சமீபத்தில் பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்திருந்த 40 கி.மீ மரத்தான் போட்டியை முழுமையாக ஓடி முடித்திருந்த நண்பர், அங்கு வாழும் மனிதர்களின் கவலையும், மகிழ்ச்சியுமற்ற முகங்களைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார். ஆரோவில்லைச் சுற்றி பரபரத்துக் கொண்டிருக்கும் மனித அலைகளின் தாக்கமேதுமின்றி, இயங்கும் வட்டத்தின் இயக்கமற்ற மையப்புள்ளி போல் அவர்களிருப்பது தான் ஓடி முடித்ததைவிட சாதனையாக அவருக்குத் தோன்றியது. உடனே, உலக மறுப்பில் விழைந்த அவர்களுடைய பொறுப்பற்றத் தன்மையை சுட்டிக்காட்ட விரும்பியது என்னுடைய மார்க்சிய மேதாவித்தனம். தமிழ் மார்க்சியர்களான ராஜ் கௌதமன் முத்துமோகன் மற்றும் அவர்களுடைய பிதாமகராகிய தேவிபிரசாத் சட்டோபாத்யா போன்றவர்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதனால் இந்த மேதாவித்தனம் இயல்பாக என்னுள் குடிபுகுந்துள்ளது என்று எணணுகிறேன்.
விழிப்பும் உலக மறுப்பும்
உலகிலுள்ள மதங்களால் சுவீகரிக்கப்பட்ட கருத்துமுதல்வாதம் வலியுறுத்துவது, இவ்வுலகம் நம் புலன்களால் உருவகிக்கப்பட்டது. அதாவது நீரின் குழுமையும், நெருப்பின் வெம்மையும் நம் புலன்களின் மயக்கமேயன்றி உண்மை இல்லை. இப்படி, நம் அக உணர்வின் பிரம்மைகளால் கட்டி எழுப்பப் பட்டுள்ள மாயைதான் (அசத்) இப்புறவுலகம் என்ற தத்துவத்தை நோக்கி கருத்துமுதல்வாதம் நம்மை நகர்த்துகிறது.
உண்மையான உலகம் நம் புலன்களுக்கு எட்டுவதில்லை அல்லது புலன்களுக்கு அப்பாற்பட்டது அல்லது அப்புலன்களால் புரிந்து கொள்ளப்பட முடியாதது. அதனைப் (சத்) புரிந்துகொள்ள புலன்களற்ற நிலையான சுஷிப்தி ( கனவு நிலை) அல்லது முக்தி அல்லது யோக நிலையில் விழித்தெழும் நம் ஆன்மாவால் முடியும் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் கருத்துமுதல்வாதிகள். இது மதங்களில் உள்ள பக்தியின் அடுத்த நிலையான ஆன்மீகம் என்றும் சொல்லலாம்.
கருத்துமுதல்வாதத்தின் இந்த நிலைப்பாட்டை நேர்மறையாக எடுத்துக் கொண்டால், ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்ற உலகியல் எதார்த்தம் புரியவரும். இதனை எதிர்மறையாக எடுத்துக் கொண்டால், ‘உலக மறுப்பு’ அல்லது முற்றும் துறந்தவர்களின் துறவுநிலை என்றும் புரிய வருகிறது.
துறவறமும் அடிமைத்தனமும்
பொருள்முதவாதத்தை சுவீகரித்துக் கொண்ட மார்க்சியம், இச்சமூகம் அல்லது உலகம் என்பது தன்னுடைய நிரந்தர உள்ளடக்கமான பல்வேறு முரண்களின் இயக்கம் என்ற இயங்கியல் தத்துவத்தை முன் வைக்கிறது. இந்த பல்வேறு முரண்களுக்கு தொடர்ந்து தீர்வு காணும் பொருட்டுதான் இவ்வுலகம் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ஆண்டான்- அடிமை என்ற நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து, முதலாளி – தொழிலாளி என்ற முதலாளித்துவ சமூகத்திற்கு என. இந்த வர்க்க சமூகங்களில் இருக்கும் உள் முரண்களை கூர்ந்து அவதானிப்பதால் எழும் புரட்சியின் விளைவுதான் இந்த சமூக மாற்றம் என்கிறது மார்க்சியம். இத்தொடர் புரட்சிகளின் மூலம் வர்க்க பேதமற்ற ஒரு பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்கலாம் என்று மார்க்சியம் நம்புகிறது அல்லது (இலட்சிய) கனவு காண்கிறது. இதனால், மார்க்சியத்தின் எரிபொருளான இவ்வாழ்க்கை முரண்களை மாயை என்று விலக்கித்தள்ளும் ‘உலக மறுப்பு’ தத்துவம் இயல்பாகவே மார்க்சியத்தின் ‘இயங்கியல்’ தத்துவத்திற்கு எதிராக நிற்கிறது.
இந்த உலக மறுப்பை கடைபிடிப்பதற்காக மதங்களால் அல்லது அதன் தீர்க்க தரிசிகளால் பரிந்துரைக்கப்படும் வாழ்வுமுறையை துறவறம் என்கிறார்கள். இதனை, மார்க்சிய ஞானிகள் புலன்களை ஒதுக்கித் தள்ளுவது என்கிறார்கள்; மதஞானிகளோ புலன்களையும் அதன் எல்லைகளையும் அறிந்து கொள்வது என்கிறார்கள். துறவறம் போன்றவை மக்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் உழலச் செய்வதற்காக அதிகார வர்க்கம் செய்யும் சதி என்று ஒற்றைப்படையாக நம்புகிறது மார்க்சியம். பெரும்பாலும், இந்த உலக மறுப்பு போன்றவை நிலப்பிரபுத்துவ காலத்தில் மக்களிடையே பெருகியிருந்த பக்தியை ஆண்டைகள் (பண்ணையார் அல்லது ஜமீன்) தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முனைந்ததில் தான் துவங்கியது என்றும் மார்க்சியம் நம்புகிறது.
நிலையாமையும் நிறைவின்மையும்
இந்த ஆரோவில் போன்ற ஒரு கம்யூன் வாழ்வை வாழ்பவர்கள் எவ்வகை? புலன்களின் எல்லைகளை அறிந்து கொள்ள விரும்புபவர்களா? இல்லை, வாழ்க்கையின் முரணியக்க சக்கரத்தால் தயவு தாட்சண்யமின்றி நசுக்கப் பட்டவர்களா? முதல் வகையினரைவிட, வாழ்க்கையின் நிலையாமையை எதிர்கொள்ள முடியாமல் நசுங்கிப் போயிருக்கும் இரண்டாம் வகையினருக்குத் தான் மதங்கள் தேவைப்படுகின்றன. இதனால்தான் “இதயமற்ற சமூகங்களின் இதயம்தான் மதம்” என்கிறார் போல மார்க்ஸ். ஒரு சிறிய இளைப்பாறலையும், நிலையாமை என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று என அதை கடப்பதற்குத் தேவையான நம்பிக்கையையும் வழங்குவதாகத் தான் மதங்கள் எப்போதும் இருந்து வருகின்றன. இந் நம்பிக்கைக்குப் பிறகும் ஏற்படும் நிறைவின்மையே தன் புலன்களை அறியும் எல்லையை நோக்கி ஒருவரைத் தள்ளுகின்றது. இவர்கள் தான் ஆரோவில் போன்ற கம்யூன் வாழ்க்கையிலோ, அல்லது துறவறத்திலோ தங்களை முழுமையாக பிணைத்துக் கொள்கிறார்கள். இரண்டாம் வகையினருக்கு, இவ்விடங்கள் நீண்ட தூரம் பறக்க வேண்டிய பறவைகள் இளைப்பாறித் தங்களை மீட்டெடுத்துக் கொள்ளும் ஒரு வேடந்தாங்கல் மட்டுமே.
மார்க்சியத்தில், இந்நிலையாமையை கடப்பதற்கான வழியாக ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் முன் வைக்கப்படுகிறது. நிலையாமையையும், நிறைவின்மையையும் அதிகார வர்க்கங்களின் சதியாக உருவகித்து, இச்சதியால் பாதிக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து போராடி ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று அறைகூவல் விடுகிறது மார்க்சியம். உலகின் மிகச்சிறந்த கருத்துமுதல்வாதியான ஹெகலின் இயங்கியல் தத்துவமான, வாழ்க்கை என்பது முழுமையிலிருந்து சிதைந்து மீண்டும் முழுமையை நோக்கிய ஒரு வட்ட இயக்கம் என்பதில் இயங்கியலை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் வட்டப்பாதையை நிராகரித்தது மார்க்சியம். இதன் அடிப்படையில் வரலாறும் சமூகமும், நேர்கோட்டில் மட்டுமே பயணித்து இயங்க முடியும் என்ற தன்னுடைய வரலாற்று சிறப்புமிக்க ‘வரலாற்று பொருள்முதல்வாத இயங்கியல்’ தத்துவத்தை கட்டி எழுப்பியது. ஆனால், நாம் ஆதிப் பொதுவுடைமை நோக்கியே இயங்கவேண்டும் என்பது, நேர்கோட்டு இயக்கத்திலிருந்து விலகி தாங்கள் மறுத்த வட்ட இயக்கத்திற்கே திரும்பும் உள்முரணில் இருந்து மார்க்சியத்தாலும் தப்ப முடியவில்லை என்பதையே காட்டுகிறது.

[…] புரட்சியும் உலக மறுப்பும் […]
LikeLike