
“பும்ரா …நீ தூள்ரா…பாம்புரா நீ…” என ஸ்ரீகாந்த் கிட்டத்தட்ட பார் அரட்டைபோல் தமிழ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். ஸ்டார் தமிழில் இருந்து ஆங்கில அலைவரிசைக்கு மாறும்போது, வேறு ஒரு ஆட்டத்திற்குள் நுழையும் பிரம்மையே இருந்தது. பும்ராவின் முதல் ஐந்து ஓவர்களின் பெரும்பாலான பந்துகளை அம்லாவும், டி-ஹாக்கும் என்ன செய்வதென்றே அறியாமல் திகைக்க, அப்பந்துகளை தோனி முதல் ஸ்லிப்பிற்கு வந்துதான் சேகரிக்க வேண்டியிருந்தது. ஆடுகளத்தின் உயிர்ப்புத் தன்மையை தன்னுடைய பந்துகளுக்கும் கடத்திக் கொண்ட பும்ராவின் விவேகம் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரின் கைகால்களையும் அவர்களுடைய கிரீசோடு சேர்த்து கட்டித்தான் போட்டிருந்தது. கொஞ்சம் விடுதலையுணர்வோடு அவர்கள் ஆட எத்தனித்து, அதற்கு விலையாக தங்களிருவரின் விக்கெட்டுகளையும் இழந்து SAவின் உலககோப்பை துரதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொண்டார்கள்.
பும்ரா ஏற்படுத்திய இந்த உடைசலை கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க முயன்ற SAவின் அனைத்து முயற்சிகளையும், சீரிய இடைவெளியில் அஸ்திவாரமற்ற கட்டிடத்தை கலைத்துப் போடுவது போல் கலைத்துப் போட்டு விட்டார் சாகல். அதிலும் கிரேக்கச் சிற்பம்போல் கட்டுமஸ்தான வலதுகை ஆட்டக்காரரான டூசன், பொறுமையிழந்து இடதுகை ஆட்டக்காரராக விரும்பி சாகலிடம் தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தது, எதிர்முனையில் நின்றிருந்த டூபெளெசிக்கு எரிச்சலூட்டியிருக்கும். டூசன் தன்னுடைய உபகரணங்களை கலைவதற்குள் தன்னுடன் வந்து சேர்ந்துகொண்ட டூபெளெசியிடம் தன்னுடைய பொறுப்பற்ற ஆட்டத்திற்காக மன்னிப்பு கோரியிருப்பார்.இருவரும் சேர்ந்து சாகலுக்கு சாபமும் கொடுத்திருக்கலாம். இத்தனைக்கும் டூபெளெசி மிகவும் மரியாதையாக, தன் வலதுகாலை முன்வைத்து சாகலின் அப்பந்தை தடுத்தாடத்தான் முயன்றார். ஆனால் தன் எஜமானனின் இலக்கை நிறைவேற்றுவதில் மட்டுமே குறியாய் இருந்தது அப்பந்து.
பாம்பு தன் சட்டையை உரித்துப் புது அவதாரமெடுப்பதுபோல தன் பௌலிங் திறமையை கூர்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. ஒருகாலத்தில் தன்னுடைய பேட்ஸ்மென்களை மட்டுமே நம்பியிருந்த இந்தியா, தற்போது பௌலர்களையே பெரும்பாலும் நம்பியுள்ளது. பும்ரா, புவனேஸ், ஹர்திக், சாகல் மற்றும் குல்தீப் என அனைவரும், தன் பந்துகளை கையிலிருந்து விடுவித்த பின்பும் தங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அவற்றை வைத்திருக்கும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நினைத்த இடத்தில் விழுந்து உயிர்பெற்று விக்கெட்டுகளைச் சரித்து விடுகின்றன இப்பாம்புகள். உலகந்தோறும் பௌலர்களின் இந்த எழுச்சிக்கும், பேட்ஸ்மென்கள் தங்கள் திறமைகளையும் நுட்பங்களையும் இழந்து வருவதற்கும் பெருகிவரும் டி20 கலாச்சாரமும் ஒருவகையில் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

90 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்தது, SA பேட்ஸ்மென்களின் உடம்பில் இன்னமும் டி20 போட்டிகளே நிறைந்திருப்பது போல் தோன்றியது. மனம் சட்டென மாறிக்கொள்ளும் அளவிற்கு உடம்பு மாறிவிடுவதில்லை. பரிதாப நிலையிலிருந்த SAவை ஸ்ரீகாந்த்& Co தங்கள் எதார்த்த வர்ணனை என்ற பெயரில் தெருவில் கிரிக்கெட் ஆடும் அணியாக்கி விட்டார்கள். “பெளௌகுவாயா சும்மா இரண்டு சுத்து சுத்திட்டு அவுட்டாயிடுவாம்மா…மில்லர் ஃபார்ம்லயே இல்ல..அவனும் சீக்கிரம் போயிடுவான் …SA 140 அடிக்கிறதே பெருசு…” என்ற பேச்சுத் தமிழில் நமது அறைக்குள் வந்து நமது பக்கத்திலேயே அமர்ந்து விடுகிறார் ஸ்ரீகாந்த். நம்மை நெருங்கிய ஸ்ரீகாந்த் உண்மையான நாயகனான ஆட்டத்தை நம்மிடமிருந்து தள்ளி வைத்து விடுகிறார்.
ஆங்கில வர்ணனையாளர்களிடம் இருக்கும் நேர்த்தியும் நடுநிலையும் தமிழ் வர்ணனையில் நிகழ்வதற்கு இன்னமும் காலம் தேவைப்படுகிறது. 80களில் வானொலி தமிழ் வர்ணனை மிகவும் தரமாக இருந்தது. ராமமூர்த்தி, ரங்காச்சாரி போன்ற வர்ணனையாளர்களிடம் கிரிக்கெட் ஞானத்தோடு மொழிவளமும் இருந்தது, ஒரு டெஸ்ட் போட்டியில் அந்த நாளின் ஆட்டம் முடிய இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் மீதம் இருக்கும்போது கவாஸ்கர் தன் விக்கெட்டை இழந்து விடுகிறார். Night watchmanஆக யார் வருவார் என்ற விவாதம் வர்ணனையாளர்களிடம் எழுகிறது. அதற்கு ‘பொக்கிஷமே போனப்பிறகு Night Watchman எதற்கு‘ என்பார் ராமமூர்த்தி. வானொலி போல் தொலைக்காட்சி வர்ணனைக்கு உகந்த தமிழ் மொழியை இன்னமும் நாம் கண்டடையவில்லை என்பதுதான் உண்மை. இதை ஸ்ரீகாந்தை மட்டும் வைத்துக்கொண்டு சாதிக்க முடியாது என்பதே நிதர்சனம்.

சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளைப் கொடுத்தாலும் குலைந்துபோன தங்களை அடுக்கிக் கட்டி 227 ரன்களை சேர்த்துக் கொண்டார்கள் SA. ஆரம்பக்கட்ட பீதியைத்தவிர எந்தவிதமான அழுத்தத்தையும் தராத இந்த இலக்கை பொறுமையாக இந்தியா கடந்து சென்றது. ரோகித் சர்மா ஃபார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. ஆனால் இவரைவிட நம்பிக்கையாக தோற்றமளித்தவர் தவான்தான். அவர் மிகச்சுதந்திரமாக தன் கால்களை பந்துகளுக்குத் தகுந்தாற்போல் ஒரு மெல்லிய நடனத்திற்கு தயார் செய்து வைத்திருக்கிறார். அத்தனை ஒத்திசைவு.வரும்போட்டிகளில் இந்த நடனம் ரன்னையும் குவிக்குமென்று நம்பலாம்.
கோலிக்கு எந்த தொந்தரவும் தரவில்லை SAவின் பௌலர்கள். ஆனால் டி-காக் தன் உடம்பை வில்லாய் வளைத்து எம்பிப் பிடித்த அந்த சாத்தியமற்ற கேட்ச் கோலியை பெவிலியன் நோக்கி அனுப்பினாலும், இந்திய அணியை பெரிதாக பாதிக்கவில்லை. டேல் ஸ்டெயின் மற்றும் லுங்கியின் பங்களிப்பை SA பௌலிங் இழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களிருவரும் இல்லாததை இந்தியா உணர்ந்ததுபோல் தெரியவில்லை. உணர்ந்திருந்தால் ஒரு ஐந்து ஓவர்கள் முன்னதாகவே தங்களுடைய இலக்கை எட்டியிருக்கலாம். இதை எந்த பௌலரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்ற இந்திய அணியின் ஜாக்கிரதையுணர்வு என்று எடுத்துக் கொண்டால், இந்தியா அரையிறுதியை எட்டுவதில் சந்தேகமில்லை.

Good Luck India!!!
சகோதரர் முத்து அவர்களே உங்கள் கருத்துக்களை மிக அழகான தமிழில் எழுதி உள்ளீர்கள், வாழ்த்துக்கள்.
LikeLiked by 1 person
மிக்க நன்றி பரணி.
LikeLike
hi its really good to read your writings.
LikeLike
Thanks Samy
LikeLike