
தோனி தன்னுடைய எடையை இவ்வளவு கனமாக இதுவரை உணர்ந்திருக்கமாட்டார் என்றே எண்ண வைத்தது அவருடைய தளர்ந்த நடை. தலயின் தலை பக்கவாட்டில் துவள மனதே இல்லாமல் ஆற்றலிழந்த ரோபோ போல பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்தார். இந்தியாவிற்கு இன்னொரு முறை உலகக்கோப்பை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியது; இனிமேல் இப்படியொரு வாய்ப்பு தனக்கு கிடைக்கப் போவதில்லை என்ற நிதர்சனம்; எப்பொழுதுமே தத்தளிக்கும் இந்தியப்படகை பாதுகாப்பாக கரை சேர்த்து விடும் தோணியாகிய நான், சமீபகாலங்களாக அதைச் செய்ய முடிவதில்லை என்ற உள்ளுணர்வின் உறுத்தல் என அனைத்தையும் சேர்த்து சுமந்து கொண்டு தான் தோனி தன்னுடைய உலகக்கோப்பையின் கடைசி ஆட்டத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறியிருக்கிறார்.
மீதியிருந்த 10 பந்துகளில் வெற்றிக்கு தேவையான 20 சொச்ச ரன்களை அடித்திருப்பாரா என்ற அவநம்பிக்கையை இல்லாமல் செய்திருந்தது அதற்கு முந்தைய பந்தில் அவர் சிக்சர் அடித்த விதம். வலது ஸ்டெம்புக்கு வெளியே தலைக்குமேல் எழும்பிச் சென்ற பந்தை மணிக்கட்டை மட்டும் சுழற்றி பாயிண்ட் திசையின் எல்லைக் கோட்டிற்கு மேல் பறக்க விட்டது இந்திய ரசிகர்களுக்கு அவர் ஆட்டத்தின் மேலிருந்த அவநம்பிக்கையை மட்டும் போக்கவில்லை. அவர் இதேபோல் மணிக்கட்டைச் சுழற்றி மிட்விக்கெட் திசையில் சிக்சர் அடித்து வெற்றிபெற்ற 2011 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தையும் ஞாபகப்படுத்தியது.
துளிர்த்த நம்பிக்கையை அடுத்த பந்திலேயே அஸ்தமிக்கச் செய்தார் ஃபைன் லெக் திசையிலிருந்து புயலாய் பறந்து வந்து தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ஸ்டெம்புகளை சிதறடித்த கப்டில். தோனியை ரன் அவுட் செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. அங்கே இரண்டு ரன்கள் எடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருந்த காரணத்தினால் தான் முதல் ரன்னிற்கே ஓடினார் தோனி. ஆனால் காலத்தின் கணக்கு கப்டில் வடிவில் இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சிதைத்துப் போட்டு விட்டது. நியூசிலாந்து இத்தொடரில் பெற்ற அனைத்து தோல்விகளுக்கும், சறுக்கல்களுக்கும் முக்கியமான காரணமாக அமைந்தவர்களில் ஒருவர் கப்டில். அதையனைத்தையும் இந்த துல்லியமான ஒரு த்ரோ மூலம் சரிசெய்து கொண்டிருக்கிறார்.

தோனி ஒரு முனையில் நிற்கும்போது ஜடேஜாவிற்கு எங்கிருந்துதான் இந்த ஆற்றல் வருமென்று தெரியவில்லை. ருத்ர தாண்டவமாடியிருக்கிறார். 5 ரன்களுக்குள், உச்சத்திலிருந்த ரோகித், கோலி மற்றும் ராகுல் என்ற மும்மூர்த்திகளை சரித்து, 96 ரன்களை எட்டுவதற்குள் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்தின் கையிலிருந்த வெற்றிச் சாம்பெய்னை தோனியின் துணையுடன் கிட்டத்தட்ட அவர்கள் உதட்டை எட்டவிடாமல் செய்துவிட்டார் ஜடேஜா. தன்னுடைய 50ஐ எட்டிய பிறகு சிலம்பு சுத்துவதுபோல் பேட்டைச் சுற்றி நான் யாருக்கும் சளைத்தவனல்ல என்று பெவிலியனை நோக்கி தன் இரு கைகளையும் உயர்த்திக் காட்டினார். “You are Strong…You are strong…” என பெவிலியனில் உட்கார்ந்திருந்த ரோகித் தன் புஜங்களை தொட்டுக்காட்டி ஜடேஜாவின் செய்கையை ஆமோதித்தார்.

தோனி தான் ஆட்டமிழக்கும் அடுத்த நொடியே இந்தியாவின் வால்ப்பகுதியை மிதித்து அதன் துடிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற தவிப்பிலேயே ரன்களை குவிக்க வேண்டிய பாரத்தை 48வது ஓவர்வரை ஜடேஜா மேல்தான் சுமத்தியிருந்தார். ஒரு 45 நிமிடம் மோசமாக விளையாடியதில் உலகக்கோப்பை தொடர் முழுவதும் நன்றாக விளையாடியது அர்த்தமற்றுப் போனது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை மூன்று முழுநேர பேட்ஸ்மென்களை மட்டுமே வைத்துக் கொண்டு உலகக்கோப்பையை வெல்லமுடியாது என்பதும். ரிசப்பும், கார்த்திக்கும் எப்போதும் தவானையோ, கேதாரையோ ஈடுசெய்ய முடியாது. தவானிற்குப் பதிலாக அம்பதி ராயுடு போன்றவர்கள் திரும்ப அணிக்கு அழைக்கப்படாததும், அணியிலிருந்தும் கேதாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும் எளிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புரியாத கிரிக்கெட்டின் வியாபார அரசியல். இந்திய பேட்டிங் வரிசையில் இருந்த இந்த மிகப்பெரிய துளையை மறைத்திருந்த மூடியை தங்களுடைய துல்லியமான பந்துவீச்சின் மூலம் சாம்பெய்ன் பாட்டில் மூடிபோல ‘டொப்..’ என்று திறந்து போட்ட நியூசிலாந்திற்கு வாழ்த்துக்கள்.
