
தோல்விகளைக் கொண்டாடத் தெரிந்த சமூகங்கள் முதிர்ச்சியானவை என்பார்கள். மோடியின் தோள்களில் புதைந்திருந்த சிவன் கலங்கியிருந்தாலும், அந்த கண்களின் தீர்க்கத்திற்கு குறைவில்லை. இவர் வகிக்கும் பொறுப்புக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைத் தாண்டி தேவைப்படுவது ஒன்றில் தன்னைக் கரைத்துக் கொள்ள உதவும் அர்ப்பணிப்பும், அதிலிருந்து எழும் பொறுப்புணர்ச்சியும்தான். இவ்விரண்டும்தான், கலங்கியிருந்த சிவனின் கண்களில் நிரந்தரமாக குடியிருக்கும் அந்த தீர்க்கத்திற்கு காரணமாக இருக்க முடியும். இதுபோன்ற தீர்க்கமானவர்களின் தோல்விகளை ஒட்டுமொத்த இந்தியாவும் தாங்கிப் பிடிப்பதில் ஆச்சரியமில்லை.
சந்திராயனின் ஒட்டுமொத்த பயணத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்த திரைகள் அடங்கிய அந்த பிரமாண்ட அறையில் ‘Sky is no longer the Limit’ என்ற வாசகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. வானவியலைப் பொறுத்தவரை நம்முடைய பிரத்யட்ச அறிவைத் (புலனறிவு) தாண்டிய அனுமானங்கள்(ஊகங்கள்) தான் அதன் எல்லைகளைத் தீர்மானிக்கின்றன. இந்த எல்லைகளைத் தொடர்ந்து மீறும் ஆளுமைகளில் ஒருவர் சிவன். இது போன்ற ஆளுமைகளை தொடர்ந்து உற்பத்தி செய்யும் ISRO, DRDO போன்ற அமைப்புகளின் நிர்வாகத் திறனும், பயிற்சி முறைகளும் கூடுமானவரை பிற அரசு அமைப்புகளாலும் பின்பற்றப்பட வேண்டும்.