
கண்ணிருட்டும் நண்பகலின் கோடையனல், அணையவிருக்கும் விளக்கு சுடர்விட்டு எரிவதுபோல உடலின் சகலபாகங்களிலும் ஊடுருவி எரித்துக் கொண்டிருந்தது. சென்னையின் கோடை, நிலத்திற்கு அடியிலுள்ள கடைசிச் சொட்டு நீரையும் உண்டு ஆவியாக்காமல் அணைவதுபோல் தெரியவில்லை. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த மலையாள கவிஞரான பி.ராமன், விருதை வழங்கவிருக்கும் கவிஞர் தேவதேவனின் “பாலைவனத்தில் பயணம் செய்வோனுக்கு கைவசமிருக்கும் நீர்க்கலமே சோலை…” என்ற கவிதையை நினைவு கூர்ந்தார். இளம் கவிஞர்களுக்காக வழங்கப்படும் ‘குமரகுருபன் விஷ்ணுபுரம் விருது’ விழாதான் எரிக்கும் இந்த சென்னைக் கோடையை அன்று சோலையாக்க உதவிய நீர்க்கலம். கடைசி நிமிடத்தில் நிகழ்வு நடக்கும் அரங்கிலிருந்த குளிரூட்டியும் வெப்பம் தாளாமல் தம் இயக்கத்தை நிறுத்திக் கொண்டும்கூட, எங்களனைவரையும் கிட்டத்தட்ட 6.30 மணிநேரம் அங்கிருக்க உதவியதே இந்நீர்க்கலத்தின் வலிமைக்குச் சான்று. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராஜகோபாலன் சொல்லியதுபோல, இலக்கியத்திற்காக அங்கிருந்தவர்களை வியர்வை சிந்தவைத்த பெருமையை இவ்விருது விழா பெற்றுக் கொண்டது.

மறைந்த கவிஞர் குமரகுரபனின் நினைவாக வழங்கப்படும் இவ்விருது, கவிதைகளையும், செய்யுள்களையும் இன்னமும் எவரின் உதவியுமில்லாமல் வாசிக்க முடியாத எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இவ்விருதை வழங்கும் முதல் வருட நிகழ்வில்தான், எழுத்தாளர் ஜெயமோகனை(ஜெமோ) முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதுதான் இதற்கான காரணம். இலக்கியத்தை மட்டுமல்ல, இலக்கிய வாசகர்களின் தரத்தை மேம்படுத்துவதிலும், தகுதியுள்ள வாசகர்களை சிறந்த எழுத்தாளர்களாகவும்,விமர்சகர்களாகவும் ஆக்குவதிலும் ஜெமோவின் எழுத்துக்களும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழியாக அவர் மேற்கொள்ளும் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளும் பிரமிப்பூட்டுபவை.

அதிலும் எழுத்தாளர்களுக்கு தேவையான மொழிச்சாத்தியங்களை அளிக்கக்கூடிய கவிஞர்களினத்தை கூர்ந்து அவதானிப்பதிலும், அவர்களுக்குரிய அங்கீகாரத்தை பொதுவெளியில் பெற்றுத் தருவதிலுமுள்ள இவருடைய ஈடுபாட்டை வெளிக்கொணர்ந்தது கவிஞர் குமரகுருபனின் மரணம்தான் என்று எண்ணுகிறேன். மனச்சோர்வளிக்கும் நினைவு தினங்களை செயலூக்கமளிக்கும் ஒன்றாக மாற்றிக் கொள்வதில் ஜெமோவுக்கு நிகர் ஜெமோவும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் மட்டுமே. இச்செயலூக்கம் சபரிநாதன், கண்டராதித்தனைத் தொடர்ந்து இவ்வருடம் ச.துரையை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் கவிஞர் சபரிநாதனுக்கு இளம் படைப்பாளிகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான ‘யுவபுரஸ்கார்’ விருது வழங்கப்பட்டுள்ளது என்பது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் கறார் தன்மைக்கு ஒரு சான்று.

கவிஞர்களின் ஆளுமை
தனக்கென்று ஒரு ஆளுமையை வடித்துக் கொள்ள விரும்பாத மனிதர்களின் பட்டியலில் சிறந்த கவிஞர்களுக்கு தனித்த இடமுண்டு. எந்த சட்டகத்திலும் அடைக்க முடியாத தனிப்பிறவிகள் இவர்கள். ஜெமோ தன் உரையில் கூறியதுபோல ஒரு பூனைக்குட்டியை ஒற்றைக்காலில் தூக்கி மகிழும் குழந்தையின் அறியாமையையும், பயமின்மையையும் ஒருசேரக் கொண்டவர்கள். அவர் ஆதர்சமாகக் கொண்ட தேவதேவன் முதல் ச.துரை வரை இது பொருந்துகிறது. இக்கவிஞர்களின் முகத்தில் எப்போதும் குடியிருக்கும் சராசரி வாழ்க்கைப் பற்றிய ஏளனம்தான் இவர்களுடைய பலமும் பலவீனமும் என்று நினைக்கிறேன். இந்த ஒட்டு மொத்த நிகழ்வின்போதும் மேடையில் ஜெமோவுக்கு அருகில் அமர்ந்திருந்த ச.துரை, தன் முகத்தசையைப் பின்னுக்கிழுத்து இறுக்கிக்கொண்டு, புருவமும் கண்களும் சுருங்க தனக்கான அங்கீகாரத்தை பொதுவெளியில் வழங்கத்தான் இவ்விழா நடத்தப்படுகிறது என்ற எந்தவொரு பெருமிதமுமற்றுதான் அமர்ந்திருந்தார்.

நெய்தல் நிலக்கவிஞனான ச.துரைக்கு நாம் வடிவமற்றதாக, உயிரற்றதாகக் கருதும் கடலலைகளின் இரைச்சல்களை வடிவமும் உயிரும் கொண்டு துள்ளி எழும் ஒரு நாயின் குரைப்பாகவும்; கால்களை நனைத்து நக்கிச் செல்லும் நாக்காகவும் உருவாக்கிக் கொள்வதில் உள்ள திளைப்பு, மனித கூட்டங்களோடு இருப்பதில் வருவதில்லை. மனிதர்கள், அவர்களைப் பொறுத்தவரை இப்புவிக்கு ஒன்றும் இன்றியமையாதவர்கள் அல்ல. அதனால் தான் மனிதன் உருவாக்கிய அத்தனை அன்றாடங்களையும் மிக எளிதாக இவர்களால் கடக்க முடிகிறது போலும். கவிதை வழங்கிய கூரிய நுண் அவதானிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அனலரட்டை
அக்னி நட்சத்திரம் முடிந்த அடுத்த நாளிலிருந்தே ஒட்டுமொத்த சென்னையும் ஒரு எரியூட்டப்பட்ட அடுப்பாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு உக்கிரமான கோடையென்பது கடந்த சில வருடங்களில் மேயிலிருந்து ஜூனுக்கு நகர்ந்திருக்கிறது. வெளியே செல்வதற்கான தேவைகளனைத்தையும் சுருக்கிக் கொண்டிருந்த எனக்கு அனலை வெல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு. அன்று கோலி வேறு தன் பும்ராக்களுடனும், ரோகித்களுடனும் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மீறி வெளியே செல்வதற்கான ஆற்றலைத் தருவது, ஜெமோவும், அவர்வழி அறிமுகமான இலக்கியமும்தான்.
என்னைப்போலவோ, என் ஆட்டோ சாரதி போலவோ காலை 11 மணி வெயிலால் சுணங்கிப்போகாமல், காளிபிரசாத் whatsappல் பகிர்ந்திருந்த வரைபடத்தைத் தொட்டவுடன் தன் வேலையைச் செவ்வனே ஆரம்பித்து எங்களை ஜெமோவிடம் அழைத்துச் சென்றது கூகுள் வழிகாட்டி. சாத்தப்பட்டிருந்த அறைக்கதவின் வெளியே சன்னமாக ஒலித்த ஜெமோவின் குரலை உறுதிசெய்து கொண்டு உள்ளே நுழைந்தவுடன் கடவுளின் அறையில் நுழைந்தது போன்ற உணர்வு. In India, Air Conditioner is the God என்று சென்னையின் பிப்ரவரி மாத வெயிலைத் தாளமுடியாமல் என்னுடைய ஜெர்மானிய மேலாளர் சில வருடங்களுக்கு முன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அந்த குளிரூட்டப்பட்ட அறையின் காற்று சில நொடிகளில் அனல்வியர்வையில் என் உடலோடு ஒட்டிப்போயிருந்த ஆடைகளை தளர்த்தி உலர்த்தியது. Yes, AC is the God!!!
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்தும் நிறைய வாசகர்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட 30 பேர் அமர்ந்திருந்த அந்த நீண்ட செவ்வக அறையில் ஓரிடத்தை கண்டமர்ந்து உரையாடலில் ஐக்கியமானேன். ஜெமோவின் இதுபோன்ற informal உரையாடல்கள் வெறும் அரட்டையாக மட்டுமே இருப்பதில்லை. அங்குள்ள ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். எனவேதான் இதுபோன்று கிடைக்கும் வாய்ப்புகளை நான் எப்போதும் தவறவிடுவதில்லை. அவருடைய சமீபத்திய ஜப்பானியப் பயண அனுபவங்களை பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்து தடம் இதழுக்காக எழுதிய தோப்பில் முகமது மீரான் பற்றிய நினைவுக் கட்டுரையை நினைவு கூர்ந்தார். அவரது சொந்த ஊரான தேங்காய்ப் பட்டிணத்தைச் சேர்ந்தவர்களுக்கே தோப்பில் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்குமாவென்று தெரியவில்லை. பசீரின் புறவடிவத்தின் தொடர்ச்சியாக, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இஸ்லாம் வழியாகவே எதிர்த்த ஒரு கலகக்காரராக, அவருடைய பல்வேறு ஆக்கங்களின் வழியாக தோப்பிலை அருமையாக தொகுத்திருந்தார். மிக முக்கியமாக தோப்பில் கலந்துகொண்ட முக்கியமான அனைத்து நிகழ்வுகளிலும் அவர் பேசியவற்றையும் நினைவு கூர்ந்திருந்தார் இந்த இலக்கியப்பித்தன்.
விஷால் ராஜா மற்றும் சுனீல் கிருஷ்ணன் அவர்களின் பல்வேறு தரப்பட்ட கேள்விகளின் வழியாக தீவிர இலக்கிய உரையாடலாக மாறி நகர்ந்து கொண்டேயிருந்தது. அதிலும் விஷாலின் கேள்விகள் நான் இன்னமும் இலக்கியத்தில் கடைசி பெஞ்சில்தான் உள்ளேன் என்பதை நிரூபித்துக் கொண்டேயிருந்தன. இவ்விருவரும் ஜெமோ கண்டடைந்த முத்துக்கள். இவர்களுடன் சேர்ந்து மதியம் 2 மணியளவில் சிறுகதை விவாத அரங்கில் பேசவிருக்கும் காளியும், மாரிராஜும் தாங்கள் எழுதிய குறிப்புக்களை ஒரு சின்ன பதற்றத்தோடு புரட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தனர். மதிய உணவாக அனைவருக்கும் புகாரியிலிருந்து பிரியாணி வரவழைக்கப்பட்டிருந்தது.
சிறுகதை விவாத அரங்கு
அறையிலிருந்து தி.நகர் வழியாக அரங்கை எந்தவித வாகனச் சிடுக்குமின்றி 5 நிமிடங்களில் அடைய முடிந்தது அனலால் விழைந்த ஒரு பயன். ACக் கடவுள் கடைசி நிமிடத்தில் கைவிட்டிருந்ததால் அரங்கில் நிகழ்வு தொடங்குவதற்கு சற்று தாமதமாகியது. இருந்தாலும் வியர்வையைப் பொருட்படுத்தாமல் தொகுப்பாளர் ராஜகோபாலன் மேடையேறி சுனீல் கிருஷ்ணனை, அனோஜன் எழுதிய சிறுகதைகள் பற்றிய தன்பார்வையை முன்வைக்க அழைத்தார். அரங்கிலிருந்த அனைத்து சாளரங்களும் திறந்து வைக்கப்பட்டு, மின்விசிறிகளனைத்தும் முழு விசையில் சுழன்றும், அனல்தான் அரங்கில் பெய்தது. கூடியிருந்த 100க்கும் மேற்பட்ட வாசகர்களின் சுவாசத்தில் இருந்த இலக்கியம் மட்டுமே இந்த அனலை வெல்ல உதவியது.

அனோஜனின் ஆரம்ப காலகட்டத்து சிறுகதைகளுக்கும் தற்போதுள்ளவற்றுக்கும் இடையே உள்ள வடிவச் சிதைவை அல்லது மீறலை ஒரு படைப்பாளியின் படைப்பூக்கத்திற்கான சான்றாகவே சுட்டிக்காட்டினார் சுனீல். மேலும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரான இவருடைய கதைகளில் சிங்களவர்களை முற்றிலுமாக வெறுத்தொதுக்கும் ஒற்றைப்படைத் தன்மை இல்லாததை, பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு இணைவாக்கத்தை நோக்கிச் செல்லும் அனோஜனின் Constructive அல்லது நேர்மறைத்தன்மைக்கான குறியீடாகக் எடுத்துக் கொண்டார். புறங்களை கூர்ந்தவதானிப்பது மட்டுமில்லாமல், அவற்றைத் தன் அகத்தோடு கலக்கும் ரசாயன வித்தையை கைகொண்டவரே இலக்கியப் புனைவாசிரியனாக பரிணமிக்க முடியுமென்று புரிந்தது.

புதிதாக எழுதவரும் அனைவரையும் கூர்ந்து வாசிப்பதால் சுனீலால் மிகவும் அழுத்தமாகவும், வெகு இயல்பாகவும் தன் அவதானிப்புகளை முன் வைக்க முடிந்தது. அவரைத் தொடர்ந்து காளி இன்னொரு புலம்பெயர்ந்த எழுத்தாளரான சிவா கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகளை மிகவும் நகைச்சுவை உணர்வோடு முன்வைத்து பார்வையாளர்களை கேள்விகளுக்குத் தூண்டினார். இறுதியாக விஷால் கதைக்கான தேவைகளையும் அதன் வெவ்வேறு வடிவங்களையும் முன்வைத்த விதம், அவர் இலக்கியம் வழியாகவே தன் வாழ்வின் அறிதல்களை மேற்கொள்ளும் ஒரு நபர் என்று புரிந்தது. எந்தப் புது எழுத்தாளரின் கதையைக் கொடுத்தாலும் தமிழில் அவர் இ.பா. வகையா இல்லை தி.ஜா. வகையா என நொடியில் கூறிவிடக்கூடிய வாசிப்பை உடையவர் இவர். ஏன் ஜெமோ இவரை மிகவும் கூர்ந்து கவனிக்கிறார் என்பதும் புரிந்தது. மிக எளிதாக S.சுரேஷ் என்ற எழுத்தாளரின் பாகேஶ்ரீ கதையை அசோகமித்திரன் பாணி கதைகளோடு பொருத்திக் காண்பித்தார்.

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்கள் செய்த புண்ணியம் என்றே தோன்றுகிறது. அங்கிருந்த அனைத்து வாசகர்களுக்கும் அந்த மூன்று எழுத்தாளர்களையும் மிக நெருக்கமாக்கியிருந்தது இவ்வரங்கு. கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் நடந்த இவ்விவாதம் முடிந்திருந்தபோது, இதுவரை பொருட்படுத்தாமல் இருந்த அனலை உடல் உணரத்தொடங்கியது.
1000 மணி நேர வாசிப்புச் சவால்
முதன்மை நிகழ்வான விருதுவிழா துவங்குவதற்கு இன்னும் ஒரு மணிநேர இடைவெளி இருந்தது. வழக்கம்போல் ஒரு பெரிய கூட்டம் ஜெமோவைச் சூழ்ந்திருந்தது. சமீபத்தில் சுனீல் விளையாட்டாய் துவங்கிய 1000 மணி நேர வாசிப்புச் சவால் பற்றியே ஜெமோ பேசினார். தாமாக முயன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வாசிக்காதவரை நமது மூளை வாசிப்புக்கு பழகப்போவதில்லை என்பதை தன் அனுபவங்கள் வழியாகவே விளக்கினார். மூளை மிக எளிதாக குழந்தைபோல் நாம் செய்வதற்கு பழகிவிடும் என்று அவர் கூறியது வாசிப்புக்கு மட்டுமல்ல, அனைத்துத் துறைக்கும் பொருந்தும். தோன்றும்போது வாசித்தால், எழுதினால் போதுமென்ற மனநிலை உங்களை ஒருபோதும் வாசிக்கவோ எழுதவோ விடப்போவதில்லை என்றார்.

அங்கிருந்த புத்தகக் கடைகளிலிருந்து தோப்பிலின் நாற்காலியையும் ,ச.துரையின் மத்தியையும் வாங்கிக் கொண்டு அப்பள்ளியின் வளாகத்தை ஒரு சுற்று சுற்றியதில், கட்டிடங்களைவிட மரங்களும், திறந்த வெளிகளுமே அதிகமாயிருந்தன. இந்தியர்களிடம் உள்ள பராமரிப்பு வறட்சியில் சிக்கியிருந்தது ஒட்டுமொத்த வளாகமும். ஆனால் நகரத்தின் மத்தியில் இப்படியொரு மரங்கள் நிறைந்து கட்டிடங்கள் குறைந்த வளாகம் காணக்கிடைப்பது அரிது. மணி 6ஐத் தொட்டிருந்தும் நண்பகல் போலத்தான் இருந்தது. விருது விழாவிற்கு தவறான நுழைவு வாயிலில் நுழைந்தவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அரங்கம் தேடி அடைந்தார்கள்.
விருது விழா
இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் அரங்கத்திலிருந்த மேடை வேறு ஒப்பனைக்கு மாறியிருந்தது. அனலரசன் அங்கு வந்திருந்த பெண்களின் முகத்திலிருந்த ஒப்பனையை உரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அரங்கம் முற்றிலும் நிறைந்திருந்தது. கவிதா மற்றும் சௌந்தர் அவர்களின் வரவேற்புரையுடன் சிறப்பு விருந்தினரும் மலையாள கவிஞருமான பி.ராமன், விருதை வழங்கும் கவிஞர் தேவதேவன், ஜெமோ, இலக்கிய வாசகரும் சிறந்த விமர்சகருமான அருணச்சலம் மகராஜன் மற்றும் விருதைப் பெறும் ச.துரை மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். இவர்களனைவரையும் பற்றி நன்கு தெரிந்த ராஜகோபால் தனக்கேயுரிய அவதானிப்புகளுடனும், நுண்பகடியுடனும் நிகழ்வை தொகுத்தளிக்க ஆரம்பித்தார்.

வீடு திரும்புதல்
மலையாளிகளின் தமிழுக்கு ஒரு ராகமுண்டு. அதை விரும்பாத தமிழர்களே கிடையாது எனலாம். ஆனால் பி.ராமனின் மலையாளத்தில் இருந்த ஏற்ற இறக்கங்களும் முக பாவனைகளும், கையசைவுகளும், அவருடைய உரையை மேடையில் இயல்பாக எந்தவித முன்தயாரிப்புமின்றி நிகழ்வது போல் காட்டின. ஆனால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட இவ்வுரைக்குப் பின்னால் அவருடைய நீண்ட கால உழைப்பும், கவிதை வாசிப்பும், அதன் நுட்பங்களை அறிந்து கொள்ளும் திறனும் கொட்டிக் கிடந்தது. இங்குள்ள கவிஞர்களை இவ்வளவு நெருக்கமாக மலையாள இலக்கிய உலகம் பின்தொடர்வது ஆச்சரியமாய் இருக்கிறது. பாரதி முதல் ச.துரை இங்குள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வகையில் என்னை என் சொந்த நிலத்தோடு பிணைக்கின்றன என்று Nostalgic ஆனார். அதற்குச் சான்றாக நிறைய கவிதைகளை முன் வைத்தார்.

முழுதும் மலையாள மொழியிலேயே அமைந்த பி.ராமனின் இவ்வுரையை மேடையிலேயே உரை நிகழ நிகழ தமிழில் மொழிபெயர்த்து எழுதிப் பேசினார் ஜெமோ. அவ்வளவு ஒத்திசைவு இவ்விரு உரைக்கும். It is a treat to watch. நேரம் செல்லச் செல்ல ஜெமோவின் மொழிபெயர்ப்பு இல்லாமலேயே உரையை புரிந்து கொள்ளும் நிலை உருவானது போலொரு பிரமை தோன்றி மணிரத்னத்தின் ரோஜா படத்தில் வரும் மொழிபெயர்ப்பு காட்சியை நினைவூட்டியது.

ஆசியுரையும் அனலுரையும்
தனக்களிக்கப்பட்ட நேரத்தைவிட குறைவான நேரத்திலேயே தன்னுடைய ஆழமான ஆசியுரையை வழங்கிச் சென்றார் தேவதேவன். எழுத்தும் பேச்சும் எப்போதும் அவருக்கு ஒரே அளவிலேயே இருக்கின்றன. அவரைத் தொடர்ந்து வந்த அருணாச்சலம் ஒரு அனலுரையைத் தான் ஆற்றிச் சென்றார். ச.துரையின் கவிதைகளின் வழியாக தான் கண்டடைந்தவைகளையும், அவர் சென்றடைய வேண்டிய இலக்கு பற்றியும் கொதிப்போடு சொல்லி விடைபெற்றார்.

இன்றைய இளைஞர்களுக்கு எதைப்பற்றிக் கொள்வதென்று தெரியவில்லை. அப்படியே பற்றினாலும், அதிலிருந்து எதைப்பெறுவது என்ற தெளிவும் கைகூடுவதில்லை. இதுபோன்ற கையறு நிலை கவிஞர்களுக்கு கிடையாது என்றே நம்புகிறேன். அவர்கள் மற்ற இளைஞர்களைப்போல ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்காக எதையும் நாடுவதில்லை. அவ்வாளுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளவே கவிதைகள் எழுதுகிறார்கள். தோப்பில் பற்றிய நினைவுக் கட்டுரையில், ஜெமோ குறிப்பிட்டது போல தோப்பில் எழுத வரவில்லை என்றால் அவர் அனுபவங்களே அவரை சிறைபிடித்திருக்கும். இந்த வாழ்வு தரும் இடர்களின் வழியாகவே ஒவ்வொருவரும் தன்னை முன்னகர்த்திக் கொள்வதைப்போல இலக்கியவாதியும் அதையே செய்கிறான். இலக்கியம் நம் முன்னேற்றத்துக்கு உதவுமா என்றால், விஷால் ராஜா தன்னுடைய சிறுகதை விவாத அரங்கில் கூறியதைப்போல “It depends…அது வாசகனைப் பொறுத்தது…”
அக்காவின் பாட்டுப் பாத்திரம்
தெருவில் கட்டப்பட்டிருந்த குழாய் வடிவ ஒலிப்பானுக்கு தன் மகள் குழந்தையாக இருந்தபோது வைத்த பெயர்தான் இது என்று ஜெமோ தன் உரையை ஆரம்பித்தார். பாடாத போது பாத்திரமாக இருந்து, பாடியதும் பாட்டுப் பாத்திரமாகி, ஒலித்தது பெண்குரல் என்பதால் அது ‘அக்காவோட பாட்டுப் பாத்திரம்’ ஆகியது. இந்த குழந்தைகளின் மனம்தான் மொழியின் சாத்தியத்தை விரித்தெடுக்கக் கூடியது. வளர்ந்தும் இம்மனநிலையை தக்கவைத்துக் கொள்வதால்தான் கவிஞர்களின் மொழியைத்தான் நான் கூர்ந்து கவனிப்பேன் என்று கூறி, நுண் சித்தரிப்புகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த கவிதையுலகை மீண்டும் திடமான படிமங்களை நோக்கித் திருப்பிச் சாதித்ததால்தான் ச.துரைக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்று முடித்தார்.

இதைத்தொடர்ந்து தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த உரையை குனிந்த தலை நிமிராமல் வாசித்து விடைபெற்றார் ச.துரை. இன்னமும் மாறாத குழந்தைக் குரலில் வெண்பா நன்றியுரை வழங்க விழா முடிவுக்கு வந்தது. ச.துரையைத் தேடிக் கண்டுபிடித்து அவருடைய மத்தி கவிதைத் தொகுப்பில் கையெழுத்திட கேட்டபோது ஒரு விலக்கமான மெல்லிய புன்னகையோடு கையெழுத்திட்டார். கவிஞர்களின் புன்னகை காண்பதற்கரிது. அதை சாத்தியப்படுத்திய இவ்விழாவிற்கு நன்றி.

Thanks for sharing
செவ்., 18 ஜூன், 2019, பிற்பகல் 11:16 அன்று, முத்துச்சிதறல் எழுதியது:
> muthusitharal posted: ” கண்ணிருட்டும் நண்பகலின் கோடையனல், அணையவிருக்கும்
> விளக்கு சுடர்விட்டு எரிவதுபோல உடலின் சகலபாகங்களிலும் ஊடுருவி எரித்துக்
> கொண்டிருந்தது. சென்னையின் கோடை, நிலத்திற்கு அடியிலுள்ள கடைசிச் சொட்டு
> நீரையும் உண்டு ஆவியாக்காமல் அணைவதுபோல் தெரியவில்லை. நிகழ்விற”
>
LikeLike
[…] கவிஞனின் புன்னகை […]
LikeLike
[…] கவிஞனின் புன்னகை […]
LikeLike