
ஒரு செவ்வியல் (Classic) நாவல் போல உரையையும் அமைத்துக்கொள்ள முடியுமென்று நிரூபித்துக் காட்டுவதற்காகவே ‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் தன்னுடைய பேருரையை ஆற்றியிருக்கிறார் சமகால இலக்கிய ஆளுமையான ஜெயமோகன் (ஜெமோ).
அறிவுச்செயல்பாடுகளிலிருந்து நீண்டகாலமாக விலகியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், கிட்டத்தட்ட ஒரு 3 மணி நேரம் தொய்வேயில்லாமல் இலக்கியத்தை மட்டுமே தன்னுடைய அறிதலாகக் கொண்ட ஒருவரால் இத்தலைப்பில் ஒரு உரையை ஆற்றமுடியுமா? அதை தலைக்கு 300 ரூபாய் கட்டி ஒரு 300 பேர் ஆழ்ந்தமர்ந்து கேட்டுணரமுடியுமா? என்ற அவநம்பிக்கை கேள்விகளுக்குச் சரியான பதிலை தந்திருக்கிறது ஜெமோ ஆற்றிய இந்த பேருரை. மூடிக்கட்டி கனத்திருந்த அட்டைப் பெட்டியை அவிழ்த்துக் கொட்டுவதுபோல் அங்கிருந்தவர்களுடைய மனக்கட்டுமானங்களின் முடிச்சுகளை தன் அறிவாற்றலான இலக்கியம் வழி அவிழ்த்து விட்டிருக்கிறார். இனம், மொழி, மதம், சாதி சார்ந்து தஙகள் சுயநலத்திற்காக சமூகத்தை ஒற்றைப்படையாக தொகுத்து ‘தான் – பிறர் ‘ என கட்டமைக்க விரும்பும் ஃபாசிஸ்டுகள் ஜெமோவை ஒரு ‘முடிச்சவிக்கி’ என்று வசைபாடலாம்.
இப்பதிவு ஜெமோ ஆற்றிய உரையைப் பற்றியது மட்டுமில்லாமல், அதன் வழியாக நான் கண்டடைந்த புரிதல்களையும் உள்ளடக்கியுள்ளது.
அரங்கு
வழக்கம்போல் ஆட்டோ சாரதியை அழைத்துக் கொண்டு நிகழ்வு நடக்கும் சென்னை அடையாறிலுள்ள இராஜரத்தினம் அரங்கத்தை கண்டுகொண்டபோது மணி 5ஐத் தொடவிருந்தது. அதுவரை தான் பூண்டிருந்த சினிமா படப்பிடிப்பிற்கான வேஷத்தைக் கலைந்து 6 மணிக்குத் தொடங்கவிருக்கும் கட்டண உரைக்காக தயாராகிக் கொண்டிருந்தது அரங்கம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அகர முதல்வன் எந்திரன்போல் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தார். சென்னை விஷ்ணுபுர இலக்கிய வாசகர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த நுழைவுச் சீட்டை யோகேஸ்வரனிடம் பெற்றுக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தபோது வெள்ளைச்சட்டை அணிந்திருந்த நீல இருக்கைகள் ஆங்காங்கே நிரம்பியிருந்தது. உள்ளரங்கத்திற்குள்ளான அனைத்து அமைப்புகளோடும் கட்டப்பட்டிருக்கும் அரங்கு. நீல இருக்கையின் வெள்ளைச்சட்டை மட்டும் சற்றே அழுக்காயிருந்தது. தவளை தன் வாயால் கெடும் என்பது போல வெள்ளை தன் நிறத்தாலேயே கெடும் எனலாம்.

மணி 6ஐத் தொட பத்துநிமிடங்களிருந்து. மேடையிலிருந்து ஆறாவது நிரையிலிருந்த என்னிருக்கையில் அமர்ந்தவாரே சற்றுத்திரும்பியதில் அரங்கம் நிறைந்திருந்ததில் உள்ளூர ஒரு மகிழ்ச்சியும் சற்று பிரமிப்பும் ஒரு சேரத்தோன்றியது. கிட்டத்தட்ட 300க்கும் சற்று அதிகமான இருக்கைகள் கொண்ட அரங்கம். மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த பேசுபவருக்கான பேசு மேடையைத் தவிர வேறெதுவும் இல்லாதது இந்நிகழ்வின் தனித்தன்மையை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் சற்றே பரபரப்போடு ஜெமோ தன் மனைவியோடும் மகனோடும் அனைவரின் புன்னகையையும் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் வசந்தபாலன் அருகில் சென்றமர்ந்தார். அதைத் தொடர்ந்த சில நிமிடங்களில் நவீன தொழில்நுட்பயுகத் தமிழ்சினிமாவை கட்டமைத்த ஆளுமைகளில் மிக முக்கியவரான இயக்குனர் மணிரத்தினத்தின் வருகை அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திழாழ்த்தியது. அங்கிருந்த 300 பேரில் தானும் ஒருவராக அமர்ந்து கொண்டார், ஜெமோவின் உரையை கேட்பதற்காக.

குறுதிச்சுற்றமும் பண்பாடும்

ஒருசில நிமிட அகரமுதல்வனின் முன்னுரை இந்நிகழ்வு ஆகுதிப் பதிப்பகத்தால் நடக்கவிருக்கும் தொடர் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கான ஆரம்ப நிகழ்வு என்று புரிந்து கொள்ள வைத்தது. ஆனால் இது ஜெமோவின் இரண்டாவது கட்டணஉரை. நம்மிலுள்ள நாமறியாவற்றை வெளிச்சம் போட்டுக்காட்டவிருக்கும் உரையின் முதல் பகுதியை எப்போதிருக்கும் ஆரம்பகட்ட பதற்றத்தோடு ஆரம்பித்தார் ஜெமோ.
ஒரு செவ்வியல் நாவலின் ஆரம்பம்போல் அங்குமிங்கும் அலைபாய்ந்து ஆழ் அமைதியை, படிமங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது யாருடைய மரபு? என்ற கேள்வியை பகடி செய்துகொண்டே.
மரபின் படிமங்களாக அல்லது உருவங்களாக நம் பெற்றோர்களையே முன்னிறுத்தி ஆரம்பித்த உரை, மரபென்பதே தொல்காலத்தைச் சேர்ந்த ஒன்று என்றெண்ணியவர்களுக்கு ஆச்சரியமான ஒன்று. நமது பல்வேறு தரப்பட்ட மரபுகளின் கட்டமைப்புதான் நாம் தினமும் எதிர்கொள்ளும் நம்முடைய பெற்றோர். சமூகத்திலும் இதே போன்றுதான் தந்தைகளையும் அன்னையரையும் உருவகித்திருக்கிறோம். காந்தியிலிருந்து இந்திரா வரை; பெரியாரிலிருந்து கலைஞர் வரை என. இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தும் மரபின் படிமங்களே என்று சொல்லிவிட்டு அதற்கான ஆழ்படிமம் அல்லது முதன்மையான காரணமாக மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மாபெரும் தனிமையைச் சுட்டிக்காட்டியது, ஆர்ப்பரித்து கரையைத்தொட்டு உள்வாங்கிக் கொள்ளும் கடலலையைப்போல; சில ஆரம்பப் பக்கங்களைக் கடந்தவுடன் மெதுவாக நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் செவ்வியல் நாவல்போல; தன்னுடைய காந்தவிசையால் சுற்றியுள்ள அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் எந்திரன் சிட்டி போல அரங்கின் பார்வையாளர்களுக்கும் மேடைக்குமிருந்த தூரத்தை குறைத்துக் கொண்டே சென்றது. இவ்வுரை மெதுவாக அங்கிருந்தவர்களின்; மனிதகுலத்தின் மாபெரும் தனிமையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்க ஆரம்பித்தது.
தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு எவ்வளவு முடிந்தாலும் கடத்தி விட முடிவதில்லை. மற்றவர்கள் என்ன உணர்ந்து கொண்டார்கள் என்பது அவரவர் கொண்டிருக்கும் புரிதல்களால் மட்டுப்படுத்தப்பட்டது. நாம் கேட்கப்படவேயில்லை; நமது மகிழ்ச்சியும் துக்கமும் முழுமையாக மற்றவர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதே மானுட குலத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் மாபெரும் தனிமை என்று இவ்வுரையில் சுட்டிக்காட்டினார் ஜெமோ. இத்தனிமையிலிருந்து தப்பிக்கொள்ள நடந்த பொதுமைப்படுத்துதல்களின் ஆரம்பமே மரபின் ஆரம்பம் என்று புரிந்து கொண்டேன்.
பெரும்பாலும் இப்பொதுமைப்படுத்துதல் குருதி சார்ந்த உறவாகவே ஆரம்பித்து குலம், இனம் என செல்கிறது. தன்னுடைய ‘கொற்றவை’ எனும் நாவலில் இதனைக் குறுதிச்சுற்றம் என்ற சொல்லால் ஜெமோ குறிப்பிட்டுள்ளார். இப்பொதுமைப்படுத்துதல் பெரும்பாலும் ‘தான் – பிறர்’ என்ற கட்டமைப்பைத்தான் உருவாக்கியது என்று ஜெமோ கூறினாலும் தன் குறுதிச்சுற்றத்திற்குள், தன் குலத்திற்குள், தன் இனத்திற்குள் மற்றவரையும் தானாக உணரும் ஒரு பொதுவுடைமைத்தன்மையை கொண்டிருந்ததை மறுப்பதற்கில்லை. இதனால்தான் மார்க்சியர்களும் இனக்குழு சமூகங்களை பொதுவுடைமைச் சமூகங்களாக கண்டுகொள்கிறார்கள். பெரும்பாலும் தங்கள் குழுவுக்கு வேண்டியது இருக்கும்வரை மற்ற குழுக்களிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காத சமூகமாகவும் இருக்கும் இந்த குருதி மரபு எப்போதும் அப்படியே இருப்பதில்லை. உதாரணத்திற்கு முசிறியைச் சேர்ந்த ஒரு இனக்குழு தங்கள் தேவைக்காக தஞ்சையைச் சேர்ந்த இனக்குழுவை அழித்தொழிக்க தயங்குவதில்லை. புறநானூறில் சித்தரிக்கப்படும் அனைத்து போர்ச்சித்திரங்களும் இருவேறுபட்ட குருதி மரபுகள் இடையே நடந்த இதுபோன்ற குல இனச் சண்டைகள் பற்றியதுதான்.
தன் தனிமையைப் போக்கிகொள்ள மனிதகுலம் கண்டுபிடித்த முதல்கருவியான குருதி மரபு காலாவதியாக ஆரம்பித்து அழிவுநோக்கிச் செல்ல ஆரம்பித்ததுதான் நம்மை விழுமியங்களுக்கு (values) இட்டுச்சென்றது என்று கூறிய ஜெமோ, அதை பண்பாட்டு மரபு என்று உ்ருவகிக்கிறார். இதற்கான அறைகூவல் புறநானூற்று போர்ச்சித்திரங்களுக்கிடையே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கோழி பறக்க எத்தனிப்பதுபோல எழுகிறது என்கிறார் ஜெமோ. இந்த அறைகூவல்களை விழுமியங்களாகக் கொண்டு பல இனக்குழுக்களை ஒன்றிணைத்து கட்டமைக்கப்பட்டதே பண்பாட்டு மரபு என்று புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் இந்த போருக்கான குரலும் சமாதனத்திற்கான குரலும் ஒரே நேரத்தில் எழும் இந்த முரணியக்கத்தில் மார்க்சியர்களின் பார்வை ஜெமோவின் பார்வையிலிருந்து முரண்படுகிறது. முரண்பட்டால்தானே மார்க்சியர்கள். பெரும்பாலும் வேட்டைச் சமூகமாக, அதாவது உணவை சேகரிக்கும் சமூகமாக இருந்த இனக்குழுக்களுக்கிடையே உருவான ஏற்றத்தாழ்வுதான் அவர்களிடையே சண்டையிட வைக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் உணவு சேகரிக்கும் சமூகம் உணவை உற்பத்தி செய்யும் சமூகமாக மாறிய முரணியக்கத்தின் விளைவு என்கிறது மார்க்ஸியம். கிட்டத்தட்ட இம்முரணியக்கத்தை தனியுடைமைச் சமூகங்களின் தோற்றுவாய் என்றும் பொதுவுடைமைச் சமூகங்களின் விழுமியங்களான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ போன்றவற்றை தனியுடைமைச் சமூகங்கள் தங்கள் நெருக்கடிக்குத் தீர்வாக கடன் வாங்கிக் கொண்டன என்றும் உருவகிக்கிறார்கள் மார்க்சியர்கள்.
ஆனால் குருதி சார்ந்த இனக்குழு மரபிலிருந்து பண்படாத சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிந்து கொண்டேயிருக்கின்றன என்று ஆப்பிரிக்க நாடுகளின் இனக்குழுச் சண்டைகளை சுட்டிக் காண்பித்தார் ஜெமோ. இந்திய தேசியம் என்ற ஒன்று உருவாகி வந்ததே இந்த விழுமியங்களைப் போற்றும் பண்பாட்டு மரபின் உருவாக்கத்தால்தான் என்று தன்னுடைய உரையின் முதல்பகுதியை முடித்தார். மணி சரியாக 7.30ஐத் தொட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பேச்சில் மேலும் கீழும் மூச்சு வாங்கியதில், கீழிறங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
பண்பாட்டு மரபின் உருமாற்றம்
30 நிமிட இடைவெளியில் பொங்கல், ரோல் மட்டும் வடை அடங்கிய மினி டிஃபன் சூடான தேநீரோடு வழங்கப்பட்டது. சரியாக 8 மணியளவில் மீண்டும் தொடங்கிய உரை, முதல் பகுதியை விட படுசுவாரஷ்யமாகவும் வேகமாகவும் இருந்தது. தேர் காராக மாறிய உருமாற்றத்தை பண்பாட்டு மரபின் தொடர்ச்சியான உருமாற்றங்களோடு உருவகித்திருந்தார்.
நம்முடைய பண்பாட்டு மரபுகளின் விழுமியங்களை நமக்குத் தொகுத்து தந்தவர்களில் மிக முக்கியமானவர்களாக Indologist என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் அறிஞர்களை நினைவு கூர்ந்தார். நமது பண்பாட்டின் கீழ்மைகளையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதே சமயத்தில் நிறைய அறிஞர்கள் அவற்றை திரித்துமிருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பஞ்சங்களின் நூற்றாண்டாகிய 18ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவையும் துடைத்தழித்து விட்ட காலகட்டத்தில்தான் Indologistகள் தங்கள் பண்பாட்டாய்வை தொடங்கியிருக்கிறார்கள். அழிந்துபோன நம் மரபை மீட்டெடுத்ததில் அவர்களின் பங்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜெமோ, நமது இன்றைய மரபின் கிளைகளை 18ம் நூற்றாண்டை ஒரு ஆரம்பப்புள்ளி (Reference point) யாகக் கொண்டு விவரித்தார்.
முதல் பகுதியில் நமக்குள்ளிருக்கும் நாமறியாவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய இவ்வுரை, இப்போது வாள்கொண்டு அவற்றை கூறிட்டுக் காண்பித்தது. இப்பகுதியின் முடிவில் மிகத்தெளிவாக வலதுசாரி மரபு, இடதுசாரி மரபு, இரண்டுக்கும் நடுநிலைப்பட்ட மிதவாத மரபு என நமது சிந்தனை மரபுகளை பகுத்து தொகுத்துக் கொள்ள முடிகிறது. பண்பாட்டு மரபின் அடித்தளமான விழுமியங்கள் பெரும்பாலும் மதங்களில்தான் சேமிக்கப்பட்டுள்ளன. மதம் கிட்டத்தட்ட இவ்விழுமியங்களை சடங்கு, தத்துவங்கள் வழியாக மக்களுக்குக் கடத்தும் ஒரு ஊடகம் என்றே உருவகித்திருக்கிறேன். இம்மரபு கீழ்வருமாரு கிளைத்துள்ளது என்ற சித்திரத்தை தன்னுரையில் வரைந்தார் ஜெமோ.
- மதம் சார்ந்த பண்பாட்டு மரபை கடவுளின் ஆப்த வாக்கியமாக ஏற்றுக்கொள்வது. அதை மாற்றுவதற்கு நம்மால் முடியாது என்று நம்பும் வகை. சங்கர மடங்கள், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கங்கள் இதற்கு உதாரணம். இது ஒ்ருவகையான தீவிர வலதுசாரி சிந்தனை மரபென்கலாம்.
- மதங்களை விமரிசித்து எற்றுக்கொள்ளும் ஒருவகை. விவேகானந்தர் போன்ற சிந்தனையாளர்களின் வகை. இதை மிதவாத வலதுசாரி மரபென்கலாம்.
- மரபுகளிலிருந்து தங்களுக்கு தேவையானதை மட்டும் ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட பண்பாட்டு வளர்ச்சியை நோக்கி நகரும் சமூக சீர்திருத்த வகை. ராஜா ராம் மோகன்ராய் போன்றோர்களின் வகை. இதை மிதவாத இடதுசாரி மரபென்கலாம்.
- இங்கிருக்கும் அனைத்து மரபுகளும் ஆதிக்க சக்திகளால் திரிக்கப்பட்டவை. மதம்சார்ந்த கருத்துமுதல்வாதக் கொள்கை என்பதே இந்திய சிந்தனை மரபுக்கு அந்நியமானது என்றும்;பொருள்முதல்வாதமே இங்கிருந்தது என்றும் நம்பும் மார்க்சிய வகை. ரமா பாய், எம்.என்.ராய், தேவிபிரசாத் சட்டோபாத்யா போன்றோர்களின் வகை. இதை தீவிர இடதுசாரி சிந்தனை மரபென்கலாம்.
ஆனால் கலைச்செயல்பாடுகளைப் பொறுத்தவரை, பண்பாட்டு வளர்ச்சியான காரைவிட மரபான தேர் மிக முக்கியமானது. அது ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும். கோயிலில் தேரை வடம்பிடித்து இழுக்கும்போது நமக்குக் கிடைக்கும் உணர்வு நாம் நம் மரபுகளின் கட்டமைப்புதான் என்பதை உணர்த்தும் என்றுகூறி தன் உரையை ஜெமோ முடித்திருந்தபோது மணி 9.30ஐத் தொடவிருந்தது. என்னையுமறியாமல் கைகளிரண்டும் தலைக்கு மேலெழும்பி தட்டிக் கொண்டே இருந்தன ஜெமோ பெருமிதத்தோடு மேடையை விட்டு இறங்கும் வரை. கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகியது. மனம்மட்டும் வெட்டிய சிந்தனைக்கூறுகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு ஒரு ஒழுங்கமைவை நோக்கிப் பயணித்தது.