கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை; கடவுள் தான் இவ்வுலகம் என மகாயான பௌத்தம் சொல்லும். இது நாத்திகமா? இல்லை ஆத்திகமா?. கடவுள் இல்லை என்பது நாத்திகமானால், கடவுள்தான் இவ்வுலகமாக இருக்கிறார் என்ற பௌத்தம் ஆத்திகம்தான். கடவுள்தான் இவ்வுலகைப் படைத்தார் என்பது ஆத்திகமானால், பௌத்தம் நாத்திகம்தான்.
தலைசுற்ற ஆரம்பிக்கிறது. கடவுள் இல்லை என்பதும்; கடவுள் இவ்வுலகை படைக்கவில்லை என்பதும் எப்படி வெவ்வேறாக இருக்க முடியும். எளிய மனங்கள், தங்கள் நிலையாமையை கடந்து செல்வதற்காக உருவாக்கிக் கொண்ட கடவுள் என்ற கருத்தாக்கத்தை விளக்க முயன்ற வைதீகமும், அது கலந்த மகாயான பௌத்தமும் நம்மை குழப்பியடிக்கின்றன. கடவுள்தான் இவ்வுலகை படைத்தார் என்பதை அறுதியிட்டு கூறுகின்றன வைதீகமான இந்து மதமும், பிற தீர்க்கதரிசிகளின் மதங்களான கிறிஸ்துவம், இஸ்லாம் போன்றவைகளும். மகாயான பௌத்தம் கடவுளின் படைப்புத் திறனை மறுதலித்து அவர்தான் இவ்வுலகமாக அல்லது புத்தரின் உடலாக (தர்மகாயம்) இருக்கிறார் என்கிறது.
இதை எளிமைப்படுத்த முயன்றால், கடவுளுக்கு படைப்புச் சிறகுகள் பொருத்தும் மதங்கள் ஆத்திக வகை; அச்சிறகுகளை கத்தரித்து விடும் மதங்கள் நாத்திக வகை என்ற புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆத்திகம், நாத்திகம் இரண்டிலுமே கடவுள் உண்டு என்பது இதுவரை நாம் கொண்டிருக்கும் புரிதல்களுடன் ஒப்பிடும்போது வேடிக்கையான ஒன்று. இந்த வேடிக்கையை போக்க வேண்டுமென்றால், பௌத்தத்தை ஆத்திக மதமாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த குழப்பங்களுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாமல் தான், பெரியாரின் முதன்மைச் சீடரான அண்ணா ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ (திருமூலரின் வாக்கு) என்று ஆத்திகத்தையும் மதச்சார்பின்மையையும் தனது பாதையாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். திராவிட இயக்கத்தவரைப் பொறுத்தவரை, என்னளவில், பெரியாரின் மேல் கொண்டிருக்கும் மரியாதையும்; கடவுள் நம்பிக்கையும் இணையானவை என்றே எண்ணத் தோன்றுகிறது. இதைப் புரிந்து கொண்டதால்தான், அண்ணா பெரியாரையும் விட்டுத் தரவில்லை. மதங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விடவில்லை.
இது அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் நினைவாக எழுந்த பதிவு மட்டுமே. அண்ணா பெரியாரை விட்டு பிரிந்த காலத்தில் பெரியாரின் நாத்திகத்திற்கு தூண்டுகோலாக இருந்தது பிராமண எதிர்ப்பு மட்டும்தானா? இல்லை அயோத்திதாசர் வழி வந்த பௌத்த மதப்பற்றும் ஒரு காரணமா என்று தெரியவில்லை.
