
மடிப்புக் கலையாத சேலையுடன், கருத்த இடுப்பின் இரு மடிப்புகள் மினுக்க காரிலிருந்து இறங்குகிறாள் மாணிக்கம். முகத்தில் அப்பியிருந்த சாந்தையும், உதட்டிலிருந்த சாயத்தையும் தாண்டி மாணிக்கத்தின் கருமை அடர்த்தியாய் இருந்தது. அவளின் மூக்கைத் துளைத்திருந்த வளையமும், தலையில் போர்த்தியிருந்த சுருள்கேசமும், கண்களில் தெரிந்த நாணமும், ஒட்டுமொத்த முகத்திலிருந்த பொலிவும், அளந்து எடுத்து வைக்கப்பட்ட தப்படிகளும் என்னிடமும் பெண்மையிருக்கிறது, இதுதான் என் இயல்பு என்பதை வாய் திறக்காமலேயே இவ்வுலகத்திற்கு உரக்கச் சொல்வதாய் இருக்கிறது. இதை சாத்தியப்படுத்தி இருப்பது விஜய் சேதுபதியின் அசாத்தியமான உடல்மொழி.

ஏற்கனவே சமந்தாவின் குற்றவுணர்ச்சியில் விளைந்த உடலுறவும், அதைத் தொடர்ந்த அவரது காதலன் மரணம்; தன்னுடைய அம்மாவை நீலப்படத்தில் அடையாளம் கண்டுகொண்டு அவளைக் கொல்லத்துடிக்கும் மகன்; கிறிஸ்துவைத் தெரியாமல், கிறிஸ்துவத்தில் மாட்டிக்கொண்ட அம்மகனின் தந்தை என காட்சிக்குக் காட்சி நம்மை அசரடித்த தியாகராஜன் குமாரராஜாவின் இப்படத்தில் நம்மை முழுமையாக கட்டிப்போடுவது விஜய்சேதுபதியின் நளினம் தான். தன்னுடைய எல்லைகளை மிக அநாசயமாக படத்திற்கு படம் விரித்து பரிணமித்துக் கொண்டே போகிறான் இப்புது உலகநாயகன்.
பாலியல் வறட்சி
விலங்குகளின் காமம், பசியுணர்வு போன்றவை ஒரு கட்டுக்குள் இருப்பதாகவே அறிவியல் சொல்கிறது. சிங்கம் பசியற்று இருக்கும் நேரத்தில் மான் அதன் நண்பனே என்பது போன்ற விலங்கின விதிகள் தேமே என்று நின்றிருக்கும் ஒரு ஆணின் முன் நயன்தாரா நிர்வாணமாய் வந்து நின்றால் செல்லுபடியாவதில்லை அல்லது தொழில்படுவதில்லை. பசியும் காமமும் மனிதனுள் செயற்கையாக தூண்டப்படவும் முடியும். இத்தூண்டலால் ஏற்படும் கட்டற்ற காமம் அல்லது பாலுணர்வால் பெரிதும் பாதிக்கப்படும் மனித சமூகங்களை காப்பதற்காக சில ஒழுக்க நெறிகள் வகுக்கப்பட்டு, காலப்போக்கில் சாதி, குலப்பெருமை போன்றவற்றால் அவை மனித சமூகத்தை இறுக்க ஆரம்பிக்கின்றன. இதன் விளைவுதான் இன்று நம்மிடமிருக்கும் பாலியல் வறட்சிக்கான காரணம். பெரும்பாலும் இது போன்ற கழுத்தை நெறிக்கும் கட்டுப்பாடுகள் எளியவர்களான பெண்கள் அல்லது வறியவர்களான நடுத்தர சமூகங்களின் மீதுதான் திணிக்கப்படுகின்றன.

இதனால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் வழியாக ஒரு தேர்ந்த நாவல்போல இப்படம் நம் கண்முன் விரிகிறது. ஆண்களின் பாலியல் வறட்சி மீறப்படும்போது கண்டு கொள்ளாத சமூகம் பெண்களின் பாலியல் வறட்சியை கற்பு என்ற கிரீடத்தைக் கொண்டு அடைகாக்க முயல்கிறது. சமந்தா இதை மீறும்போது துரதிர்ஷ்டவசமாக அவரது முன்னால் அல்லது அவரால் கைவிடப்பட்ட காதலன் இறந்து போகிறார். படத்தின் முதல் காட்சியே இதுதான். பாலியல் ஒழுக்க நெறிகள் தளர்த்தப்பட்ட மேற்கத்திய சமூகங்களில் இப்படத்தை இதற்குமேல் எடுத்துச் செல்ல முடியாது. அச்சமூகத்தின் சமந்தா உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்து நடந்ததை விளக்கியிருப்பார். விசாரணைக்குப் பிறகு அந்த காதலனின் மரணம் இயற்கையானது என்று நிரூபணமாயிருக்கும். தன் கணவர் ஃபாசிலுக்கு தன் கையறு நிலையை புரியவைத்து அவர் கூடவே இருந்திருப்பார் அல்லது விவாகரத்து பெற்றிருப்பார். சுபம் போட்டு வந்த வேகத்திலேயே நம்மை கிளம்பு…கிளம்பு என்றிருப்பார்கள்.
இந்தியச் சமூகம்
ஆனால், இவையிரண்டையும் சமந்தாவால் இங்கு பண்ண முடியவில்லை. காரணம், எல்லாவற்றையும்விட இன்னமும் நாம் உயர்வாக நினைப்பது சமூக நற்பெயரே. இது ஒரு உயர்வான இலட்சியம்தான். ஆனால் நமக்கும் இந்த சமூகத்திற்கும் இடையில் தொடர்ந்து நடக்கும் இந்த முரண்பாடுதான் நமது துன்பங்களுக்கான ஊற்றுக்கண் என்பதை மிகத்தெளிவாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். காலத்திற்கேற்ப மாறும் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒழுக்க நெறிகள்தான் இந்த முரண்பாட்டை கலைய முடியும் என்பதைத்தான் இப்படம் தீர்வாக முன்வைக்கிறது. கணந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகில் நிரந்தரமான உண்மையென்று எதுவுமில்லை என்பதே இப்படத்தின் தத்துவச்சாரமும் கூட.
ஃபாசிலிடம் மறைக்க நினைத்து குளிரூட்டப்பெட்டியில் கேள்விக்குறிபோல் மடக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த காதலனின் பிணத்தை ஃபாசில் கண்டுகொண்ட பிறகே “நான் இவங்கோட மேட்டர் பண்ணிட்டு இருந்தப்ப செத்துப் போயிட்டான்..” என்று ஃபாசிலை நிலைகுலைய வைக்கிறார் சமந்தா. பின்னர் இருவரும் சேர்ந்து அப்பிணத்தை மறைக்க முயன்று அடுத்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விருப்பமின்றி உடலுறவு கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு மயிரிழையில் தப்பிக்கிறார் சமந்தா. எல்லாம் ஃபாசிலின் போலி சமூக மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான்.
தனியுடைமையின் அவலங்கள்
இதிலுள்ள முரண் என்னவென்றால் இச்சமூகத்தின் மீது, குறிப்பாக அதன் கூட்டுச் செயல்பாட்டின் மீது ஒரு பயமும் வெறுப்பும் கொண்டவராக சித்தரிக்கப்படும் ஃபாசில் அச்சமூகத்தின் மரியாதையை வேண்டுபவராகவும் இருப்பதுதான். “மனுசன் தனித்தனியா இருந்து நிறைய கண்டு பிடிக்கிறான்..ஆனால் கூட்டமா சேர்ந்து பஸ்ச எரிக்கிற மாப் மெண்டாலிட்டிலதான் இருக்கிறான்..” என்ற வசனம் தனியுடைமைச் சமூகத்தில் திளைத்திருக்கும் ஆணவத்தில் எழுவது. அந்த ஒவ்வொரு தனி மனிதர்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் ஒரு குழுவின் உழைப்பும் உள்ளது என்பதை அறியவோ அங்கீகரிக்கவோ முடியாத சுயம் சார்ந்து மட்டுமே சிந்திக்கும் தனியுடைமை சமூகத்தினுடைய அவலநிலையைத்தான் ஃபாசில் பிரதிபலிக்கிறார். “நாடுன்னா பற்று…சாதின்னா வெறியா…” என்று அவர் பேசும் வசனங்களும், சுயம் சார்ந்து மட்டுமே சிந்திக்கும் ஒரு கீழ்மையான நிலையில்தான் ஃபாசில் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் மகனின் மருத்துவச் செலவுக்கு வழியில்லாமல் அங்கிருக்கும் ஒவ்வொருவரையும் நோக்கி “ஆளுக்கு ஒரு 100 ரூபா கொடுக்க மாட்டீங்களா…நான்னா எங்கிட்ட இருக்கிற எல்லாத்தயும் கொடுப்பேன்..” என்று கதறி நம்மை கலங்கடிக்கும் நீலப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணனும் தனியுடைமைச் சமூகத்தின் ஆணவத்தால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்தான். இதையெல்லாம் தோளுயர்த்தி கைவிரித்து “Survival of the Fittest” மா என்று எளிதாகக் கடக்கத்தான் நமக்கு இந்த தனியுடைமை கற்றுக் கொடுத்திருக்கிறது.
ஆண்டவரே ஆண்டவரே
“ உன்னை நம்ப மறுக்கும் என்னிலுள்ள சாத்தானை…மன்னியுமய்யா…மன்னியுமய்யா..” என அற்புதப்படுத்தியிருக்கிறார் அற்புதமாய் வரும் மிஷ்கின். கடவுள் மேல் குருட்டுத்தனமாய் நம்பிக்கை கொண்டு தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சிதைத்துக் கொண்டிருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களின் பிரதிநிதி இவர். கஷ்டகாலங்களில் நமக்கு உதவுபவர்களிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று விரும்பும் நேர்மையான மனிதர்கள் மிக எளிதாக மதவாத சக்திகளால் மூளைசலவைச் செய்யப்பட்டு மடை மாற்றப்படுவதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

தன் மனைவி ரம்யா கிருஷ்ணன் ஒரு நீலப்பட நடிகை என்பதை தெரிந்து கொண்ட இவர்களின் மகனுடைய கொலைவெறிக்கு அவனே பலியாவதை தடுக்க மிஷ்கின் செய்யும் பிரார்த்தனைகளும்; இந்த கிறுக்குத்தனத்தில் இருந்து தன் மகனை மீட்க போராடும் ரம்யா கிருஷ்ணனின் போராட்டங்களும் விளிம்பு நிலை மக்களை இச்சமூகம் எப்படி பாடாய் படுத்தி எடுக்கிறது என்பதற்கான உதாரணங்கள்.
ஒழுக்கநெறிகளின் தேவை
பம்பாய் சென்று தன்னை பெண்ணாய் மாற்றிக் கொண்ட விஜய் சேதுபதியாய் இருந்தாலும் சரி, சமந்தாவாக இருந்தாலும் சரி அவர்களிடமிருந்து அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்பார்ப்பதென்னவோ ஒன்றே ஒன்றுதான். இந்த காமஇச்சை நெறிப்படுத்தப்படாத போதே கட்டற்ற பாலியல் உணர்ச்சிக்கு மனிதர்கள் பலியாக நேரிடுகிறது என்பதற்கு உதாரணம் தான் இந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம். ஒழுக்க நெறிகளின் தேவையை இந்த கதாபாத்திரம் உணர்த்துகிறது என்றால், இவையே கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இறுகினால் ஆகும் பாதிப்பை சமந்தாவின் கதாபாத்திரம் உணர்த்துகிறது. இப்படி முரணான கதாபாத்திரங்களை சிக்கலின்றி உலாவவிடுவதில் வல்லவர் K.பாலசந்தர். தியாகராஜன் குமாரராஜா நவீன பாலசந்தர்.
திரைக்கதை
இப்படித்தான் வாழவேண்டும் என்ற நியதியைக் கடைப்பிடித்து வாழும் பாக்கியம் அனைவருக்கும் அமைவதில்லை. அந்த நியதிக்குள் சிக்கமுடியாத சிறுபான்மைக் கூட்டம் எப்போதும் உண்டு. அவர்களில் ஒரு மூன்று பெண்களைத் தேர்ந்தெடுத்து மிக கச்சிதமாக திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இவர்கள் மூவரின் கதையையும் இணைக்கும் திரைக்கதைதான் படத்தின் நாயகன். படம் முழுக்க இம்மூவர்களுடனும் இணைக்கப்படும் அனைத்து கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் நினைவில் நிற்பது ஆச்சரியமூட்டுகிறது. வணங்கப்பட வேண்டிய அசாத்திய உழைப்பு.
விஜய் சேதுபதி, மிஷ்கின், தியாகராஜன் குமாரசாமி என தமிழ்த் திரையுலகம் புத்துயிர்ப்போடு இருக்குதய்யா ஆண்டவரே….

தியாகராஜன் குமாரராஜா நவீன பாலசந்தர்.
Sums up everything
LikeLike
Ha…ha..Tks.
LikeLike
I really appreciate your thoughts on this movie, it is definitely once in a life time movie and we should celebrate directors like Thyagarajan Kumararaja.
LikeLiked by 1 person
Thanks Bharani….
LikeLike