்முகாமைச் சேர்ந்த ஒருவர் பயத்தில் பதறித் துடிக்கும் அந்தக் காட்சி Classic. இப்படம் சண்டக்கோழியின் இரண்டாம் பாகம்தான் என்பதற்கான ஒரே சான்றிது. மற்றகாட்சிகள் அனைத்தையுமே காற்றால் புரட்டப்படும் புத்தகத்தின் பக்கங்களைப்போல புரட்டித்தான் தள்ள வேண்டியிருந்தது.
கண்கவர் திருவிழாக் காட்சிகள், திறமையான நடிகர் நடிகைகள், உயிரைப் பணயம் வைத்த சண்டைக் கலைஞர்கள் என எல்லாமிருந்தும் முதல்பாகத்திலிருந்த மிரட்டல் கடலில் கரைத்த பெருங்காயமாய் கரைந்து போயிருக்கிறது இரண்டாம் பாகத்தில். முதல்பாகத்தில் லிங்குசாமி சொல்லி விஷால் நடித்தார். இரண்டாம் பாகத்தை விஷால் சொல்லி லிங்குசாமி இயக்கியிருக்கிறார்.