
பெரும்பாலும் இந்த உலகக் கோப்பை போட்டிகளைப் பற்றி எழுத ஆரம்பிக்கும்போது எங்கிருந்து தொடங்குவது என்பதில் அவ்வளவாக குழப்பமிருந்ததில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இதுவரை மறைந்திருந்த விதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த இறுதிப்போட்டியை எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. உடைத்துப் பொங்கும் சாம்பெய்ன் போல ஆச்சரியங்களும், உணர்வுகளும் கொப்பளித்து வழிந்து கிடக்கிறது, கிரிக்கெட்டர்களின் கனவு நிலமான லார்ட்ஸ் மைதானத்தில். சூப்பர் ஓவரிலும் அடித்த ரன்கள் சமமாகும் பட்சத்தில், இழந்த விக்கெட்டுகளை விட, அடித்த பௌண்டரிகளின் அடிப்படையில் மட்டுமே இங்கிலாந்தை வெல்ல வைத்து “Cricket, Always a Batsmen’s game…” என்ற கூற்றை உறுதி செய்திருக்கிறது ICC.
ஒட்டுமொத்த உடம்பையும் அதன் இயல்பு நிலையில் இருக்க விடாமல் முறுக்கிப் பிழிந்து பந்து வீசியவர்களுக்கும், இது புல்தரையா, இல்லை பனிச்சறுக்குத் தளமா என சந்தேகிக்க வைத்த பீல்டர்களின் சறுக்கிற்கும் எந்த மதிப்புமில்லாமல் போனது நியூசிலாந்தின் துரதிர்ஷ்டமே. அதிலும் கவர் திசையில் குப்புறப் படுத்தார் போல் சறுக்கிய ஃபெர்குசனும், தன் முழங்காலை துடுப்பாக்கி சறுக்கிய சௌத்தியும் பிடித்த கேட்சுகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. எல்லைக் கோட்டருகே நிகழும் தன்னுடைய தடுமாற்றங்கள் அனைத்தையும் எப்போதும் தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டிரெண்ட் பௌல்ட், கடைசி நொடியில் தன் கட்டுப்பாட்டை இழந்து பென் ஷ்டோக்ஸ் மிட் ஆன் திசையில் தூக்கி அடித்த பந்தை பிடித்தவாரே எல்லைக் கோட்டில் தடுமாறி நிலைகுலைந்தது நியூசிலாந்தின் வெற்றியையும் நிலைகுலையச் செய்து விட்டது.


தன்னுடைய தடுமாற்றத்தால் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்து விடவேண்டும் என்று ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசத் தயாராகிறார் டிரெண்ட் பௌல்ட். பென் ஷ்டோக்ஸ் இங்கிலாந்திற்கான முதல் உலகக்கோப்பையை பெற்றுத் தருவதற்கு இன்னும் 15 ரன்களை எடுக்க வேண்டும். இருவரும் தங்களை இயல்பாக வைத்துக் கொள்வதிலேயே முனைப்புடன் இருந்தார்கள். தன்னுடைய யார்க்கர்கள் மூலம் ஷ்டோக்சை பேட்டிங் கிரீசிற்குள்ளேயே சிறைவைக்கிறார் பௌல்ட். முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதுமில்லை. தன்னுடைய நிதானத்தை இழந்தவர்போல் தோன்றிய இடதுகை ஆட்டக்காரரான ஷ்டோக்ஸ், அடுத்த பந்தை தன் இடதுகாலை வலது ஸ்டெம்ப் திசையில் நகற்றி சற்றே குனிந்து சரிந்த X வடிவமாகி முழு ஆற்றலுடன் மிட் விக்கெட் திசையை நோக்கி பறக்க விடுகிறார். காற்றில் வரைந்த வானவில்லாய் பார்வையாளர்களை சரணடைகிறது பந்து.
மீதியிருக்கும் மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள். நேர்மறையாக(Positive) விளையாடுகிறேன் என்ற பெயரில் கிறுக்குத்தனமாக தன்னுடைய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு மத்தியில் விடி வெள்ளியாய்த் தெரிந்த ஷ்டோக்ஸின் திறமையோடு அதிர்ஷ்டமும் இப்போது கைகோர்த்துக் கொண்டது. மீண்டுமொரு 6 ரன்கள் அடுத்த பந்தில். இம்முறையும் அதே திசையில் அடிக்கப்பட்ட, ஆனால் தரையோடு உருண்டோடிச் சென்ற பந்திற்காக. மிட் விக்கெட் திசையிலிருந்த பந்து கண நேரத்தில் ஃபைன் லெக் திசைக்கும் தேர்ட் மேன் திசைக்கும் நடுவில் எல்லைக் கோட்டை கடந்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எப்பொழுதும், தன் இருகைகளையும் உயர்த்திக் காட்டி 6 ரன்களை அறிவிக்கும் நடுவர், தன் நான்கு விரல்களை மடக்கி, மீதியிருக்கும் ஆறு விரல்களை காண்பித்து ஆறு ரன்கள் என்று அங்கு நிலவிய குழப்பத்தை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வருகிறார். ஒட்டு மொத்த மைதானமும் பார்வையாளர்களோடு சேர்ந்து அதிர்ந்து கொண்டிருக்க, எதற்கும் அதிர்ந்து பேசாத கேன் வில்லியம்ஸ் இப்போதும் அதே அமைதியோடு நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்கிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஆறு ரன்கள் அடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். தோனியை ரன் அவுட் செய்து இந்தியாவின் உலகக்கோப்பை கனவை சிதைத்த கப்டில் இங்கிலாந்தின் கனவையும் அதே பாணியில் சிதைக்க முயலும்போதுதான் இந்த துரதிர்ஷ்டம் நிகழ்கிறது. கப்டிலால் விக்கெட் கீப்பரை நோக்கி துல்லியமாக எறியப்பட்ட பந்திலிருந்து தப்பிக்க முயன்ற ஷ்டோக்ஸின் பேட்டில் பட்டுத் திரும்பிதான் எல்லைக் கோட்டை தாண்டியிருக்கிறது அப்பந்து. இதை ஷ்டோக்ஸ் வேண்டுமென்றே செய்திருந்தால் “Obstructing the Field..” என்ற விதியின்படி தன்னுடைய விக்கெட்டை இழந்திருப்பார். ஆனால் இது மிக எதார்த்தமாக நிகழ்ந்த ஒன்று. எனவே அதிர்ஷ்டவசமாக ‘Overthrow…” விதிகளின்படி ஆறு ரன்கள் கிடைக்கிறது இங்கிலாந்துக்கு. அடுத்த இரண்டு பந்துகளில் ஒவ்வொரு முறையும் இரண்டாவது ரன்னிற்காக ஓடி தன் விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை சமன் செய்கிறது இங்கிலாந்து.
விரக்தியில் ஷ்டோக்ஸின் கையிலிருந்த பேட் சுழன்று கொண்டே கீழே விழுகிறது. மீண்டும் குழப்பங்கள் சூழ்ந்த மைதானமாகியது லார்ட்ஸ். தரப்பட்ட சூப்பர் ஒவரும் கிட்டத்தட்ட ஆட்டத்தின் கடைசி ஓவரையே பிரதிபலித்தது. விம்பிள்டன் பார்ப்பதைப் போல இருக்கையை விட்டு நகராமல் தலையை மட்டும் இருபக்கமும் திருப்பி திருப்பி கிரிக்கெட்டையும் பார்க்கும் கோட் சூட் அணிந்திருந்த லார்ட்ஸ் கணவான்கள் நிலைகொள்ளாமல் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள். சூப்பர் ஓவரின் கடைசிப் பந்து, நியூசிலாந்திற்கு தேவை இரண்டு ரன்கள். ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளத் தயாராகிறார் கப்டில். இருவரின் உடல்மொழியும் பதற்றத்தில் முற்றிலும் மூழ்கியவர்களையே ஞாபகப்படுத்தியது. நல்லவேளை இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றே எண்ணத் தோன்றியது. இல்லையென்றால் இப்பதற்றம் நம்மையும் மூழ்கடித்திருக்கும்.
இருவருமே எதையும் புதிதாகவோ இல்லை விபரீதமாகவோ முயற்சிக்கவில்லை. நெருக்கடி தருணங்களில் எளிய அடிப்படையான விஷயங்களைப் பற்றிக் கொள்வதே சரியான தீர்வு என்பதைப் புரிந்து கொண்டவர்கள். நல்ல அளவில் இடது திசையில் விழுந்த பந்தை முன் சென்று மிட்விக்கெட் திசையை நோக்கி மெதுவாக தள்ளிவிட்டு இரண்டாவது ரன்னிற்காக; தனது அணியின் முதல் உலகக்கோப்பைக்காக பேட்டிங் கிரீசை நோக்கி ஓடிவருகிறார் கப்டில். வர்ணனையாளர் பதற்றத்தில் தனது இருக்கையிலிருந்து எழுந்தவாரே உச்சஸதாயில் “Can he make it…” என்கிறார். அப்பந்தை எல்லைக்கோட்டிலிருந்து ஓடி வந்து சேகரித்து ஜோஸ் பட்லரின் பாதுகாப்பான கையுறைகளை நோக்கி வீசுகிறார் ஷ்டோக்ஸ். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்தை 241 ரன்கள்வரை இழுத்துச் சென்ற அதே இரட்டையர்களின் மீண்டுமொரு கூட்டுமுயற்சியில் இங்கிலாந்து ஒரு வழியாக கரைசேர்ந்தே விடுகிறது.

பேட்டிங் கிரீசை நோக்கி சறுக்கியவாரே, அங்கே ஏற்கனவே பட்லரால் சாய்க்கப்பட்டிருந்த இருந்த ஸ்டெம்புகளை நோக்கிப் பயணிக்கிறார் கப்டில். அவருடைய வாழ்வின் துயர்மிகுந்த பயணம் இதுவாகத்தான் இருக்க முடியும். பதற்றம், இயலாமை, வெறுப்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்து முகம் துடிக்க, உடலதிர அவர் கண்களிலிருந்து வழிந்த நீரை துடைப்பதற்காக விரைந்து வருகிறார் வில்லியம்சன் என்ற தச்சனின் மகன். கூடவே, தனது அணியினரின் பேட்டிங் போதாமைகள்; அந்தப் போதாமையை மட்டுமே காரணம் காட்டி தங்களுடைய உலகக்கோப்பை வெற்றியை பறித்துக் கொண்ட விசித்திரமான ICC விதிகள்; இறுதிப் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து வரும் துரதிர்ஷ்டம் என்ற அனைத்து பாவங்களையும் சுமந்து கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல்.
