
நாகரீக வளர்ச்சிக்கும் உடலுழைப்புக்குள்ளும் உள்ள தொடர்பை பற்றி புரிந்து கொள்வதற்காக எழுதும் ஒரு பதிவிது. வழக்கம் போல் நான் இதுவரை தெரிந்து வைத்திருக்கும் மார்க்ஸியத்தைத் தான் இதற்கு துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது. உடனே இது தீவிர கருத்துமுதல்வாதிகளுக்கு அல்லது தற்போதைய சமூகத்தின் வர்க்கப் பிரிவினை இயற்கையானது அல்லது இயல்பானது என்று எண்ணுவோருக்கு அல்லது முதலாளித்துவத்திற்கு எதிரான பதிவென்று எண்ண வேண்டாம்.
மூன்று சமூக அமைப்புகள்
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கடந்த, நிகழ் மற்றும் எதிர்கால சமூகங்களை முறையே வர்க்கமுன் சமூகம், வர்க்க சமூகம் மற்றும் வர்க்க பேதமற்ற சமூகம் என்று வகைப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த வர்க்க பேதமற்ற எதிர்கால சோஷலிச சமூகமானது ஒரு கனவு அல்லது உயர்ந்த இலட்சியம் மட்டுமே. இதை அடைவதற்கு புரட்சி தேவை என்பது மார்க்ஸியம். இல்லை முதலாளியத்தில் செய்யப்படும் சில சீர்திருத்தங்கள் வழியாக சோஷலிசத்தை எட்டமுடியும் என்பது எதிர்தரப்பு.
நிகழ்விலிருக்கும் வர்க்க சமூகமானது இந்த சோஷலிச சமுதாயக் கனவினால் உந்தப்பட்டுதான் அடிமைச் சமூகத்திலிருந்து நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம் என பரிணமித்துள்ளது. இதை மார்க்ஸியத்தின் இயங்கியல் விதி என்கிறார்கள். ஆண்டான்-அடிமை, ஜமீன்தார் (பண்ணையார்) – விவசாயி மற்றும் முதலாளி-தொழிலாளி என வர்க்கங்களின் பெயர்கள்தான் இப்பரிணாம வளர்ச்சியில் மாறினதேயொழிய வர்க்கம் ஒழியவில்லை.
வர்க்கங்கள் என்ற ஒன்று தோன்றியிருக்காத பண்டைய அல்லது புராதனப் பொதுவுடைமைச் சமூகங்கள் அல்லது வர்க்கமுன் சமூகங்களுக்கும் தற்போதைய வர்க்கச் சமூகங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு உழைப்பின் உட்கூறுகள் அல்லது உள்ளடக்கம்தான்.
உழைப்பின் பிளவு
வர்க்கமுன் சமூகங்களில் மனிதர்களின் செயலில் இருந்து சிந்தனை பிரிந்திருக்கவில்லை என்கிறார்கள். அதாவது, சிந்திப்பவன் செயல்படுபவன் என்ற பிரிவினையில்லை. உழைப்பு, மூளையுழைப்பு மற்றும் உடலுழைப்பு என்று பிளவு பட்டிருக்கவில்லை. மனித உழைப்பு என்பது சிந்தனையும் செயலும் கலந்த ஒரு முழுமையான உற்பத்திச் செயல்பாடாக இச்சமூகங்களில் நிலவியிருக்கிறது. மார்க்ஸியத்தின்படி சொல்ல வேண்டுமென்றால் உழைப்பென்ற வடிவம் அல்லது உருவத்தின் உள்ளடக்க முரண்கள்தான் செயலும் சிந்தனையும்.
வர்க்கமுன் சமூகங்களான இனக்குழுச் சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு பிளவுண்டு வர்க்கச் சமூகங்களின் ஆரம்பகட்டமான அடிமைச் சமூக்திற்குள் நுழைகிறார்கள். தங்களிடம் தோற்ற இனக்குழுவினரை, போரில் வென்ற இனக்குழுவினர் அடிமைகளாக்கி கடும் வேலைகளை அவர்களுக்கு பணிக்கிறார்கள். நாள்தோறும் அவர்கள் இடைவிடாது உழைத்து மடிய வேண்டியிருந்தது. மூளையும், உடலின் பிற பாகங்களும் சேர்ந்து செய்த உழைப்பு என்பது இங்குதான் முதன் முதலாக உடலுழைப்பு என்றாகிறது.
உழைப்பின் உள்ளடக்க அலகுகளில் ஒன்றான சிந்தனையை உருவி வெளியே எடுக்கும் மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அடுத்தடுத்த வர்க்க சமூகங்களான நிலவுடைமை மற்றும் முதலாளித்துவ சமூகங்களில் உச்சம் தொடுகிறது. உழைப்பு அடிமைகளுக்கு அல்லது கீழ்வர்க்கங்களுக்குரியது என்றாகிறது. சிந்தனை மேல் வர்க்கங்களுக்கு என ஆகிறது.
புரட்சியும் மாற்றங்களும்
மார்க்ஸியத்தின் இயங்கியல் தத்துவப்படி வர்க்க சமூகங்களின் உள்முரண்கள் அதிகரிக்கும் போதெல்லாம் எழும் புரட்சி அச்சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. பேரரசுகளுக்கு எதிராக அடிமைகளை இணைத்துக் கொண்டு நிலவுடைமைச் சமூகம் உருவாகியது. நிலக்கிழார்களுக்கு எதிராக விவசாய கூலிகளை இணைத்துக் கொண்டு முதலாளியச் சமூகம் உருவாகியது. இந்த சமூக மாற்றங்களில் கீழ் வர்க்கங்கள் எதிர்பார்த்த வர்க்க பேதங்கள் முழுவதுமாய் ஒழிந்த சோஷலிச சமூகம் உருவாகவில்லை. ஆளும் வர்க்கங்களால் ஏதாவது ஒருவகையில் சுரண்டப்பட்டு உடலுழைப்புக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக ஆனார்கள்.
வர்க்க சமூகத்தின் இம்மனப்பான்மை மேலும் மேலும் உடலுழைப்பை சிறுமைப் படுத்தி, அவை சிந்தனையில் எழும் கருத்துக்களுக்கு வடிவம் கொடுக்கும் கருவிகள் மட்டுமே என்ற ஒருவகையான கருத்து முதல்வாதத்திற்கு இட்டுச் செல்கிறது என்கிறார் இந்தியாவின் தலைசிறந்த மார்க்ஸியர்களில் ஒருவரான தேவிபிரசாத் சட்டோபாத்யா. வர்க்க அல்லது தனியுடைமைச் சமூகங்களின் தத்துவமாக இயல்பாகவே கருத்துமுதல்வாதம் நிலைகொண்டு விடுகிறது.

முதலாளித்துவ சமூகங்களில் எழும் புரட்சியானது சோஷலிச சமுதாயத்திற்கு வழிவகுக்கும் என்று மார்க்ஸ் உறுதியாக நம்பினார். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாத லெனின், பழைய மாற்றங்களுக்கான புரட்சி ஏன் சோஷலிச சமூகத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்பதையும் உணர்ந்து கொள்கிறார். பேரரசை எதிர்த்தவர்கள், அவ்விடத்தைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த நிலவுடைமையாளர்கள். நிலவுடைமையாளர்களை எதிர்த்தவர்கள் அவ்விடத்தைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த பூர்ஷ்வாக்கள் அல்லது முதலாளிகள். வர்க்க சமூகத்தை தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வது தான் இவர்களுடைய புரட்சியின் இலக்கேயொழிய வர்க்கங்களை ஒழிப்பதல்ல.

சோஷலிசத்துக்கான புரட்சியை ஏற்று நடத்தும் அமைப்பு அல்லது கட்சி, அதன் தலைமை மற்றும் நிர்வாகமுறை பற்றி ஒரு பெரிய திட்டத்தை அல்லது வரையறையை உருவாக்குகிறார் லெனின் (லெனினியம்). இத்திட்டத்தில் மிக புதுமையானது தேசிய இனங்களின் விடுதலை பற்றிய கருத்து. இவ்வளவு திட்டங்கள் இருந்தும் வர்க்க சமூகங்கள் உருவாக்கி வைத்திருந்த எதார்த்தங்களை லெனினால் வெல்ல முடியவில்லை. புரட்சியில் வென்றாலும், தனியுடைமையை நீக்க அவர் கொண்டுவந்த அரசுடைமைத் திட்டத்தை நிர்வகிக்க முடியாமல் லெனினியம் தோற்றுத்தான் போனது.
ரஷ்யாவின் மிகச்சிறந்த நாவலாசிரியரான பியோதர் தஷ்தயேவ்ஷ்கி ‘நான் சிந்திப்பதால் செயல்பட முடிவதில்லை’ என்கிறார். செயல்பட விரும்பாத சிந்தனையாளர்களையும், சிந்திக்க திராணியற்ற உடலுழைப்பாளிகளையும் உருவாக்கியதுதான் வர்க்க சமூகங்களின் வெற்றிக்கு காரணம். செயலையும் சிந்தனையையும் ஒருங்கிணைக்க முயன்ற லெனினியம், இவ்வர்க்கங்களுக்கு முன் தோற்றுத்தான் போயின.
உயிரியல் செயல்பாடுகள் படி நாம் சிந்தனை-செயல் என்று பிளவுபடவில்லை என்பதே அறிவியல் உண்மை. இப்பிளவுகள், வர்க்க சமூகங்களை தக்கவைத்துக் கொள்ள நாம் நம் மனதில் ஏற்படுத்திக் கொண்ட கற்பிதங்கள். பௌத்தம் மனமே ஒரு கற்பிதம்தான் என்று சொல்கிறது.
லெனின் சாதிக்க நினைத்த இந்த ஒருங்கிணைவை காந்தியிடம் நம்மால் காண முடிகிறது. தன் சிந்தனைகளுக்கு தானே செயல்பாட்டு வடிவங்களை உருவாக்கி கொண்டே இருந்தார். ராட்டை சுற்றுவதிலிருந்து தற்சார்புள்ள வாழ்க்கை வரை. அவருடைய உடலுழைப்பு ஏதாவது ஒரு வகையில் உற்பத்தியோடு இயைந்திருந்தது. ஆனால் இன்று பெருமபாலும் சிந்திக்க மட்டுமே தெரிந்த கூட்டம் தன் உபரி உடலைக் குறைப்பதற்காக உற்பத்தியற்ற உடலுழைப்பில் (Jim, Running etc.) மட்டுமே ஈடுபட வேண்டியுள்ளது.

முதலாளிய சீர்த்திருத்தமும் மாற்றங்களும்
மார்க்ஸின் கூற்றுப்படி முதலாளித்துவம் உச்சத்தில் இருந்த ஐரோப்பாவில் ஏன் புரட்சி தோன்றவில்லை என்பதை புரிந்து கொள்ள மார்க்ஸிய கண்ணோட்டத்திலிருந்து விலகி முதலாளியத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது.
தேவைகள் -» உழைப்பு -» தேவைகளின் ஸ்தூல வடிவம் என்ற பயணத்தில் உழைப்புச் செயல்பாட்டிற்கான காரணமாக தேவைகளே பிரதானமாக இருந்தன. அதாவது தேவைகளே நமது உற்பத்திக்கான ஆதர்சம்.
ஆனால் முதலாளித்துவ வர்க்க சமூகத்தில் இப்பயணம்
சிந்தனை-»உழைப்பு-» சிந்தனையின் ஸ்தூல வடிவம் என்று உருமாறுகிறது. இந்தப் பயணம் முடிந்தவுடன், உழைப்பு வெகு இயல்பாக மறக்கப்பட்டு அல்லது பின்னுக்கு தள்ளப்பட்டு ஒட்டுமொத்த உழைப்புச் செயலும் சிந்தனையின் விளைவென்று மார்தட்டிக் கொள்கிறது வர்க்க சமூகம். அதாவது காரணம் ‘தேவைகள்’ என்பது மாறி, ‘சிந்தனை’ என்றாகிறது. சிந்தனையும் தேவையிலிருந்துதான் எழுகிறது என்பதை மிக புத்திசாலித்தனமாக ‘கருத்துமுதல்வாதம்’ என்ற தத்துவத்தின் வழியாக முதலாளித்துவம் இருட்டடிப்பு செய்கிறது என்கிறார்கள் ‘பொருள்முதல்வாதத்தை’ அடிப்படையாக கொண்ட மார்க்ஸியர்கள்.
‘நான் சிந்திக்கிறேன்.ஆதலால் இருக்கிறேன்’ என்ற நவீன தத்துவ சிந்தனையாளரான டெகார்த்தேவின் கோட்பாடு முதலாளித்துவத்தை கட்டமைக்கிறது என்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யா.
முதலாளித்துவ சமத்துவம்
உழைப்பு செயல்முறையிலிருந்து ‘கற்பனை, திட்டம், இலக்கு’ போன்ற சிந்தனை சார்ந்த உழைப்பை முழுவதுமாக பிரித்தெடுத்தது வர்க்க சமூகத்தின் தற்போதைய வடிவமான முதலாளித்துவம். இப்பிரிவினை, சிந்திப்பது மேல் வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதானது; உடலுழைப்பு கீழ்வர்க்கங்களுக்கானது என நிரந்தர உழைப்பு பிரிவினைக்கு இட்டுச் சென்றது.
பெரிய தொழிற்சாலைகளில் அல்லது அலுவலகங்களில் கீழ்மட்டங்களிலிருப்பவர்கள் முற்றிலும் சிந்தனைக்கு அந்நியமாகிப் போவதைத் தடுப்பதற்காக பல வழிமுறைகளை புகுத்துகிறது முதலாளித்துவம். தகுதியை (அதாவது சிந்திக்கும் தகுதியை) வளர்த்துக் கொண்டால் கிடைக்கும் பதவி மற்றும் சம்பள உயர்வு, அதன் வழி கிடைக்கும் சமூக அந்தஸ்து என வர்க்கங்களை நிரந்தரப்படுத்தினாலும், மனிதர்களை நிரந்தரமாக ஒரே வர்க்கத்தில் இருக்க நிர்பந்திப்பதில்லை. முதலாளித்துவ சமூகத்திற்கு முந்தைய வர்க்க சமூகங்களில் இல்லாத ஒரு ஜனநாயகத் தன்மை இது என்று சொல்லலாம்.

மேலே உயர்வதற்கான தகுதிகளை நிர்ணயிப்பது யார்? மற்றும் அத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன? போன்றவையே முதலாளித்துவ சமூகத்தின் ஜனநாயகத்தன்மையை நிர்ணயிக்கின்றன. இதற்கான பொறுப்பை, அதாவது கீழ்வர்க்கத்தினருக்கு கல்வி அளிப்பது போன்றவற்றை முதலாளித்துவ சமூகங்களின் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் முதலாளித்துவத்தின் பிதாமகனான ஆடம் ஸ்மித். இதைத்தான் மார்க்ஸ் பூடகமாக வர்க்க பேதமற்ற அவருடைய இலட்சியக் கனவான சோஷலிச சமூகத்தில் அரசு உதிரும் என்கிறார். வர்க்க பேதங்களிருக்கும் வரை அரசுக்கான தேவையும் இ்ருக்கும்.
Dignity of Labour
முதலாளித்துவத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம் என இதைச் சொல்லலாம். தகுதிகளை வளர்த்துக் கொண்டு உயர்ந்தாலும், அது உடலுழைப்பு என்பது கேவலமானது என்ற மனநிலையை மறைமுகமாக வளர்த்தெடுக்கத்தான் செய்தது.
பல்வேறு சமூகக்காரணங்களால் (இந்தியச் சமூகங்களில் குறிப்பாக சாதி) தங்களுடைய தகுதியை வளர்த்துக் கொள்ள முடியாத அல்லது விரும்பாத உடலுழைப்பாளிகளுக்கான சமூக அந்தஸ்து, நியாயமான சம்பளம் முதலியவற்றை முதலாளித்துவ அரசாங்கங்கள் உறுதி செய்தன. வீட்டு வேலை செய்பவர்கள், அலுவலகக் கழிவறைகளை சுத்தம் செய்வோர், தெருக்களின் குப்பைகளை அகற்றுவோர் போன்றவர்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்வது, கீழாக நினைப்பது போன்றவை நாகரிகமற்ற செயல்களாக பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டன. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சமூகங்களில் இவற்றைக் கண்கூடாக பார்க்க முடியும். இந்த நாகரிகமான சிந்தனை வர்க்கங்களின் தொழில்நுட்ப பாய்ச்சல்தான் முதலாளித்துவ சமூகத்தின் அடுத்த கட்ட சமத்துவ பாய்ச்சல்.
தொழில்நுட்ப வளர்ச்சி
நாகரிகமடைந்த சமூகத்தின் அளவுகோளாக உற்பத்தி திறன் முதலாளித்துவ சமூகத்தில் முன்வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் உடலுழைப்பை முற்றிலும் நமக்கு அந்நியமாக்கி இருக்கின்றன அல்லது இல்லாமல் செய்திருக்கின்றன. அதிலும் அசிமோவின் விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு எந்திரன்கள் (AI Enabled Robots) 2030ல் மனிதர்களை விட அதிகம் சிந்திக்கும் திறனைப் பெற்றுவிடும் என்று பீதி கிளப்புகிறார்கள். சிந்திப்பதிலிருந்தும் நாம் அந்நியப்படுவோமென்று தெரிகிறது. மனிதனை உருவாக்கியவனை மனிதனே உருவாக்குகிறான் என்கிறார் AI தொழில்நுட்ப வல்லுரான Zoho ராஜேந்திரன்.
வர்க்கங்களுக்கிடையில் மத்தியஸ்தம் பண்ணும் அல்லது நம்பிக்கையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் சமூக அமைப்புகள் (அரசாங்கம், வங்கி போன்றவை) அனைத்தையும் இல்லாமல் செய்து விடுவேன் என்று தொடைதட்டி சவால் விடுகிறது இன்னொரு தொழில்நுட்ப புரட்சியான BlockChain.
Good bye ஆடம் ஸ்மித். நாங்கள் மார்க்ஸ் கனவுகண்ட வர்க்கங்களற்ற, அவற்றை நிர்வகிக்கும் அமைப்புகளற்ற சமுதாயத்தை அடையப்போகிறோம் என்கிறதா இந்த முதலாளியத்தால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப புரட்சி? மார்க்ஸியத்தின் இயங்கியலிடமே விட்டுவிட வேண்டியதுதான் இக்கேள்விக்கான பதிலை.
[…] வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம் […]
LikeLike
[…] வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம் […]
LikeLike
[…] வர்க்க சமூகங்கள் வழியாக ஒரு பயணம் […]
LikeLike