மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனரான Zohoவைச் சேர்ந்த ராஜேந்திரன் தண்டபாணியின் கன்னித் தமிழுரையை கேட்கவைத்திருக்கிறது ‘மன்றம்’ என்ற அமைப்பு. தமிழில், இதுபோன்ற பல்வேறு துறை வல்லுநர்களை அழைத்து அவர்களுக்கான மேடையை அமைத்துத்தரும் அமைப்புகள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழர்களை தமிழில் உரையாற்ற வைப்பதே பெரிய சாதனை என்று சொல்லுமளவுக்கு நாம் தாழ்ந்து போயிருந்தாலும், ஒட்டுமொத்த உரையையும் முடிந்த அளவு தமிழிலேயே ஆற்றவைக்கும் இம்முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதே. இதுவரை எனக்குத் தெரிந்து இதுபோன்ற மேடைகளில் தொடர்ந்து தமிழில் உரையாற்றி வரும் சிந்தனையாளர் எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே. சமீபத்தில் அவருடைய இலக்கியவட்டம் நடத்திய ஒரு நிகழ்வில் அவருடைய உரையை கட்டணம் செலுத்தி கேட்க வேண்டியிருந்தது. ‘மன்றம்’ போன்றவர்களின் முயற்சிகள் இப்படியொரு இலக்கை நோக்கிப் பயணிக்க வாழ்த்துக்கள்.
தன்னுடைய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய உரைக்காக,எந்திரனுக்கு, ‘பொறியன்’ என்றொரு தமிழ் வார்த்தையை தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் ராஜேந்திரன். இப்படி அவர் உரை முழுதும் சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை. அதே சமயத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் பொறியன்கள் தன்னுடைய அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவை மனிதர்களின் உதவியின்றி தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் என்ற பீதியையும் கிளப்பினார்.
ஆரம்ப காலங்களில் மேதைகளிடமி்ருந்து மட்டுமே கற்று தங்களை மேம்படுத்திக்கொண்ட பொறியன்கள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைவரிடமிருந்தும் கற்றுக்கொண்டு மனிதர்களை முந்திச் செல்வது “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதையே ஞாபகப்படுத்தியது. நாம் இணையத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் பொறியன்களை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக கடவுள் ஸ்தானத்தை நோக்கி நகர்த்துகின்றன என்று கூறி “மனிதனை உருவாக்கியவனை மனிதன் உருவாக்குகிறான்” என்று முடித்தார் ராஜேந்திரன்.
கிட்டத்தட்ட ஒரு நூறு பேர் அமர்ந்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் மதியம் 2மணி முதல் மாலை 6 வரை ஐந்து விதமான தலைப்புகளில் நடந்த உரைகள், அனைவரையும் வெகுவாக ஈர்த்து இருக்கையோடு பிணைத்திருந்தது. பெரும்பாலும் இதுபோன்ற உரைகள் இளையவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அமைப்பை மீறி வெற்றிபெற்றவர்களை அழைப்பது வாடிக்கையாக இருக்கும். “இதுபோன்ற விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்களல்ல” என்பதை உணர்ந்து அமைப்புக்குள்ளிருந்து வெற்றி பெற்றவர்களுக்கு தொடர்ந்து உரையாற்றும் வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் ‘மன்றத்தில் தென்றல் வீசும்’.
https://www.eventbrite.com/e/mandram–tickets-51371592817?aff=ebdssbdestsearch#
[…] இரு வாரங்களுக்குப் பிறகு, மன்றம் (https://www.mandram.org/) என்ற அமைப்பினரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர்களுடைய மாதாந்திர நிகழ்வில் சிறப்புரை ஒன்று ஆற்றக்கோரி. சற்று நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல்வேறு துறை வல்லுநர்களை, அவரவர் துறைகளைப் பற்றி தமிழில் பேசவைக்கும் மேடைகளை உருவாக்கித் தருபவர்கள் இவ்வமைப்பினர். இவர்களுடைய நேரடி நிகழ்வு ஒன்றில் நான் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்வையாளராக கலந்து கொண்டிருக்கிறேன். அந்நிகழ்வைப் பற்றிய என்னுடைய அவதானிப்புக்களை என்னுடைய தளத்தில் பதிந்திருந்தேன். (https://muthusitharal.com/2018/11/17/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92…😉 […]
LikeLike