வெற்றிக்கு இன்னும் 5 ரன்கள் தேவை நியூசிலாந்திற்கு. ஆட்டத்தின் கடைசிப்பந்துக்கு முந்தைய பந்தை சவுத் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் வீசுவதற்கு தயாராகிறார். சற்று பதட்டம் அவர் உடம்பின் அத்தனை பாகங்களிலும் இழையோடுவதை அவர் முகத்தை நோக்கி குவிந்த கேமிராக்கள் நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அதை மறைத்து விட அவர் முயன்று தோற்றதற்கு அவருடைய விரிந்த இரு விழிகளுமே சாட்சி. இப்பதற்றப் பந்தை எதிர்கொள்வதற்கு காத்திருந்த. எலியட்டிற்கு பதற்றம் இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை. அவர் முகத்தை மறைந்திருந்த தலைக்கவசத்தின் முகப்பாதுகாப்பு வளையம் அவருடைய பதற்றத்தை நம்மிடமிருந்து மறைத்து விடுகிறது.
சீரான தப்படிகளில் நடுவரைக் கடந்து உடம்பை வில்லாய் வளைத்து தன் பந்தை அம்பாய் செலுத்துகிறார் ஸ்டெயின். எலியட்டின் வலது திசையில் சற்றுக் குறைந்த அளவில் விழுந்து விலகிச் சென்ற பந்தை துப்பாக்கியிலிருந்து விடுபட்ட தோட்டாவைப்போல லாங் ஆன் திசை நோக்கி பறக்க விடுகிறார் எலியட்ஸ். மட்டையில் பட்டு மேலெழுந்த பந்து வானில் ஒரு மாய அரைவட்டமடித்து எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்து நியூசிலாந்தை 2015 ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஒட்டுமொத்த சவுத் ஆப்பிரிக்க அணியினரும் தாங்கள் தவறவிட்ட விமானத்தை கண்ணீர் மல்க பார்ப்பது போல் அப்பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பறந்து செல்வதை பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து நாமும் நொறுங்கிப் போகிறோம். உலககோப்பை துரதிருஷ்டம் அவர்களை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
தான் கொண்டிருந்த பதற்றம் தணிந்திருந்தாலும், சோகத்தில் எடை தாளாமல் கீழே முழங்காலிட்டு விழுகிறார் ஸ்டெயின். உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கீழே சரிவதைப் பார்த்து தங்களுடைய மகிழ்ச்சியை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு எலியட்டும் மறுமுனையில் நின்றிருந்த வெட்டோரியும் கரம்பிடித்து ஸ்டெயினை தூக்கி விட்டு ஆசுவாசப்படுத்துகிறார்கள். சோகத்திலும் வெறுப்பிலும் இயலாமையிலும் கலங்கியிருந்த கண்களிலிருந்த நீரை மகிழ்ச்சியாய் நம் கன்னங்களில் உருண்டோட வைக்கிறது நியூசிலாந்து அணியினரின் இச்செய்கை.

வரலாறு மீண்டும் இந்நிகழ்வை 2019 உலககோப்பையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இம்முறை சவுத் ஆப்பிரிக்காவிற்குப் பதிலாக கிளைவ் லாய்ட், விவியன் ரிச்சர்ட்ஸ்,மால்கம் மார்சல், கோர்ட்னி வால்ஸ், பிரையன் லாரா என உலக கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவனாக இருந்து உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆடும் நிலைக்கு கீழிறங்கி விட்ட வெஸ்ட் இண்டீஸ். இன்னும் ஏழு பந்துகள் உள்ளன. ஆறு ரன்கள் தேவை வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு. கைவசம் இருப்பது ஒரு விக்கெட் மட்டுமே. டேல் ஸ்டெயின் வீசிய அதே மாதிரியான பந்தை நியூசிலாந்தின் நீசம் வீசுகிறார். எலியட் அடித்ததுபோலவே அப்பந்தை எதிர்கொண்ட பிராத்வைட் லாங் ஆன் திசை நோக்கி தூக்கி அடிக்கிறார். எல்லைக் கோட்டுக்கருகில் ஒரு அடி பின்னால் போயிருந்தாலும் சிக்சர் ஆயிருக்க வேண்டிய பந்தை தன்னுடைய தடுமாற்றங்களை தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டிரெண்ட் போல்ட் எம்பிப் பிடிக்கிறார். டேல் ஸ்டெயின் விழுந்ததைப் போலவே பிராத்வைட்டும் துவண்டு விழுகிறார்.அவருடைய ஒட்டுமொத்த செஞ்சுரியும் இந்த ஒரு பந்தில் அர்த்தமற்றுப் போகிறது.
அவரைத் தூக்கிப் பிடித்து தேற்றுகிறார்கள் நீசமும் வில்லியம்சனும். விளையாட்டுகள் நாடு, தேசியம் போன்றவற்றை நிலை நிறுத்துவதற்காகவும், பிற நாட்டவரின் மேல் தேசபக்தி என்ற பெயரில் வெறுப்பை வளர்ப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் என்று சில அறிவுஜீவிகளால் சொல்லப்பட்டாலும், இதுபோன்ற நிகழ்வுகள் அதை பொய்யாக்குகின்றன. வெற்றியில் துள்ளுவதும், தோல்வியில் துவழ்வதும் மனித இயல்பு. ஆனால் தன் வெற்றிக் கொண்டாட்டத்தை சிறிதளவேனும் தோல்வியுற்றவர்களுக்காக தளர்த்திக் கொள்வது, கடவுளின் இயல்பு. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினருக்கென்று ஒரு பிரத்யேகமான இடம் நம் மனதில் எப்போதுமுண்டு.
