அரசியல் மாற்றம் வேண்டி இளைஞர்களை இரத்தம் சிந்த அழைத்திருக்கிறார் சர்கார் விஜய். சில அரைவேக்காட்டு கம்யூனிஸ்டுகள் எந்த காலத்தில் மைக்கைத் தொட்டாலும், “நாம் வரலாறு காணாத நெருக்கடியில் இப்போது இருக்கிறோம்” என்று முழங்குவது தான் நினைவுக்கு வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மெர்சல் செய்துவந்த விஜய்க்கு மாநிலத்தில் ஆளும், ஆண்ட திராவிடக் கட்சிகளை மெர்சல் செய்யும் வாய்ப்பு சர்க்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
“ஒரு 3 மணி நேர சினிமாவுல 60 ஆண்டு கால திராவிட பாரம்பரியத்த ஒன்னும் சிதச்சிட முடியாது..” என்ற இறுமாப்போடு சொல்லிக் கொள்ளுமளவுக்கு சக்திவாய்ந்த இயக்கமாக இன்றைய திராவிட இயக்கம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில்; அரசியலை சினிமா வழியே மற்றும் கற்றுக்கொள்ளும் அறிவார்ந்த தமிழ் சமூகத்திடம் சர்க்கார் போன்ற திரைப்படங்கள் ஏற்படுத்தும் விளைவுகள், திராவிட இயக்கத்தை வலுவிழக்கச் செய்த திராவிட கழகங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே எண்ணத் தோன்றுகிறது. திராவிட இயக்கம், தந்தையின் தோளிலிலேயே பயணிக்கும் சவலைப்பிள்ளைகளைப் போல பெரியார் பார்ப்பனருக்கு எதிரி;ஆதலால் இந்து மதத்திற்கும் எதிரி என்பதைத்தாண்டி வளரவில்லை அல்லது வளரவிரும்பவில்லை அல்லது வளரவிடப்படவில்லை என்றிருக்கும்போது, RSS போன்ற இயக்கங்களின் sustainability ஆச்சரியமளிக்கிறது.
இயக்கமற்ற ஒரு அரசியல் கனவை இங்கு நடக்கும் அரசியல் ஏமாற்றங்களுக்கு தீர்வாக முன்வைக்கிறது சர்க்கார். அண்ணா ,கலைஞர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் ஒரு இயக்கத்தின் சிந்தனை மரபிலிருந்தே உருவாகி வரமுடியும். இயக்கமற்ற அரசியல் நல்லவர்களை வேண்டுமானால் அடையாளம் காண உதவலாம், ஆனால் நாட்டை ஆள்வதற்கு இயக்கங்கள் உருவாக்கும் வல்லவர்களே தேவை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த வல்லவர்களால் ஒட்டுமொத்த தமிழகமும் தேங்கிப் போய்விட்டது என்பதற்கு உதாரணமாக சமகாலத்தில் நடைபெற்ற சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, “போதும் தி.மு.க; போதும் அ.தி.மு.க” என்ற ஸ்லோகத்தை இளையவர்களின் மனதில் பதியவைக்கும் முதல் முயற்சி போன்றே உள்ளது சர்க்கார். இனி வரும் படங்களிலும் இம்முயற்சி தொடரலாம்.
விஜய் இல்லாத ஒருசில அபூர்வகாட்சிகளில் கூட விஜயைச் சுற்றியே நகரும் திரைக்கதை; வழுவான வில்லன்களாக இருந்திருக்க வேண்டிய பழ.கருப்பையாவையும், ராதாரவியையும் தெருச்சண்டையை கட்டப்பஞ்சாயத்து செய்து வைக்கும் மூன்றாம்தர ரவுடிகளைப்போல சித்தரித்திருப்பது; கீர்த்தி சுரேஷும், யோகிபாபுவும் வீணடிக்கப்பட்டிருப்பது என சிலவற்றை ஒதுக்கிவிட்டால், சர்க்கார் ஏற்படுத்த விரும்பிய சிறுபிள்ளைத்தனமான மாற்றங்களை அருமையான திரைக்கதை மற்றும் கூர்மையான வசனங்கள் மூலம் சொல்லியிருக்கும் வகையில் இது ஒரு கவனிக்கப்பட வேண்டிய படமே.
‘முதல்வன்’ புகழேந்தி, ‘சிவாஜி’ சிவாஜி வரிசையில் ‘சர்க்கார்’ சுந்தர ராமசாமியும் அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தால் பெரும் தலைவராக உருவெடுக்கிறார். தானிழந்த ஓட்டை மீட்டெடுக்கும் முயற்சியில், அரசியல் தலைவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை நொறுக்கி ஒட்டுமொத்த தமிழகத்தின் மீட்பராகிறார் விஜய். அதற்காக, போகிறபோக்கில் அமர்த்தியா சென் போன்ற பொருளாதார மேதைகளால் போற்றப்படும் தமிழகத்தின் சமூகநலத் திட்டங்களை கொச்சைப்படுத்தியிருப்பது போன்ற அசட்டுத்தனமான மேட்டிமைவாதங்களைத் தவிர்த்திருக்கலாம்.
சர்க்காருக்கு ‘49 P’ என்றே பெயரிட்டிருக்கலாம் என்றெண்ணுமளவுக்கு இந்த விதியை பிரபலப்படுத்தியுள்ளது சர்க்கார். ஒவ்வொருவரின் ஓட்டும் களவாடப்படுவதை மிகச் சாதாரணமாக கடந்து செல்லும் அன்றாடங்களில் சிக்கிக் கொண்ட மனிதர்களை, சேற்றிலிருந்து சிலுப்பிக்கொண்டெழும் பன்றிகளென எழவைக்கும் மிகச்சீரிய முயற்சி என்றவகையில் ‘சர்க்கார்’ பாராட்டப்பட வேண்டிய படமும் கூட.