கடற்கரையைச் சார்ந்து வாழும் நெய்தல் நிலத்தைச் சார்ந்த பரதவர்களின் (மீனவர்களின்) சிதிலமடைந்த கோயில் போலிருந்தது அந்த கற்கட்டிடமும் அதிலிருந்த சிற்பங்களும். நிறைய சதுர வடிவ அறைகளைக் கொண்டிருந்த அக்கற்கட்டிடத்தில் நீள்வட்ட வடிவில் ஒரு பெண்முகம். சாந்தமும் ஏளனமும் கலந்த கயல்விழியும், நீண்ட மூக்குமாய் நீண்டு செழுமையான மார்பகங்களோடு பாதியில் முடிவடைந்திருந்தது அச்சிற்பம். அக்காலப் பரதவர்களின் பெண் தெய்வமாக இருக்கலாம் என்று பார்வையைச் சற்று தாழ்த்தியபோது கடல்கன்னி நக்கலோடு புன்னகைத்துக் கொண்டு தனது வலது முழங்கையைத் தரையில் ஊண்டி அதன்மேல் தன் தலையைச் சாய்த்திருந்தாள். அக்கற்கட்டிடத்தின் ஒரு சதுர வடிவ அறையில் பார்த்த பெண் சிற்பத்தின் தொடர்ச்சி போலவே இருந்தாள் இக்கடல்கன்னி. கூடுதலாக கொடியிடையும், அதைத்தொடர்ந்து விரியும் மீனின் உடம்பும், குறுகிய வால்ப்பகுதியும் கடல்கன்னிதான் இவள் என நம்ப வைத்தது.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி விதிப்படி முதல் உயிரினம் தண்ணீரிலிருந்துதான் தோன்றியது என்பார்கள். இப்பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகக் கூட இக்கடல் கன்னியின் சிற்பம் இருக்கலாம். மரபார்ந்த இதுபோன்ற கலைவெளிப்பாடுகள் ஏதோ ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடுதான். இச்சிற்பங்களுக்கு முன்னால் நாம் நிற்கும்போது நம் மனிதகுல மரபுகளுக்கு முன்னால் நிற்கிறோம் என்பதே ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவம். காலத்தின் கண்ணாடி போன்றவை இச்சிற்பங்கள். பகுத்தறிவென்றாலே மரபுகளுக்கு எதிரான ஒன்றாக நாம் எண்ணிக்கொள்ளும்போது இதுபோன்ற சிற்பங்கள் அளிக்கும் உளச்சித்திரத்தை நாம் இழந்து விடுகிறோம். பகுத்தறிவென்பது நாம் நம்புவதைப்போல மரபுகளை உதாசீனப்படுத்துவதல்ல, அதை ஆராய்ந்து புரிந்து கொண்டு, முன்னகர்வதுதான் என்று எண்ணிக்கொண்டே சற்று திரும்பியபோது, அருண்&Co சற்று தூரத்தில் அடர்ந்த மரங்கள் வெளியிட்ட ஆக்ஸிஜனை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள், சிகரெட் புகையின் வழியாக. இருந்தாலும் அம்மரங்கள் அப்புகையை உறிந்து அவ்விடத்தை சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தது.
அதுவரை கத்தி வறண்டு போயிருந்த மதன், விஜி மற்றும் சிவாவின் தொண்டைகளுக்கு சற்று ஓய்வு கொடுப்பதற்காக விடப்பட்டிருந்த இடைவெளியில்தான், நிகழ்வு நடந்த உள்ளரங்கிலிருந்து சற்றுதொலைவில் கடற்கரைக்கு அருகாமையில் இ்ருந்த கடல் கன்னி மேல் மையல் கொள்ள நேர்ந்தது.
ராயல் கார்டன்
மூளையை உருகவைக்கும் வேலைப்பளு; உடலை உருக்கியெடுக்கும் வெயில்; புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் C&R; கூடவே Ourview survey வேறு. வேறு வழியில்லை ஜெரோமுக்கு. ஒட்டுமொத்த அணியும் (30 பேர் இருக்கலாம்) அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு கனவுச் சாலையான கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரை விடுதி ஒன்றில் காலையிலி்ருந்து மாலை வரை தஞ்சமடையலாம் என்று VGPல் கூடியிருந்தோம். வழக்கம்போல் பாலா&Coவின் இடத்தேர்வு அற்புதம்.
வருவாரா? வரமாட்டாரா? என்று கடைசி நிமிடம் வரை பரபரக்க வைத்த C&R தலை ரவி சொல்லிவைத்த நேரத்தில் தன்னுடைய வாகனத்தில் என்னை இழுத்துப்போட்டுக்கொண்டு வார நாட்களின் வாகனச்சிடுக்குகளை (traffic) அருமையாக கடந்து VGPன் மிக அகலமான நுழைவு வாயிலை அடைந்தபோது மணி பத்தைத்தொட 5 நிமிடங்கள் இருந்தது. எந்தவித ஆராவாரமுமற்று அமைதியாக இருந்த அந்த விடுதியின் பசுமையில் கண்களை நனைத்துக் கொண்டே எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘Royal Garden’ஐ அடைந்தபோது வெயில் சற்று குறைந்தது போலிருந்தது. குறைவான கட்டிடங்களும், நிறைந்த பசுமையும் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே சாந்தா&Co தங்களுக்கு இடப்பட்டிருந்த பணியை செவ்வனே நிறைவேற்றியிருந்தார்கள். அவர்கள் கையிலிருந்த உயர்தர நொறுக்கும் சரக்கும் நிறைய கவிஞர்கள் மற்றும் பாடகர்களுக்கான எரிபொருள்.
வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து சற்று தொலைவிலிருந்த மேடான பகுதியிலுள்ள குடிலில் எங்கள் கூடுகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. நெடுநெடுவென வளர்ந்த இரு இளையவர்கள் கருத்து மெலிந்த தேகத்தோடு செய்வதறியாமல் முழித்து எங்களை வரவேற்றார்கள். எங்களுக்காக அமர்த்தப்பட்டிருந்த சிப்பந்திகள் அவ்விருவரும். இதுபோன்ற கடற்கரையோரமுள்ள பெரும் தங்கும் விடுதிகளில் தோன்றும் இவ்விளையவர்களின் முகத்திலிருக்கும் மிரட்சியும், சோகம் கலந்த புன்னகையும் மனதை எப்போதும் நெருடுபவை. அவர்களால் தரப்பட்ட எலுமிச்சைச்சாறு கலந்த சர்க்கரை நீரை பருகியபடி மீண்டும் அவ்வட்ட வடிவ குடிலைச் சுற்றியிருந்த பசுமையில் மூழ்கியிருந்தபோது ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். 9.45க்கெல்லாம் தொடங்கவேண்டிய நிகழ்வு 30 நிமிட தாமதமாகியும் தொடங்காதது கண்டு, இரு ஜீவன்கள் அந்த வெயிலைத் துணிந்து கடற்கரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.
அடுத்த 30 அல்லது 40 நிமிடங்களில், குடில் நிறைந்திருந்தது. கூம்பு வடிவ மேற்கூரை, பக்கவாட்டு மூங்கில் சுவரிலிருந்து மிக உயரத்திலேயே முடிந்திருந்தது. சுற்றியிருந்த பசும்புல்வெளி தண்ணீரால் அங்கிருந்த வேலையாட்களால் நனைக்கப்பட்டுக் கொண்டே இருந்ததில் குடிலின் வெம்மை சற்று தணிந்திருந்தது. வட்ட வடிவில் சுற்றி அமர்ந்திருந்த அனைவரின் கைகளிலும் எலுமிச்சைச்சாறு. நடுநாயகமாக நின்றிருந்தார் ஜெரோம். ‘’அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆச..” என அவதார நாசர் அங்கிருந்த Bose ஒலிப்பெருக்கி வழியாக கசிந்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு தன் அரிதாரமற்ற உரையை ஆரம்பித்தார். நிறுவனத்தின் சமீபத்திய சாதனைகளை சுட்டிக்காட்டி விட்டு தன்னுடைய ‘Power Talk’ஐ சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதைவிட சிற்றுரையை விசுவும், ரவியும் முடித்தவுடன் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களான மதன், விஜி மற்றும் சிவா பரபரப்பானார்கள். மூவரின் தொண்டைக்கும் விடப்பட்ட கடுஞ்சவால்தான் அடுத்து வந்த அனைத்து நிகழ்வுகளும். ஆனால் கூடியவிரைவில் ஒட்டுமொத்த கூட்டத்தையும் கையிலெடுத்துக் கொள்ளும் கலையை கற்றுத்தேர்வார்கள் என்றே தோன்றுகிறது.
ஒன்று கலத்தல்
பாம்புபோன்ற வரிசையில் அங்கிருந்தவர்களை நிறுத்தினார்கள். பாம்பின் தலையும், பாதி உடம்பும் குடிலுக்கு வெளியே நீண்டிருந்தது. வால் பகுதியில் கடைசியாக நிற்பவரிடம் சைகயால் உணர்த்தப்படும் ஒன்றை சைகையின் வழியாக தலைப்பகுதியின் முன்னால் இருப்பவருக்கு கடத்த வேண்டும். பின்னாலிருப்பவரால் தொடப்படும்போது மட்டுமே திரும்பி அவர் சைகையில் நமக்கு உணர்த்துவதை பார்க்கமுடியும். அதை முன்னாலிருப்பவரைத் தொட்டுத் திருப்பி, அவருக்கு கடத்தவேண்டும். ஒரே கூச்சலும் சிரிப்புமாக, வால்பகுதியில் இருசக்கர வாகனத்தைச் சுட்டிய சைகை தலைப்பகுதியை அடையும்போது துப்பாக்கியாக மாறியிருந்தது. இது அங்கிருந்த இறுக்கத்தை முற்றிலும் கலைத்து அனைவரையும் இலகுவாக்கியிருந்தது. அதே சமயத்தில் மொழியின் அவசியத்தையும் இந்நிகழ்வு உணர்த்தியது. Bike அல்லது இருசக்கர வாகனம் என அனைவருக்கும் பரிட்சயமான வார்த்தை வழி இதை நம்மால் எளிதில் கடத்தியிருக்க முடியும். ஆனால் சைகை மொழி அங்கிருந்தவர்களுக்கு அவ்வளவு பரிட்சயமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் புரிதலுக்கேற்ப சைகைகளைப் புரிந்து கொண்டார்கள். விளைவு இருசக்கர வாகனம் துப்பாக்கியாக மாறியது. தனக்குத் தெரிந்தவற்றை மற்றவருக்கு தெரிந்த ஒன்றின் வழியாக மட்டுமே கடத்தமுடியும் என்பதே தொடர்பு கொள்ளலின் முதன்மையான விதி. மொழி மனித இனம் தன் தனிமையை விரட்டிக்கொள்ள கண்டுபிடித்த மிக முக்கியமான கருவி.
வெயில் அங்கிருந்த பெண்களின் அரிதாரத்தை மெல்ல உரிக்க ஆரம்பித்திருந்தது. நல்லவேளையாக குளிரூட்டியுள்ள ஒரு உள்ளரங்கு அடுத்து வரும் நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்டது. அங்கிருந்த அனைவரும் மூன்று அணியினராக பிரிக்கப்பட்டு குதிரையின் லாடவடிவில் அமர வைக்கப்பட்டோம். பலூன் ஊதல், பெரிய நிறுவனங்களின் சின்னங்களிலிருந்து (logo) அவற்றை அடையாளம் காண்பது, மாறி மாறி கொடுக்கப்படும் எண்களுக்கேற்ப குழுவாக மாறுவது என சுவாரஸ்யமூட்டும் நிகழ்வுகளில் அனைவரும் களைத்திருந்தோம். அடைக்கப்பட்டது போன்ற உணர்வு வெளிக்காற்றைத் தேடி எங்களை அவ்வரங்கை விட்டு வெளியே தள்ளியது. 15 நிமிட இடைவெளிக்குப் பிறகு அங்கிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஆமை ஓட்டைப் போர்த்தியது போலிருந்த ஒரு சிறு கட்டிடத்தில் கூடுவதாக திட்டம்.
பொங்கி வழிதல்
கிடைத்த இடைவெளியில் கடல்கன்னியின் சிற்பங்களில் சிறிது ஆழ்ந்து விட்டு, அங்கிருந்த பசுமையையும், அதைக்காக்கும் அடர் மரங்களையும் கடந்து ஆமைக்கட்டிடம் இருக்கும் அந்த பரந்த புல்வெளியை அடைந்தோம். அப்பரந்த புல்வெளியின் ஓரத்தில் வட்டவடிவத்தில் அமைந்த கான்கிரீட் தளத்திலிருந்து 5 அல்லது 6 அடி உயரத்தில் எழும்பியிருந்த தூண்களின் மேல் ஆமையின் ஓட்டை கவிழ்த்தியது போலிருந்தது கூரை. அதன் கீழிருந்த ஒவ்வொருவர் பேசியது்ம் ஆற்றல் கூட்டப்பட்ட பிசிறில்லாத ஒலியாக காதில் விழுந்தது. என்ன விதமான ஒலி வடிவமைப்பு என்று புரியவில்லை, இந்த சுவர்களற்ற ஆமைஓடு கட்டிடத்திற்கு. அப்பரந்த புல்வெளியும், இக்கட்டிடமும் ஒன்றிணைந்து கிரிக்கெட் மைதானங்களின் பெவிலியனை நினைவுபடுத்தியது.
வட்டமாய் அமர்ந்து கும்மியடிப்பதற்கான அத்தனை வஸ்துகளும் அங்கு நிரம்பியிருந்தது. பொங்கியெழும் பியரிலிருந்து, அமைதியான வோட்காவரை: வருத்த முந்திரியிலிருந்து பொறித்த கோழிவரை என.இவ்வஸ்துகள் பல பாடகர்களையும் கவிஞர்களையும் வெளிக்கொண்டு வந்தன.
//அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே, நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே…// என்ற அருணின் பாடல்
//கற்களின்றி சிற்பம் ஒன்று கண்டபோது.
முட்களின்றி நேரம் ஓடும் கண்டுகொண்டேன்.
…// என்ற ஶ்ரீநாத்தின் கவிதை மற்றும் //பனிவிழும் மலர்வனம்…// என்ற பாடல்
“இல்லை உங்கள் பாடல்களிலும் கவிதையிலும் பிழை உள்ளது…” என வோட்காவின் துணை கொண்டு தருமியாய் உறுமிய சாந்தாவின் நாணல் பற்றிய கவிதை என அவ்விடம் களைகட்டியிருந்தது.
கையில் நுரைததும்ப நிரம்பியிருந்த கண்ணாடிக் கோப்பை காலியானதே தெரியாமல், மீண்டும் நிரப்பிக்கொண்டபோதுதான் புரிந்தது அத்தனை கவிதைகளும் பெண்களைப் பற்றியதாகவே இ்ருந்தது. கவிஞர்களுக்கான வஸ்து பெண்கள்தான் என்று நினைத்தபோது சற்றுமுன் தரிசித்த கடல்கன்னியின் சிற்பம் நினைவுக்கு வந்து சிற்பிகளையும் கவிஞர்களோடு ஒப்பிடவைத்தது. இவர்களிருவரும் பெண்களின் மேல்கொள்ளும் பற்று ஒரு தெய்வீக நிலைக்கு இவர்களை இட்டுச்செல்கிறது போலும். இதன் வெளிப்பாடுதான் பெரும்பாலான பெண் தெய்வங்களின் சிற்பங்கள் பிசிறற்றவையாக, ஒரு முழுமையான வடிவை அடைகின்ற எனலாம். ஆனால், ஆணால் வடிக்கப்படும் ஆண் தெய்வங்களின் சிற்பங்களில் இம்முழுமையை காணமுடிவதில்லை. ஒருவேலை பெண் சிற்பிகளால் இந்த ஆண்தெய்வங்களுக்கு அந்த முழுமையை கொடுத்திருக்க முடியும். தான் வடிக்கும் சிற்ப உடலின் மேல் இருக்கும் ஈர்ப்புதான் இதற்கெல்லாம் காரணமா? ஆனால், கிரேக்க சிற்பமான ஹெர்குலிஸின் கைகளில் உள்ள புடைத்த நரம்புகள் ஆண் சிற்பிகளாலும் முழுமையைக் கொண்டு வரமுடியுமென்று நிரூபிக்கின்றன. ஒருவேளை அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாம் என்று எண்ணினாலும், உடல்மேல் கொள்ளும் ஈர்ப்பையும் தாண்டி ஏதோ ஒன்றுதான் இக்கலைஞர்களை முழுமையான ஒன்றை நோக்கி இயக்குகிறதென்று எண்ணிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்ததும் சற்று கால் தடுமாறியது. போதும் நிறுத்து சரக்கை என்பதற்காக உடம்பு தரும் முதல் சமிஞ்கை. எப்போதும் அதை நான் தவறவிடுவதில்லை. ஆனால் அதை தவறவிட்டு சலம்புவதுதான் மஜாவே…
உண்டு மயங்குதல்
மீண்டும் காலையில் குழுமியிருந்த குடிலை நோக்கி கால்கள் பின்ன ஒரு நீண்ட நடை. வெயிலும் சரக்கும் எப்போதுமே பொருந்தாத ஜோடிகள். ஒன்று மயங்க வைக்கும் என்றால், இன்னொன்று தெளிய வைக்கும். மதியநேர வெயில், பசுமையிலும் பியரிலும் மயங்கிருந்தவர்களை தெளிய வைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் நாங்கள் சளைத்தவர்களல்ல என சிலர் மயங்கிக்கொண்டே இருந்தார்கள்.
வழக்கம்போல் பிரியாணியும் சிலபல அடர் சிவப்பு நிற பொரித்தவைகளும் ஒன்றுக்கு பக்கத்தில் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்து அக்குடிலில் . பிரமாண்டமான அறுசுவை உணவு இல்லையென்றாலும், பசிக்கு இதமாக இருந்தது. சிறுதட்டில் அங்கிருந்தவைகளை அடுக்கியெடுத்து உண்ண ஆரம்பித்தவுடனேயே தட்டு காலியாயிருந்தது. சரக்கும் பசியும் எப்போதுமே ஒன்றையொன்று தழுவிக் கொள்பவை. மணி மதியம் 3ஐத் தொட்டிருந்தது. இன்னமும் பந்தி முடிந்த பாடில்லை. ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தார்கள். ஒருசிலர் உண்ட மயக்கத்தில் கண்களை மூடிக் கொண்டு அசைபோட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சிப்பந்திகளை சாப்பிட அனுப்பிவிட்டு குடிலில் அமர்ந்திருந்த அனைவரின் தியானத்தையும் மீண்டும் கலைத்தார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.
மறுபடியும் பாட்டும் கவிதையுமாய் சென்று கொண்டிருந்த நிகழ்வை வேட்டையாடு விளையாடு ராகவன் குரலில் சுவாரஸ்யமாக்கினார் கதிர். தெனாலி கமலின் குரலும் மிக இயல்பாக வந்தது அவருக்கு. பயம் பயமென்று பலவகைப் பயங்களோடு நீண்ட அந்த மிமிக்ரியில் ‘இராணுவம் செல்லடித்து(வெடிகுண்டு போடுதல்) விடுமோ என்ற பயம்…செல்லுக்கு பயந்து பதுங்குழியில் பதுங்க பயம்…’ என்ற வரி தெனாலி படத்தில் கமல் ஒரு இலங்கைத் தமிழர் என்பதை நினைவுபடுத்தியது. வானத்தில் வேகமாக சீறிச் செல்லும் விமானத்திலிருந்து கீழே எறியப்படும் குட்டி விமானம் போன்ற வெடிகுண்டு, அதை அண்ணாந்து பார்க்கும் ஒரு சிறுவனுக்கு பெரிய மீனின் வயிற்றிலிருந்து விழும் குட்டி மீன்போல பரவசமூட்டியிருக்கும். ஆனால் அது விழுந்த இடத்திலிருந்த கட்டிடங்களும் அதில் வசிக்கும் அவனது உறவுகளும் வெடித்துச் சிதறி உருகி இல்லாமல் போனவுடன் கணநொடியில் வாழ்க்கை மேல் கொண்டிருந்த அத்தனை பரவசமும் பயமாய் உருமாறி விடுகிறது. போர் குழந்தைகளிடம் உருவாக்கும் உளவியல் சிதைவு அவர்கள் மீண்டுமொருமுறை உண்மையாகவே இறந்து போகும்வரை தொடரக்கூடியது. இதை உணர்ந்தவர்கள் “போர்…போர்….” என்ற வெட்டி முழக்கத்தை தேசபக்தியாக எடுத்துக் கொள்வதில்லை. அதைத் தொடர்ந்து வழக்கம்போல் அருண் குழுவின் புது நபர்(ரி)களை தன் பேச்சுத்திறமையால் கவர முயன்று கொண்டிருந்தார்.
என் முதுகைத் தொட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த ரவி 4.15க்கு கிளம்பினால்தான் ECRன் வாகனச்சிடுக்கை தவிர்க்க முடியுமென்றார். கிட்டத்தட்ட அனைவருமே கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அலுப்புகளை களைந்து உற்சாகமூட்டிய நாள். இதைச் சாத்தியப்படுத்தியவர்களின் உழைப்பும் மெனக்கெடலும் போற்றுதலுக்குரியது. சில இரட்சகர்கள் முற்றிலும் நிலை தடுமாறியிருந்தவர்களை காத்து வீட்டிலிறக்கியதாக சேதி. ரவியின் வாகனம் என்னை உதிர்த்து விட்டு போனபோது முழு மாலையாயிருந்தது. ஒரு பாலில்லா தேநீரே அப்போதைய தேவையாக இ்ருந்தது. கடல்கன்னியெல்லாம் எங்கோ ஆழத்திற்கு போயிருந்தாள்.