
கலைந்து போயிருந்த குருவிக் கூடுபோல பாழடைந்து போயிருக்கும் கேசம். ஆனால், தனக்குள் இன்னும் எத்தனை குருவியை வேண்டுமானாலும் குடிவைக்கும் ஆற்றலும், ஆசையும் இருக்கிறது என்பதுபோல் அக்குழந்தையின் தலையிலிருந்து எழும்பிக் குதித்து தோள்களில் புரண்டோடியது. மன வளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்கும் ஒரு காப்பகத்தின் தோட்டத்தில் தன் அடர்ந்த கேசத்தை அங்குமிங்கும் ஆட்டி தன்னுடைய பயிற்சியாளருடன் ஒரு விளையாட்டில் ஆத்மார்த்தமாக தன்னை பிணைத்திருந்தாள் அஞ்சலி.
“Mrs. Sekar, அப்ப நீங்க ஒரு complicated cesarian operationக்கு அப்புறம் ரொம்ப weakஆ இருந்தீங்க…” என்று அந்த காப்பகத்தின் தலைமை மருத்துவர் அஞ்சலி ஏன் தன்னிடமிருந்து மறைக்கப்பட்டாள் என்றதை, கண்கள் அதிர்ச்சியில் விரிய, உதடுகள் துடிக்க ஒரு தாயின் அத்தனை பரிதவிப்புடன், இயலாமையுடனும் கேட்கிறார் ரேவதி.
“பிறந்து நாலு நாளுக்கப்புறமும் அஞ்சலி எப்படி இந்த நாலு வருஷமா உயிரோட இருக்கான்னு….எங்களுக்கு யாருக்குமே புரியல….” என்றவுடன் தன்னுடைய ஒட்டுமொத்த நாடியும் ஒடுங்கி, தொண்டையில் வார்த்தைகள் சிக்கி வெளி வரமுடியாமல் அடங்கிப் போவது போல் விக்கித்து அந்த தலைமை மருத்துவரையேப் பார்க்கிறார். கண்கள் வெளிறி, கைகள் இறுகி எங்கே கீழே விழுந்து விடுவோமே என்ற நடுக்கத்தில் தன் கையில் பிடித்திருந்த 90களின் இளம் அன்னையர்களின் நீண்ட மணிப்பர்சை இறுகப் பற்றிக் கொள்கிறார்.
“டாக்டர்ஸ்லாம், இத medical miracleன்னு சொல்றாங்க. சிலர் கடவுளோட ஆசிங்றாங்க. என்ன கேட்டா, அஞ்சலி இப்ப உயிரோட இருக்குறதுக்கு காரணம் அவரோட அப்பாதான்னு சொல்வேன்….” என்றதும் நடுக்கத்தோடு குற்றமனப்பான்மையும் சேர்த்து இறுக்குகிறது ரேவதியை.
” இந்த நாலு வருஷத்துல தினம் மூணு மணி நேரம் அஞ்சலியோட spend பண்ணியிருக்கிறார்….நிறைய பணம் செலவழிச்சிருக்கிறார். இன்னக்கி அஞ்சலி உயிரோட இருக்கான்னா, எங்க specialists’ supportலாம் விட சேகரோட நம்பிக்கை, என் அஞ்சலிக்கு எதுவும் ஆகாதுங்குற அவரோட அந்த அசாத்திய நம்பிக்கைதான் காரணம்…..” என்றவுடன் ரேவதி மட்டுமல்ல, நாமும் உடைந்து போகிறோம்.
ரகுவரன் போன்ற அப்பாக்கள் நம் மனதில் விட்டுச் செல்லும் நம்பிக்கையும், அஞ்சலி போன்ற மன நலம் குன்றிய குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ளவர்களை நேசிக்கும் விதமும் நம்மை இத்திரைப்படத்தில் வெகுவாக ஈர்க்கின்றன. 80களின் இறுதியில் பிரபலமாக தொடங்கியிருந்த அபார்ட்மெண்ட் மற்றும் Gated Communityன் சித்தரிப்புகள், விசாலமான அபார்ட்மெண்டுகள், கலவையான மனிதர்கள் என காட்சி சட்டகங்கள் முழுதும் மணிரத்னத்தின் தனி பாணியால் நம் நினைவில் இருந்து அகல மறுப்பவை. குறிப்பாக, காலையின் சூரிய ஒளியால் மட்டுமே நிறைந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் அறையில், சுவரில் சாய்ந்து, தன்னிரு பிஞ்சு கால்களையும் நீட்டியவாறு அமர்ந்திருக்கும் அஞ்சலி, தன் முன்னால் குனிந்து முழங்காலால் அமர முயன்று அலுவலகம் செல்வதற்காக விடை பெறும் தன் தந்தையின் Tieயை பிடித்து இழுக்கும் காட்சி மணிரத்னம் & co வின் முத்திரைக் காட்சிகளில் ஒன்று. அஞ்சலியின் இச்செய்கையை ரேவதி அடுத்த காட்சியில் பிரதியெடுப்பது ஒரு Poetic moment…
இவை எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுவதையும் நிரப்பியிருக்கும் மழலைகள். நிறைய விஷயங்களில் இப்போதும் அவர்கள் பெரிய மனிதர்களாகத் தெரிகிறார்கள்.