அடுக்கி வைக்கப்பட்ட ஒன்றை கலைத்துக் போடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. பெரும்பாலான விளையாட்டுகள் இந்த உளவியலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப் படுகின்றன. ஒரு நீண்ட செவ்வக வடிவ மேஜையின் நடுவில், முக்கோண வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோளங்களை நான்கு திசைகளிலும் சிதறடிக்க வைப்பதில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி தான் ஸ்னூக்கர் என்ற இந்த விளையாட்டின் பலம். மேஜையின் நடுவில் இருக்கும் கோளங்கள் திடீரென நீண்டு வளர்ந்து நடந்து மேஜையின் ஒரு பக்கமாக ஒதுங்கினாலும் நாம் விடுவதில்லை. அதைவிட பெரிய கோளத்தை எதிர் முனையில் இருந்து உருட்டி அவற்றை சிதறடிக்கும் பௌலிங் என்ற விளையாட்டாக வடிவமைத்துக் கொண்டோம்.

கிராண்ட் மால்
மீண்டுமொரு இளைப்பாறல். Out of office set பண்ண வேண்டியது மட்டும்தான் பாக்கி. அதையும் கைப்பேசியிலேயே செய்து கொண்டே, வழக்கமான ஆட்டோ சாரதியுடன் இம்முறை வேளச்சேரியிலுள்ள கிராண்ட் மால் நோக்கி ஒரு பயணம். வேளச்சேரி, பெற்றோர்களின் கனவின் சுமை தாங்க முடியாத குழந்தையாய் விழி பிதுங்கியிருக்கும் சென்னையின் புது வர்த்தக இடம். சிறந்த குடியிருப்பு பகுதியாக வளர்ச்சி அடைவதற்கு முன்னரே தி.நகர் போன்ற வர்த்தக இடமாக மாற ஆரம்பித்து இரண்டு கெட்டான் நிலையிலிருக்கும் ஒரு சுவாரஸ்யமற்ற பகுதி. வேளச்சேரியில் வாசம் செய்பவர்கள் மன்னிக்கவும். ஒவ்வொரு 100 மீட்டருக்கும், தன் இயல்பை மாற்றிக் கொண்டிருக்கும் சென்னைத் தெருக்களின் வழி பயணிக்கும் சுவாரஸ்யம், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளைக் கொண்ட வேளச்சேரியில் கிடைப்பதில்லை. ஆனால், அக்குப்பைத் தொட்டிகளை வெகு சுவாரஷ்யமாக கிளறிக் கொண்டிருந்தார் பசியால் உடல் ஒடுங்கியிருந்த ஒரு கணவான்.
அங்கிருந்த நான்கு பௌலிங் தடங்களும் எங்களுடைய வருகைக்காக காத்திருக்க, குப்பைகள் சூழ்ந்திருந்த கிராண்ட் மால், உள்ளே படுதூய்மையாக ஆள் அரவமற்று நல்வரவு என்றது. உள்ளிருக்கும் இத்தூய்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால் வெளியிலிருக்கும் குப்பைகள் நாம் இன்னும் வளரவில்லை என்று பல்லிளிக்கிறது. விஜியும், மதனும் பௌலிங் நிபுணரும், அதில் நேக்ஷனல் சாம்பியனுமான ஸ்ரீநாத்திடம் ஏற்கனவே உத்திகளை கற்றுக் கொண்டிருந்தார்கள். நான்கு வர்ண டர்பன்களோடு சென்னையில் தரையிரங்கியிருந்த அபிஜித், நான்காவது வர்ணமான இளஞ்சிவப்பில் பளபளத்துக் கொண்டிருந்தார், அங்கிருந்த பெண்களுக்குப் போட்டியாக.
சற்று நேரத்தில் ஒட்டுமொத்த இடமும் நிரம்பியிருக்க, அந்த ஃ வடிவ துளைகள் கொண்ட கனத்த பந்துகளை இலாவகமாக கட்டை, நடு மற்றும் மோதிர விரலால் பற்றிக்கொண்டு ஸ்ரீநாத்தின் கைகள் தன் ஜாலத்தைக் காட்ட ஆரம்பித்தன. ஐந்தடி தூரம் ஓடி வந்த வேகத்தில், கை விரல்களில் இருந்து விடுபட்டு, விசைகொண்டு கிட்டத்தட்ட ஐம்பதடி தூரத்தில் முக்கோண வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நீண்ட வாழிப்பான கழுத்து கொண்டிருந்த குச்சிகளைச் சிதறடித்து திரும்பி வந்தன.
இப்போதுதான் முதன்முறையாக விளையாடுபவர்களில் இருந்து அப்பந்தை சுழல வைக்கும் வித்தை தெரிந்த நிபுணர்கள் வரை இருந்த கலவையான கூட்டம். ஐந்து வருட டோக்கியோ வாசத்தில் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் ஒன்று இந்த பௌலிங் விளையாட்டு. அங்கு ஒவ்வொரு எறிதலுக்கும் இடையே உள்ள இடைவெளியை அஷாகியோ, பட்வைஷரோ கொண்டு நிரப்பிக் கொள்ளமுடியும். இங்கு அது மிஸ்ஸிங். நாம்தான் இன்னும் வளரவில்லையே. தனியறைகளில் கற்றுக் கொள்ளப்படும் விளையாட்டுகளை விட, நம்மை மற்றவர்கள் கவனிக்கும் பொதுவெளியில் கற்றுக்கொண்ட விளையாட்டுக்களை அவ்வளவு எளிதாக நம் உடல் மறப்பதில்லை. எறிந்த பந்துகளை, அடுத்த எறிதலுக்காக திருப்பி அனுப்பி வைக்கும் அந்த இயந்திரத்திலிருந்து சுழன்று கொண்டே வெளிவரும் பந்துகளை மிக இலாவகமாக பற்றிக்கொண்ட விரல்களில் இருந்த நினைவு ஆச்சரியமளிக்கிறது. படித்தவைகளைவிட, செய்து பார்த்தவைதான் நமக்கானச் சொத்து. வெறும் சிந்தனையைவிட, அதனோடு சேர்ந்த உடலுழைப்பு பன்மடங்கு சிறந்தது. ஆனால், உழைக்க மறுக்கும் சிந்தனையாளர்களையும்; சிந்திக்க மறந்த உழைப்பாளிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது இன்றைய முதலாளித்துவம்.
இரண்டு எறிதல்களுக்கு நடுவில் எழுந்த இந்த சிந்தனை எரிச்சலூட்டியது. அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்து வேடிக்கைகளிலிலும் ஒன்றுவதை தடை செய்தது. கிட்டத்தட்ட சிந்தனையும், மதுவும் ஒன்றுதான். இரண்டுமே சுற்றுப்புறத்தை மறக்கச் செய்பவை. ஒரு எல்லையைத் தாண்டும்போது, சிந்தனையாளரும் சரி; குடிகாரரும் சரி, அபாயகரமானவர்களே. நல்ல வேளையாக தனு சேச்சி அங்கிருந்த அனைவருக்கும் வாங்கியிருந்த தண்ணீர் நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. சுற்றிலும் கூச்சல், வித்தியாசமான பந்து எறிதல்கள். நின்றுகொண்டு, நடந்து கொண்டு, தவழ்ந்து கொண்டு, ஓடிவந்து என. ஆனால், பாதைகள் பலவானாலும், அனைவரின் இலக்கும் அங்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நீண்ட வாழிப்பான கழுத்து கொண்ட 10 குச்சிகள்தான்.
ஹேப்லிஸ்
கிராண்ட் மாலில் இருந்த மின்தூக்கியின் பட்டனை அழுத்தியபோது, விரல்கள் சற்று நீண்டு இருந்தது போலிருந்தது. இவ்வளவிற்கும், இருந்ததிலேயே எடை குறைவான பந்தைத்தான் (6 lb) அந்த விரல்கள் தன்னுள் பொருத்தி, இலக்குகளை நோக்கி வீசியிருந்தன. ஒரு வழியாக கிராண்ட் மால் இருக்கும் வேளச்சேரியின் குப்பை வாசங்களைச் சுமந்தவாரே, நறுமணம் கமழும் ஹேப்லிஸ் நட்சத்திர விடுதியை எட்டியபோது மதிய உணவுக்கான மணி வயிற்றில் அடிக்க ஆரம்பித்திருந்தது.
சென்னையை தமிழ்நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் துதிக்கை போன்ற சாலை முடியும் கிண்டியைத் தொட்டபோது, இன்னொரு சென்னையில் நுழைவதைப் போன்ற ஒரு உணர்வு. வேளச்சேரியிலிருந்து 4 கி.மீ தூரம் கூட பயணிக்கவில்லை. ஒரு வேளை கிண்டியின் பிரதானச் சாலையிலேயே ஹேப்லிஸ் இருந்ததால் கிண்டி சற்றே மேம்பட்ட பகுதியாக தோன்றியிருக்கலாம். வண்டியிலிருந்து இறங்குவதற்கு முன்னரே எங்களை சிரத்தையோடு ஏந்திச் செல்ல விடுதியின் பணியாளர்கள் காத்திருந்தார்கள். நட்சத்திர விடுதிக்குரிய சர்வ லட்சணங்களோடு இருந்தது ஹேப்லிஸ். மிக ஒடுக்கமான வரவேற்பரை. ஆனால், அதன் கூரை இருந்த உயரம், அந்த ஒடுக்கத்தை விசாலமாக்கி இருந்தது. வரவேற்பரையின் மையத்திலிருந்து கைக்கெட்டும் தொலைவிலேயே கழிப்பறையும், உணவருந்தும் அறையும் இருந்தன. ஆனால், அவர்களுடைய இடமேலாண்மையின் ( Space mgt) நேர்த்தியும், உள்வேளைப்பாடுகளும் (Interiors) தரைதளத்தில் இருந்த அனைத்து அறைகளையும் வெவ்வேறு தீவுகளாக காண்பித்தன. அனைத்து நட்சத்திர விடுதிகளும் ஏற்படுத்தும் உளமயக்கமிது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல; பெரும்பான்மையான மனித மனங்கள் விரும்புவதும் இந்த மயக்கத்தைத் தான். எப்போதுமில்லா விட்டாலும், சில சமயம் இதுபோன்ற மயக்கங்களும் தேவைதான்.

விருந்து
அளவில்லாமல் அனைத்து வகை உணவுகளையும் உண்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த பஃபட்டுகள். பெரும்பாலும், இரவு நேரங்களில் மட்டுமே உண்ணப்படும் இந்த கலவை உணவு, இப்போதெல்லாம் மதிய நேரங்களிலும். ஒரு வகையில் நல்லதுதான். திடீரென, பட்டர், பியர், இத்தாலியன் மணம் மற்றும் நிறமூட்டிகளில் தோய்த்தெடுக்கப்பட்டு வழவழப்போடு நாவில் வழுக்கிச் செல்லும் கோழியின் கால்கள் மற்றும் ஆட்டின் தொடை என அனைத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வயிறு திக்குமுக்காடி இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட நேரம் தேவை. எனவே மதிய வேளையே, இது போன்ற கலவை உணவுகள் அடங்கிய பஃபட்டுகளுக்கு உகந்த நேரம்.

ஒட்டுமொத்த அணியினரையும், அந்த நீண்ட செவ்வக வடிவ உணவு மேஜையில் பார்ப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். கிட்டத்தட்ட 30 பேர். தினமும் பார்க்கும் முகங்கள்தான் என்றாலும், அத்தனை பேர் முகத்திலும் ஒரே சமயத்தில் சின்ன பூரிப்பை காண்பது ஒரு புது அனுபவம்தான். பசியூட்டிகள் வர ஆரம்பித்தன. பசி பொறுக்க முடியாத சிலரின் தட்டுக்களில் இத்தாலியன் பாணியில் சமைக்கப்பட்டிருந்த கோழிகள் நிரம்பி, அவர்களின் வாயையும் நிறைத்து கன்னங்களை உப்பச் செய்திருந்தன. பசியூட்டிகளை பரிமாற வந்த சிப்பந்திகள் ஏற்கனவே சிலரின் தட்டில் இருந்த முதன்மை உணவான இக்கோழிகளைக் கண்டு சற்று பதற்றமானார்கள். நட்சத்திர விடுதிகள் எதிர்பார்க்கும் சில ஒழுங்குகள் நமக்கு பெரும்பாலும் பொருந்துவதில்லை. ஆனால் இந்தப் பதற்றங்களை எதிர் கொள்வதற்கு அருமையாக பழக்கப்பட்டிருந்தார்கள் அங்கிருந்த சிப்பந்திகள். பளீரென்ற வெள்ளை நிறச் சட்டை. இடையில் இருக்கி கட்டியிருந்த வெள்ளைத் துண்டு, வெள்ளைச் சட்டையை லாவகமாக அவர்கள் அணிந்திருந்த கருப்பு நிற பேண்ட்டோடு இணைத்திருந்தது. மிக முக்கியமாக, அவர்களுடைய பதற்றத்தை புன்னகை என்ற அணிகலன் கொண்டு மறைத்திருந்தார்கள். இந்தியாவின் விடுதிகளில், விருந்தோம்பல் ( hospitality) ஒரு புதிய உச்சத்தை எட்டியிருப்பதற்கு இந்த இளையவர்களின புன்னகையே சாட்சி.
இசை
பசியூட்டிகளும் மதுவும் தொடர்ந்து பரிமாறப்பட்டு கொண்டே இருந்தது. உணவகமும் நிறைந்து கொண்டே இருந்தது. கிராண்ட் மாலில் விளையாட்டு எங்களை பிணைத்திருந்தது. இங்கே இசை. நிறைய பாடகர்கள் அணியில். வழக்கம்போல் ராஜா, சித் ஸ்ரீராம் எனத் தொடங்கி கர்நாடிக் இசைவரை சென்றது. பாரதியாரும் இருந்தது ஒரு ஆச்சரியம். வயிற்றுக்கு மட்டுமல்ல, செவிக்கும் கலவையான உணவுதான். இரண்டையுமே உடல் எளிதாக செரித்துக் கொண்டது. இசை, உணவு, விளையாட்டு மற்றும் காமத்தில் மட்டும்தான் நாம் உடல், உள்ளம் என்று பிளவுபட்டிருப்பதில்லை என்கிறார்கள். உடலும், உள்ளமும் ஒத்திசைவோடு இயங்கும் ஒரு வகையான அத்வைத தருணங்களைத் தருவதில் இந்நான்கும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆரோக்யமான சமூகங்களில், இந்நான்குமே சரியான அளவில் பேணப்படுகின்றன.
ஒவ்வொருவராய் விடை பெற ஆரம்பித்தார்கள். ஒரு சிப்பந்தி தாழ்மையோடு வந்து, ” Sir, we are closing for the lunch..” என்றவுடன்தான் பிரக்ஞை தட்டி மணிக்கட்டை நோக்கியபோது மணி நான்கைத் தொட்டிருந்தது. இந்நிகழ்வை சாத்தியப்படுத்தி துல்லியமாக ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு, பிரதான சாலையை நெருங்கியபோது வெயில் மறைய ஆரம்பித்திருந்தது. வெள்ளிக்கிழமை மாலைக்கான பரபரப்பில் இருந்தன சாலைகள். காத்திருந்த ஆட்டோ சாரதியின் வண்டியிலிருந்து, ‘ வானமகள் நாணுகிறாள்…வேறு உடை பூணுகிறாள்…இது ஒரு பொன்மாலைப் பொழுது…” என ராஜா அந்த மாலையை மேலும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தார்.