கைவிடப்பட்டவர்களின் புகலிடமாய் மாறியிருந்த அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் பிரவேசிக்கிறார்கள் தேவாவும் ப்ரியாவும். பரந்து விரிந்திருந்த அந்த கட்டிடத்தின் தரைப்பகுதியெங்கும் புதர்மண்டி ஆங்காங்கே சிதிலமடைந்து போயிருந்த திண்டுகளால் நிரம்பியிருந்தது. அக்கட்டிடத்துக்கு கூரையென்ற ஒன்று இருந்ததற்கான தடயம் ஏதுமில்லை என்பதை உணர்ந்தவுடன்தான் புரிந்தது அது கட்டிடம் அல்ல, சுற்றுச்சுவர் மட்டுமே கொண்ட கைவிடப்பட்ட மிகப்பரந்த நிலப்பகுதி என்று. சாலையிலிருந்து ஆறேழு அடி கீழே இருந்த இந்நிலப்பகுதியின் இருளை விலக்கியிருந்தது அன்றைய முழுநிலவு.
பௌர்ணமி இ்ரவைத்தவிர வேறு இரவுகளில் அங்கு வெளிச்சத்திற்கான வாய்ப்பே இல்லை. கைவிடப்பட்ட பூங்காவாக இருக்கலாம். இல்லை அவசியமான இடுகாடாகவும் இருக்கலாம். இதுதான் இப்பகுதி என்று வரையறுக்க வேண்டிய தேவையேதுமற்ற கால் கை இழந்தவர்களும், முற்றிப்போன தோல் வியாதி உடையவர்களும், எய்ட்ஸ் நோயாளிகளும் மற்றும் சில கைவிடப்பட்டவர்களுமாய் நிறைந்திருந்தது அந்த கைவிடப்பட்ட பகுதி. இவர்களையெல்லாம் மிக எளிதாக கடந்து செல்லும் தேவாவைப்போல், ப்ரியாவால் எளிதில் கடக்க முடியவில்லை. ஒரு விலக்கத்தோடே அவர்களை கடப்பவருக்கு சமூகசேவை என்பது அவ்வளவு எளிதல்ல என்பது புரிய ஆரம்பித்திருக்கலாம். ஆனால் உண்மையிலேயே ப்ரியா அங்கு வந்ததற்கான காரணம் தன்னை எப்போதுமே இலகுவாக உணரவைக்கும் தேவாவின் வெடிச்சிரிப்புகளுக்காகத்தான். அங்கிருந்தவர்களின் நிலைமையை ஒரு மெல்லிய சோகம் கலந்த சிரிப்போடு தேவா விவரிக்கும் விதம் நம்மையும் ப்ரியாவையும் அக்காட்சி தரும் மனச்சோர்விலிருந்து தப்ப வைக்கிறது.
வெண்ணிற முழுநிலவின் ஒளியை கடன் வாங்கி அப்படியே பிரதிபலித்துக் கொண்டிருந்தது தேவாவின் முழுக்கை பூட்டப்பட்டிருந்த சட்டை. அங்கிருந்த கரும்பசுமையின் பின்புலத்தில், ப்ரியாவின் முழங்காலைத் தொட முயற்சித்திருந்த இளம்பச்சைநிற மேலாடை பளிச்சென்றிருந்தது. அங்கும்கூட இந்திரா காந்தியின் ஒரு சிலை. அதற்கடியிலிருந்த பீடத்தில் அமர்ந்தவாரே இந்திரா காந்திக்கு செய்யமுடியாத சிகையலங்காரங்களை ப்ரியாவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தார் சிகையலங்கார நிபுணரான தேவா. தலைமுடியை வருடும்போது எழும் ஒரு பாதுகாப்பு உணர்வுக்கு இணையே கிடையாது. வருடுபவர் கூறுவதற்கெல்லாம் தலையசைக்கச் சொல்லும் ஒரு மோன நிலையது. இதைப் பயன்படுத்தி சேவையின் மீதும் கடவுள் மீதும் தான் தீவிரப்பற்று கொண்டுள்ளதாக நினைத்திருக்கும் ப்ரியாவின் மனதை லௌகீகத்திற்கு மாற்றமுயன்று தோற்கிறார் தேவா. உண்மையிலேயே தோற்காததுபோல் நான் நடிக்கிறேன் என்பதை உள்ளூர உணர்ந்தவராகவே இருக்கிறார் ப்ரியா.
நேரம் கடந்து கொண்டே இருக்கிறது. திட்டப்படி அங்கிருந்த இருட்டு மனிதர்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்துவரும் தாமஸ் இன்னும் அங்கு வந்து சேரவில்லை. தாமஸ் எப்படியாவது, ப்ரியா மேல் தான் கொண்டிருக்கும் காதலை அவளுக்கு உணர்த்த தேவாவின் உதவியை நாடியிருந்தார். இங்கு நடக்கும் ஒட்டுமொத்த காட்சியும் நாடகம்போல் இதற்காகத்தான் மெல்ல கண்க்குபோட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சாட்சியான முழுநிலவின் கணக்கு வேறாயிருந்தது.
இந்திராவின் சிலையருகே இருந்த ப்ரியாவை விட்டு சற்று விலகியிருந்த தேவா, ஒரு சிறு மௌனமான நேரத்திற்குப்பிறகு முழுநிலவின் துணை கொண்டு மீண்டும் அவளை நெருங்கிச் செல்கிறார் ‘வெண்ணிலவே…’ என்று பாடிக்கொண்டே. பாட்டின் தாளத்தில் அங்கு ஒரு மெல்லிய நடனம் தேவாவின் நளினமான உடலசைவில் உருவாகி அங்கிருந்த இருட்டு மனிதர்களின் உடலசைவின் வழியாக கடலலைபோல் பிரியாவின் உடலையும் அசைய வைக்கிறது. இசை, நிலவொளி. நடனம் என மூன்றும் முயங்கியதில் தன்னிச்சையாக தேவாவின் தோள்மேலே தன் தலை சாய்க்கிறார் பிரியா. திடுக்கிட்ட தேவா,
//தலை சாயாதே விழி மூடாதே…
சில மொட்டுக்கள் சற்றென்று பூவாகும்…//
என அவள் கிரங்குவதைத் தடுத்து இருவரும் சட்டென்று விலகி குழம்பித் தவித்துக் கொண்டே பாடலையும் நடனத்தையும் தொடர்கிறார்கள். இசை, நிலவொளி மற்றும் நடனத்தோடு குழப்பமும் சேர்ந்து இருவரையும் பேருறு கொண்டு சீறிப்பாய்ந்து ஆட வைக்கிறது, குழப்பதிற்கான விடை தேடி.
ஆட..ஆட..இருவரின் அகத்தை சுற்றியிருந்த அனைத்துப் புறங்களையும் கரைத்து இல்லாமலாக்கி
// நான் உலகை ரசிக்க வேண்டும் தான்…
உன் போன்ற பெண்ணோடு…//
என்று அந்த நடனம் இருவரையும் மீண்டும் இணைத்துக் கொண்டு அவர்களை குழப்பத்தில் இருந்து விடுவிக்கிறது.
கடவுளைத் தேடிய ப்ரியா தன் காதலைக் கண்டுகொள்கிறாள். பெண்களைப் புரிந்து வைத்திருந்த தேவா தன்னைப் புரிந்து கொள்கிறான்.
இருவரும் ஒருவரின் கை விரல்களை ஒருவர் கோர்த்துக் கொண்டு அலையடங்கி கரை சேர்வது போல மெதுவாக நடனத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள். தாமஸ் புன்னகையோடு அங்கு வந்து அங்கிருந்த கைவிடப்பட்டவர்ளில் ஒருவராக நிற்கிறான் கைவிடப்பட்டு.

[…] https://muthusitharal.com/2019/03/28/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%… […]
LikeLike