
தனக்கு பிறர் போற்றும் அழகிருந்தும் அதை உணர்ந்து ஆராதிக்க முடியாத அல்லது அதற்கு தேவையற்ற அப்பெண்ணின் மேல் படர்கிறான் கலாரசிகனான அவளுடைய கணவன். முழு நிலவு போன்ற அவளின் முகத்தில் எச்சலனமும் இல்லை. கொஞ்சம் எரிச்சலாகி, தன் பார்வையை அவளுடைய முகத்திலிருந்து விலக்கி, புடைத்திருக்கும் கழுத்து, தன்னை அவள்மேல் முழுமையாக படரவிடமால் தடுத்திருக்கும் விம்மிய மார்பு, என உடலின் அனைத்துப் பகுதிகளையும் நோக்குகிறான். செலுமையான அனைத்துப் பகுதிகளும், அவளுடைய முகத்தைப் போலவே சலனமற்று இருப்பதாய் பிரமை கொள்கிறான். அப்பிரமையோடு அவள்மேல் இயங்க ஆரம்பிக்கிறான் கோவலன். கண்ணகியின் கணுக்காலைத் தொட்டுப் படபடத்துக் கொண்டிருந்த உயிரற்ற சிலம்பின் உயிர்துடிப்பை அவ்வியக்கத்தில் காணத் தவறுகிறான். உச்சத்தில் கால்களை உதறி இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருகிறாள் கண்ணகி. இனிமேல் தன் தோழி கன்னியில்லை என்பதை உணர்ந்து, உதறிய கால்களிலிருந்து தன்னை கழற்றிக் கொள்கிறது சிலம்பு.
சிலம்பு எப்போதும் கன்னியர்களின் தோழியாகத் தான் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது. மணமானவர்கள் அதை அணிவதில்லை. சிலம்பு தன்னிடமிருந்து கண்ணகி எனும் அற்புதமான தோழியைப் பிரித்த கோவலனை பழிவாங்கும் கதையாகவும் சிலப்பதிகாரத்தை உருவகிக்கும் வாய்ப்பு இத்தொன்மத்திலிருந்தே உருவாகிறது என்கிறார் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ( கொங்கைத் தீ என்ற அவருடைய சிலப்பதிகார நாடகத்தில்). இச்சிலம்பின் சாபம் தான், அழகிருந்தும் அதைப் பற்றிய பெருமிதமற்ற பதிவிரதையான கண்ணகியிடமிருந்து துள்ளலும், எள்ளலும், அழகும் ஒரு சேர அமைந்த பதுமையான மாதவியை நோக்கி கோவலனைத் தள்ளுகிறது. கணிகையரான (பரத்தை) மாதவி தனக்கு மட்டுமே கணிகையாக இருக்க வேண்டுமென்ற, அவனுடைய முட்டாள்த்தனமான ஆண் எனும் அகந்தை மாதவியிடமிருந்தும் அவனை பிரிக்கிறது.
மீண்டும் தன்னை நாடிவந்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாலும், சிலம்பு விடுவதாயில்லை. தன்னை, அவன் கையில் ஏந்த வைத்து கள்வன் எனும் பட்டத்தைச் சுமத்தி மரண தண்டனையை பரிசளிக்கிறது. சிலப்பதிகாரம் ஒரு சிலம்பின் சாபம் என்ற இ.பா.வின் ‘கொங்கைத் தீ’, இயல்பாகவே ஜெயமோகனின் ‘கொற்றவை’ நாவலை நோக்கி இழுத்துச் செல்கிறது. கொற்றவை பற்றிய பெரும்பாலான வாசகர் கடிதங்கள், ஒரு விதமான சன்னதத்தை நம்முள் எழுப்பாமல் இந்நாவல் நம்மை விடுவதில்லை என்றார்கள். குறிப்பாக நடிகர் கமலஹாசன், கொற்றவையின் முதல் இரு பக்கங்களை படித்தவுடனேயே ஜெயமோகனுடன் பேசவேண்டுமென்றும், நானும் ஒரு வரியாவது எழுதவேண்டுமென்றும் எண்ணியுள்ளார்.
இடப்பக்கம் போகத்தையும், வலப்பக்கம் யோகத்தையும் கொண்ட உமையொரு பாகனில் உள்ள தேவி கண்ணகியை எதிர்கொள்வதெளிது. ஆனால் தன் இட முலையை பிய்த்தெறிந்து மதுரையை தீமூட்டி, முழு யோகமாய் நிற்கும் கொற்றவை கண்ணகியை எதிர்கொள்வதென்பது….’கொங்கைத் தீ’ பயமின்றி ‘கொற்றவை’ யை கையிலெடுக்க வைத்திருக்கிறது.
இந்திரா பார்த்தசாரதி அவர்களின் தமிழ் விக்கி பக்கம்: