தங்களுடைய ‘மினி’யாக திரும்பி தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கும் மகளை, தங்கையை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமல் கனவிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்ததுபோல் முழித்துக் கொண்டிருக்கிறது ஒட்டு மொத்த குடும்பமும். சில தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மினியை வெறுப்பின் உச்சத்தில் உமிழ்ந்து விட்டு வந்திருந்த அவளுடைய மூன்று அண்ணன்களும், ‘அவன வெட்டுடா….’ என்று தூக்கத்தில் அலறிக் கொண்டு எழுந்து அட மினி இங்க நிக்கறா… அப்ப..அப்போ… அதெல்லாம் கனவா… என்ற பாவனையுடன் மினியை நோக்கி எந்த நேரத்திலும் உடைந்து அழுதுவிடும் நிலையில் நிற்கிறார்கள்.
தாங்கள் தேவையில்லை என்று மினி உதறியிருந்தபோது இருந்த கோபமும் வெறுப்பும் கணநேரத்தில் மாறிப்போயிருப்பதின் காரணம் மனித மனங்களின் விந்தையான இயக்கங்களில் ஒன்று. அன்பிலிருந்து வெறுப்பிற்கு, பிறகு மீண்டும் அன்பிற்கு என்று தொடர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் இந்த இயக்கம் தான் வாழ்க்கை என்கின்றன அனைத்துத் தத்துவங்களும். மிகக் குறிப்பாக இதை ஒரு தத்துவச் சிந்தனையாக அல்லது அமைப்பாக கட்டியெழுப்பியவர் ஜெர்மானியத் தத்துவ அறிஞரான ஹெகல். முழுமையிலிருந்து வெடித்துச் சிதறி ( பெரு வெடிப்பு அல்லது Big bang?) மீண்டும் அந்த முழுமையை நோக்கிய ஒரு வித்தியாசமான பயணம் இந்த வாழ்க்கை என்கிறார். அன்பின் உச்சத்தில் இருப்பவர்கள், வெறுப்பை நோக்கிச் சரிவதும், வெறுப்பின் உச்சத்தில் இருப்பவர்கள் மீண்டும் அன்பை நோக்கிச் சரிவதுமாய் இயற்கையும் இவ்வாழ்க்கையைச் சமன் செய்து கொண்டே இருக்கிறது.
இயக்குநர் பாஃசிலின் முத்திரைத் திரைப்படங்களில் ஒன்று காதலுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் மரியாதை செய்யும் இப்படம். தவிப்பும் ஈர்ப்புமாய் செல்லும் விஜய்-ஷாலினியின் காதலை வழக்கம்போல் இரு குடும்பங்களின் பாசமும் அகங்காரமாய் மாறி தடுத்து நிறுத்த முயல்கிறது. காதலின் ஆற்றலில் முளைத்த சிறகுகள் படபடத்து அவ்வகங்காரத்தை சிதறடித்துப் பறக்கின்றன. ஆனால் விரைவில், தங்கள் குடும்பத்தாரின் அகங்காரத்திற்கான காரணம் அவர்களுடைய பாசம் தான் என்பதை உணரும் ஆற்றலையும், முதிர்ச்சியையும் அக்காதலே அவர்களுக்கு அளிக்கிறது. தங்கள் காதல் சிறகுகளை கத்தரித்துக் கொண்டு அவர்களுடைய குடும்பத்தாரிடமே திரும்பி வருகிறார்கள்.
ஒரு சில நாட்களிலேயே, அவ்விரு குடும்பங்களின் அன்னையர்களும் இவர்களின் காதல் சிறகுகளை நனைத்து முடமாக்கியிருப்பதது தங்களுடைய பாசச் சேறுதான் என்பதை உணர்ந்து தவிக்கிறார்கள். இதிலிருந்து , இவர்களையும், இவர்களுடைய வாரிசுகளின் காதலையும் காப்பாற்றிக் கொள்வதற்கான வழியை உருவாக்கி அதை காட்சிப் படுத்திய விதம்தான் ஃபாசில் என்ற இயக்குநரை இன்றும் நம்மை நினைவுகூர வைக்கிறது. அந்த இறுதிக் காட்சிக்காகவே அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே படத்தின் ஆரம்பத்தில் இருந்தே வார்த்தெடுக்கப் படுகிறார்கள். அக்காட்சியில் வரும் ஒவ்வொருவரின் உடல் மொழியோடு பிணைந்திருக்கும் இளையராஜாவின் மெல்லிய வயலின் கலந்த பின்ணனி இசை அக்காட்சிக்கான வார்த்தைகளின் தேவையை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. இறுதியில், தன்முன் தன்னையும் அறியாமல் இருகரம் கூப்பி நின்றிருக்கும் தன் மகள் ஷாலினியை கட்டி அணைத்துக் கொள்ளும் அந்த காட்சி மகள்களை அறிவதில் அவர்களுடைய அன்னையர்களுக்கு நிகர் யாருமில்லை என்பதற்கு மீண்டுமொரு சாட்சி. அந்த அணைப்பின் கதகதப்பில் கடைசித்துளி அகங்காரத்தையும் கரைத்து விட்டு பாசம் எனும் முழுமையை மீண்டும் கண்டடைகிறது அவ்விரு குடும்பங்களும்.