
எதிர்பாராத நிகழ்வுகளால் நிலைகுலைந்து போகும் குடும்பங்கள், தன்னுடைய சமநிலையை எப்படி மீட்டுக் கொள்கின்றன என்பதை மீண்டுமொரு வித்தியாசமான திரைக்கதை வழியாக சொல்லியிருக்கிறார் பாபநாசம் தந்த ஜீத்து ஜோசப். ஒரு குடும்பத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை மையமாகக் கொண்ட படங்களைத் தருவதற்கு தற்போதைக்கு இவரை விட்டால் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த வகைமையைச் சார்ந்த இயக்குநர்கள் தொடர்ந்து வருவதற்கு இதுபோன்ற படங்களின் வெற்றி சிவப்புக் கம்பளம் விரிக்கலாம்.
Drone வழியாக எடுக்கப்பட்ட முதல் காட்சி, ஒரு சிலுவையை அல்லது ஆவுடையுடன் கூடிய லிங்கத்தை ஞாபகப்படுத்தியது. உயரம் குறையக் குறைய, சிலுவையின் கிடைக்கல்லும் நேர்க்கல்லும் சந்திக்கும் இடம் ஆட்கள் அங்குமிங்கும் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு சதுர வடிவ வெற்று நிலமாக காட்சியளிக்கிறது. இன்னும் உயரம் குறையும்போது, அச்சதுரத்தின் நான்கு பக்கங்களாக இருப்பது அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் நான்கு லாரிகளின் முகப்புகள்தான். லாரிகளை சிலுவையும், லிங்கமுமாய் நமக்குக் காட்சியளிக்க வைக்கும் இந்த கேமரா உத்தி திரைக்கதையிலும் பிரதிபலிக்கிறது. படம் நெடுகிலும், திரைக்கு வெளியே இருக்கும் பார்வையாளர்களை திரையிலிருக்கும் உருவமற்ற கதாபாத்திரங்களாக உருவகித்தே ஒட்டுமொத்த திரைக்கதையும் பயணிக்கிறது. இதுபோன்று பார்வையாளர்களை திரைக்கதையோடு பிணைக்கும் சிரத்தை தான் இப்படத்தை வெகு சுவாரஸ்யமான ஒன்றாக மாற்றியுள்ளது.

இந்த முதல் காட்சியில் காண்பிக்கப்படும், போதையின் மயக்கத்தில் இருக்கும் ஒரு இளைஞன் ( 18லிருந்து 20வயது இருக்கலாம்) தன்னுடைய வீட்டுக்குத் திரும்ப முடியாமல் போவதின் பின்னணியில்தான் இத்திரைக்கதையின் அனைத்து முடிச்சுகளும் பின்னப்படுகின்றன. இது ஒவ்வொன்றும் அவிழும்போது நமக்குக் கிடைக்கும் திகிலும் அதைத் தொடரும் அனுதாபங்களும் தான் இப்படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. இவ்விளைஞனின் தந்தை ஒரு பரம்பரை பணக்காரர், அரசியல்வாதி மற்றும் அவர் தொகுதியைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடிகளின் பிதாமகனும் கூட. பாசத்தையும், கண்டிப்பையும் ஒரு சேரப் பொழியும் அக்கா. பொறுப்பான அம்மா, பாட்டி என அருமையான குடும்பம் இவ்விளைஞனுடையது. ஆனால், இவர்களுடன் ஒன்ற முடியாமல் தடுத்து விடுகிறது அவனுடைய கூடாநட்பில் விழைந்த போதைப் பழக்கம்.
15 வருடங்களுக்குப் பிறகு, அவர்களுடைய தொலைந்துபோன மகனாக நடிக்க அனுப்பி வைக்கப்படும் கார்த்திக் ஒரு ஆதரவற்ற ஏமாற்றுப் பேர்வழி. முதல் பாதி முழுவதும், அவரை மகனாக ஏற்றுக்கொள்ளும் அக்குடும்பத்தினரின் செய்கைகள் சற்று செயற்கையாகவும், முட்டாள்த்தனமாகவும் தோன்றினாலும், இரண்டாவது பாதியில் அக்குடும்பத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கும் சதிவலையில் சிக்கிக் கொண்ட ஒரு சிறு பூச்சிதான் கார்த்திக் என்றுணரும் போது அக்குடும்பத்தின் செயற்கைத்தனத்தில் இருந்த அபாரமான நடிப்பு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அக்குடும்பத்தின் மேலிருந்த பரிதாபம், நமக்கு இப்போது கார்த்திக் மேல் படர்கிறது. அதற்குப் பின் நடக்கும் ஜுத்து ஜோசப் பாணியிலான திருப்பங்கள், கார்த்திக் தங்கள் மகன் இல்லை என்று தெரிந்தும் சத்யராஜும், சீதாவும் அவரை தங்கள் மகனாகத்தான் பாவித்திருக்கிறார்கள் என்றும்; கார்த்திக் தன் தம்பி இல்லையென்று தெரிந்தும், ஜோதிகா அவரைத் தன் தம்பியாகத்தான் பாவிக்கிறார் என்றும் உணரும்போது, நம்முடைய பரிதாபம் மீண்டும் சத்யராஜ் குடும்பத்தின் மேல் படர்கிறது. அக்குடும்பத்தில் கார்த்திக்கும் இப்போது ஒரு அங்கமாக நமக்குத் தெரிகிறார்.

” மீனுக்கு இரையைப் போட்டு நிலத்துல தூக்கிப் போடுறாங்க…” என்று தன்னை நம்பியிருக்கும் பழங்குடி மக்களுக்கு ஏற்படப்போகும் துயரமான இடப்பெயர்ச்சியையும், தனக்கு அரசியலில் இருக்கும் சிக்கல்களையும் பகிர்ந்து கொள்ளும் சத்யராஜின் தொடுகையில் கார்த்திக்கின் முகத்தில் விரியும் தவிப்பு, அனைத்து உண்மைகளும் தெரிந்த பிறகு, ” நீ சாப்பிட்டியான்னு கேட்குறதுக்கு வீட்ல இரண்டு ஜுவன் இருக்குறது எவ்வளவு பெரிய குடுப்பினை தெரியுமாக்கா…” என்று ஜோதிகாவிடம் வெளிப்பட்டு, ” ஒரு அக்கா இருக்குறது இரண்டு அண்ணனுங்களுக்கு சமம்க்கா…” என்று நம் கண்களையும் பனிக்க வைக்கிறது. நுட்பமான காட்சிகள் மற்றும் கூர்மையான வசனங்கள் வழியாக நம்மை ஆட்கொள்கிறார் இந்த ‘தம்பி’.
