
ராணுவத்தினருக்கு தயாரிக்கப்படும் காலணிகளுக்கான ஒப்பந்தத்தை அவர்களுக்கு கொடுக்கலாம் என்கிறார் ஒருவர். இன்னொருவர், மருத்துவமனைத் துணிகளை துவைத்து சுத்தமாக்கித் தரும் ஒப்பந்தத்தை கொடுக்கலாம் என்கிறார். இவை அனைத்தும், ஷரிஜன மக்களின் மேம்பாட்டுக்கான ஆலோசனை வேண்டி நடத்திய கூட்டத்தில் இந்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட யோசனைகள். அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சமூக சேவகர்களில் ஒருவரான கிருஷ்ணம்மாள் தன் முறை வந்தபோது, அவர்களுக்கு தேவை ‘சொந்த நிலம்’ என்றார்.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, அம்மக்களோடு ஒன்றாய் கலந்து வாழ்ந்தவரான கிருஷ்ணம்மாள் அவர்களின் இந்த பரிந்துரை, அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய இப்புத்தகத்தைப் படிக்கும் நம்மை ஆச்சரியப்படுத்த போவதில்லை. உழுபவனுக்கும் நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் என்ற உன்னதத்தை தங்கள் காந்திய போராட்டங்களின் வழியாக உணர்ந்து சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த காந்தியவாதிகளான இவரும், சமீபத்தில் மறைந்த இவருடைய கணவர் ஜெகந்நாதனும். காந்தி கிராமத்தில் தங்கி தனது சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள் அவர்களின் வயது 94.
காந்தியின் எளிமை இந்தியாவின் வறுமையை பறைசாற்றுவதற்காக அல்ல. தன்னைக் காப்பவர்கள் தன்னைவிட மேலான வர்க்கத்தில் இருந்துதான் வரமுடியும் என்ற நிலப்பிரபுத்துவ மயக்கத்தில் இருந்த கோடானுகோடி இந்தியர்களின் உளவியலை மாற்றுவதற்கான வழிமுறை. அர்ப்பணிப்பும், சேவையுணர்வும் கொண்ட எவரும் இந்த தேசத்தின் தலைவனாக முடியும் என்ற உலகத்திற்கான அறைகூவல். இந்தியா ஜனநாயகத்திற்கு தயார் என்ற சமிக்ஞையும்கூட. இதுதான் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ என்ற புத்தகத்தைப் படித்தபோது எனக்குக் கிடைத்தப் புரிதல். காந்தியிடம் இருந்து பெற்றுக் கொண்ட இந்த எளிமையின் மறு உருவம் தான் அவருடைய முக்கியச் சீடரான வினோபா. இவருடைய பூதான ( பூமிதான) இயக்கத்தில் தன்னை முழு அர்ப்பணிப்போடு இணைத்துக் கொண்டவர்கள்தான் ஜெகன்நாதன்-கிருஷ்ணம்மாள் தம்பதியினர்.
நிலப்பிரபுக்களிடம் இருந்த அபரிதமான நிலங்களை தானமாகப் பெற்று நிலமற்றவர்களுக்கு வழங்குவதுதான் பூதான இயக்கத்தின் திட்டம். மனித மனங்களை முழுமையாக புரிந்து கொண்ட ஞானிகளிடம் மட்டுமே இது போன்ற நம்பிக்கையும், அதை செயல் படுத்துவதற்கான அசாத்திய செயல்திறனும் கைகூடுமென்று தோன்றுகிறது. இது சாத்தியப்பட்டது 50 வருடங்களுக்கு முன்புதான் என்பதை நம்பமுடியவில்லை. இந்த அனுபவங்களைத்தான் ஜெகந்நாதனும், கிருஷ்ணம்மாளும் தனித்தனியாக, தங்களை காந்தி கிராமத்தில் சந்திப்பதற்காக வருகை புரிந்திருந்த லாரா கோப்பர் என்ற இத்தாலியப் பெண்மணியிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மற்றும் இவர்களுக்கு உதவிய மற்ற காந்தியவாதிகளின் அனுபவங்களையும், காந்தி கிராமத்தின் ரம்யமான சூழ்நிலையையும் மிக அருமையாக தொகுத்திருக்கிறார் லாரா கோப்பா. ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தைத்தான் படிக்கிறோம் என்கிற நினைப்பை கொஞ்சமும் வரவிடாமல் அத்தனை உணர்ச்சிகளையும் தெளிந்த நீரோடை போல அருமையாக நமக்கு கடத்துகிறது மகாதேவன் அவர்களின் மொழிபெயர்ப்பு.
சில அத்தியாயங்களைப் படிக்கும்போது நமக்கு எழும் உள எழுச்சியும், சற்றுப் படபடத்து கண்களில் கசிய ஆரம்பிக்கும் கண்ணீரும் அந்த தெளிந்த நீரோடையில் கலந்திருந்த தன்னலமற்ற தியாகிகளின் அகிம்சை வழி போராட்டத்திற்கான சான்று. குறிப்பாக கீழ்வெண்மணி போராட்டங்களும், எமர்ஜென்சி கால ஒடுக்குமுறை அனுபவங்களும் நம்மை பதற வைக்கின்றன. இந்த அனுபவங்களை தன்னிடம் விவரிக்கும்போது எந்தவித மிகையுணர்ச்சியும் அவர்கள் முகத்தில் இல்லை என்பதை ஆச்சரியமாக சுட்டிக்காட்டுகிறார் லாரா. இதனால் பயன்பெற்ற அந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஆசிர்வாதம்தான், இத்தம்பதியரின் இரு குழந்தைகளையும் வளர்த்தெடுத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களுடைய மகனும் மருத்துவருமான பூமிகுமாரிடம் சிலர் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்க, நாங்கள் “பூதான ஜாதி” என்று கண் சிமிட்டியிருக்கிறார். எத்தனை உயர்ந்தாலும் நாம் இன்னமும் சாதியை விட முடிவதில்லை. அதுவும் ஒருநாள் கைவிடப்படும் என்ற நம்பிக்கையைத்தான் இந்த காந்தியவாதிகள் நம் மனதில் விதைக்கிறார்கள்.
இப்புத்தகத்தை தன்னறம் நூல்வெளி மற்றும் குக்கூ காட்டுப்பள்ளி அமைப்பினர் கிருஷ்ணம்மாள் அவர்கள் தங்கியிருக்கும் காந்தி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்வில் வெளியிட்டனர்.
[…] பூதான சாதி […]
LikeLike
[…] பூதான சாதி […]
LikeLike