பரந்த புல்வெளியில் ‘96’ என்ற நம்பர் ஜொலிக்க நடக்கும், 22 ஆண்டுகளுக்குப் பிறகான re-unionல் திரிஷாவும், விஜய் சேதுபதியும் தாங்கள் விட்டுச் சென்ற காதல் தங்களுக்குள் இன்னும் எப்படி உறைந்திருக்கிறது என்று கண்டுகொள்ள முயற்சிக்கிறார்கள். இங்கு ஆரம்பிக்கும் ஜானுவின் தவிப்பும், ராமின் மாறாத அந்த ஈர்ப்பும் படம் முழுக்க கவிதையாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அந்த மென்மையான புல்வெளியைவிட மென்மையானவராக இருக்கிறார் ராம். மின்சார கனவில் வரும் பிரபுதேவா, கஜோல் மீதான தன் ஈர்ப்புக்கு காரணம் புரியாமல், “நீங்க…எப்படின்னாம்மா..பார்த்தா..கும்புடுற டைப்…” என்பார். “So, உங்க ஆராய்ச்சியோட முடிவு, நான் ஒரு தேவதை..” என்பார் கஜோல்.
ஜானுவைப் பார்த்தவுடனேயே ஏற்படும் துடிப்பைக்கூட வெளிக்காட்ட முடியாமல் மிரட்சியோடு சாிந்து விழும் ராம், ஜானுவின் மென்பாதங்கள் பட்டுச் சரியும் அங்குள்ள புல்வெளிப் பரப்பையும், பிரபுதேவாவையும் தான் ஞாபகப்படுத்துகிறார்.
15 வயதில் தொடங்கிய அந்த ஈர்ப்பை 22 வருடங்களாக எப்படி தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. இது இலட்சிய காதலில் மட்டுமே சாத்தியம்; அல்லது காதலியை தேவதை ஸ்தானத்தில் உயர்த்தி வைத்திருக்க வேண்டும். ஆனால், சாத்தியமற்ற இந்த ஒன்றை சாத்தியப்படுத்தியிருக்கிறது, விஜய் சேதுபதியின் நடிப்புத்திறன். ராமின் மிகையுணர்ச்சிகளை எந்த மிகையுணர்வுமின்றி நமக்குக் கடத்தும் எதார்த்தமான அவருடைய உடல் மொழி அபாரம். Re-unionல் திரிஷாவுக்கான உணவை எடுத்து தருவதாகட்டும்; அவர் சாப்பிட்ட ஸ்பூனிலேயே அத்தட்டில் மீதமிருந்த உணவை உண்பதாகட்டும்; பள்ளிக்காலத்திலிருந்து தான் விரும்பி கேட்ட “யமுனைஆற்றிலே…” பாடலை ஜானு முதன் முறையாக பாடும்போது பதறி, மின்சாரம் போயிருந்த தன்னுடைய நவநாகரீக அபார்ட்மெண்டில் உள்ள பொருட்களை சிதறடிப்பதாக இருக்கட்டும், வசனங்கள் எதுவுமில்லாமலே எனக்கான தேவதை ஜானு மட்டுமே என்றுணர்த்தி விடுகிறார். குணாக்குகையில் சிக்கிக் கொண்ட குணாவும் அபிராமியும் நினைவுக்கு வந்து போனார்கள்.
ஆனால், ஜானுக்கள் தேடும் இதுபோன்ற ராம்கள் அருகிவிட்ட காலமிது. கூடியவிரைவில் ராம் போன்றவர்களை மியூசியத்தில் மட்டுமே தேடமுடியும்போல் தெரிகிறது. தன்னைத் தொடக்கூட அனுமதிக்க விரும்பாத ராமைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போகிறார் ஜானு. ராம் சொன்னதைப் போல, அவன் 22 வருடங்களுக்கு முன்பு தான் விட்டுச் சென்ற இடத்திலேயேதான் நின்று கொண்டிருக்கிறான் என்பதையுணர்ந்ததும், ஜானுவின் தவிப்பு பன்மடங்கு பெருகிப் போகிறது. ராமைத் தவறவிட்ட குற்றவுணர்ச்சியும், வாழ்க்கைப் பயணத்தில் நெடுந்தூரம் கடந்து ராமின் நிலைக்காக வருந்துவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத இயலாமையும் சேர்ந்து ஜானுவாக வெடித்துச் சிதறி, உருகி, கரைந்து, அழுது, சிரித்து, சீண்டி, மிரட்டி என அநாசயமாக விஜய் சேதுபதியை மிஞ்சி விடுகிறார் இந்த நவீன ஜெர்சி.
“என் கணவர் மற்றும் குழந்தையோட சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல முடியாது. ஆனால் நிம்மதியா இருக்கேன்…” என்ற ஜானுவின் வார்த்தைகள் நாற்பதை தொட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு திடீரென தேவைப்படும் தாய்மடி கதகதப்பைத்தான் நினைவு படுத்துகிறது. அது ராமிடம் இப்போதும் கிடைக்கும் என்றுணரும்போது உடைந்து போகிறார் ஜானு. ஆனால் ராம் கூடவே இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா எனபதையும் இன்றைய ஜானுக்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த கதகதப்பிற்காகவே ஜானுவும், ராமும் நடந்தே அந்த இரவை கழிக்க விரும்பியது ஒளிப்பதிவாளரின் ரசனைக்கு செம தீனி. சென்னையின் சாலைகள் இரவு நேரத்தில் எவ்வளவு விசாலமானவை என்பதை ரம்மியமாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். அதிலும் குறிப்பாக சென்னையின் புதிய அடையாளமான மெட்ரோ ரயில்களும் அதன் நிலையங்களும் கண்ணைக் கவர்கின்றன. இதைவிடப் படத்திற்கு வலுசேர்த்தது சின்ன வயது ராமாகவும் ஜானுவுமாக நடித்தவர்கள்தான். சிறியவர்கள் பெரியவர்களாக நடித்தார்களா அல்லது உண்மையிலேயே அவர்கள் பெரிய நடிகர்கள்தானா என எண்ணுமளவுக்கு பிசிரற்ற நடிப்பு.
போலிச் சிறகுகளைக் கட்டிக்கொண்டு இரவு முழுதும் நடந்துகொண்டே பறக்கிறார்கள். இறுதியாக விடைபெற்றுக் கொள்ளும்போது மட்டுமே இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்கிறார்கள். அதுவும் காரின் கியர்மாற்ற உதவும் லீவரின் மேல் ஜானு தன் கையை வைக்க அதன்மேல் தன்கையை வைத்து கியரை மாற்றிக்கொண்டே அந்த உன்னதக் காதல் விமான நிலையம் நோக்கிப் பயணிக்கிறது. ஒட்டிக்கொண்ட போலிச்சிறகுகளை வெட்ட மனமில்லாமல் வெட்டிக் கொண்டு ஜானு தன் கணவனையும் குழந்தையையும் நோக்கித் தவிப்போடு பயணிக்க, வழக்கம்போல் ராம் தன் தேவதையின் நினைவுகளில் தன்னைப் புதைத்துக் கொள்கிறான், 22 வருடங்களுக்கு முன்பு ஜானுவின் மேலிருந்த அதே ஈர்ப்போடு.