
தன் பதவி அல்லது தொழில் தந்த இறுமாப்பு போர்வை கலைந்து, இல்லை, கலையப்பட்டு பாபநாச அருவியருகே நிற்கிறார் அந்த பணம் படைத்த அல்லது பணத்தின் அருமை புரியாத மகனின் தாய். தன் மகன் இன்னமும் உயிரோடு இருக்கமாட்டானா என்ற பரிதவிப்பு, தன் பையனை சரியாக வளர்க்கவில்லை என்ற இயலாமை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய இறுமாப்பை கலைத்துப் போட்ட அந்த பாசக்கார தந்தையின் புத்திசாலித்தனம் என எல்லாம் சேர்ந்து அத்தாயின் உடலை குறுக்கியிருந்தது. அத்தாயின் நடுக்கத்தில், அந்த பொறுப்பற்ற மகனின் மேல் நமக்கிருந்த கோபம் குறைந்துதான் போகிறது.
தன்னுடைய மனைவியையும், இரு மகள்களையும் காப்பாற்றுவது தான் தனக்கான அறம் என்பதை தெளிவாக உணர்ந்திருந்த அத்தந்தை, “எங்க மகன் என்னைக்காவது திரும்பி வருவானா?…” என தன்முன் பரிதவித்து தங்களுடைய அனைத்து தவறுகளுக்காகவும் வருந்தி நிற்கும் அந்த பெற்றோர் முன் உடைந்து போகிறார்.
“அய்யா…உங்களுக்கு விசாலமான மனசு…அதான் நீங்க எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கிறீங்க…ஆனா நான் ரொம்ப சுயநலவாதிய்யா…என்னோட சின்ன குடும்பத்த தாண்டி எதையும் யோசிக்கிறதில்ல…எத்தனையோ தடவ உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சேன்…ஆனா அதுக்கான தைரியம் எனக்கு வரலீங்கய்யா…” என்று தன்முன் கைகூப்பி நிற்பவர்களிடம் பாவ மன்னிப்பு கோரி நிற்கிறார் சுயம்பு.
“எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம்யா உங்க பையன்ட்ட….ஆனா அவன் கேக்கல…சின்ன வயசு பாருங்க…” என அப்பெற்றோரின் மகனுக்காகவும் வருந்தி நிற்கும் சுயம்பு நாம் நாள்தோறும் பார்க்கும் பாசமான குடும்பத் தலைவர்களில் ஒருவர். அந்த பாசம் அவருக்கு அளித்த புத்திசாலித்தனம் தான் ஒட்டுமொத்த படத்திற்கான ஆணிவேர். அறிவு, நம்முடைய கல்விக் கூடங்களின் வழியாக மட்டுமே கிடைப்பதில்லை.
அதீத பணத்தாலும், சிக்கனமான வாழ்க்கை முறையாலும் வார்க்கப்பட்டிருக்கும் இரு குடும்பங்களுக்கும் பொதுவான பாசத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இத்திரைக்கதையில் நீதியும், சட்டமும் மிக முக்கியமான பேசுபொருள்.
இரு குடும்பங்களுமே தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கு சட்டத்தின் வழியாகவே முயல்கிறார்கள். அதிகாரத்தையும் பணத்தையும் தன்னிடம் கொண்ட குடும்பம் சட்டத்தை கையிலெடுக்கிறது என்றால், சட்டத்தின் செயல்முறைகளை நன்கறிந்த சுயம்பு தன்னுடைய அனைத்து செயல்களின் வழியாக சட்டத்தின் எல்லைகளை அல்லது அதன் ஓட்டைகளை கையிலெடுத்துக் கொள்கிறார். இறுதியில் சட்டம் சுயம்புவிற்கு சாதகமாகத்தான் முடிகிறது.
நீதி வென்றதா என்றால், யாருடைய நீதி என்றுதான் கேட்க வேண்டியுள்ளது. சட்டங்களின் வழியாகத்தான் நீதி அல்லது தர்மம் அல்லது அறம் நிலை நாட்டப்படுகிறது என்றால், சட்டங்களின் ஓட்டை வழியாகவும் அதை நிலைநாட்ட முடியும் என்கிறது பாபநாசம். சுயம்புவின் மகளுக்கு நடந்த அநீதியையும், அதன் பொருட்டு தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவள் செய்த எதிர்பாராத கொலையையும் கண்டிப்பாக இதயமுள்ள சட்டத்தின் கண்கள் விதிவிலக்கென அறிந்து கொள்ள முடியும். ஆனால், சுயம்பு தப்பிக்க விரும்பியதோ இதயமற்ற சமூகத்தின் கண்களில் இருந்து. கட்டற்ற காமத்தை ஒழுங்கு படுத்துவதற்காக சமூகத்தால் கொண்டு வரப்பட்ட சுய ஒழுக்க மதிப்பீடுகள் தான் இன்னமும் நடுத்தரக் குடும்பங்களின் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன.
ஆனால், இதில் உள்ள நெருடல் என்னவென்றால் அதிகாரத்தின் அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் (மனம் மற்றும் உடல் ரீதியான) தைரியமாக எதிர் கொள்ளும் சுயம்புவின் குடும்பம், தான் வாழும் சமூகத்தின் பழிச்சொல்லை எதிர் கொள்ள சற்றும் துணிவில்லாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. நாம் தவறு செய்வதில் இருந்து நம்மைத் தடுப்பது சட்டமா இல்லை சமூகமா? நாம் யாருக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?
நாம் தேர்ந்தெடுக்கும் வழியை நிர்ணயிப்பதில், நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்திற்கு இருக்கும் பங்கை ஒதுக்கி விட முடியாது. சட்டத்தின் ஓட்டைகளை உபயோகிக்கத் துணிந்ததற்கு சுயம்பு மட்டுமே காரணமல்ல.

கமல்ஹாசன் அவர்களின் தமிழ் விக்கி பக்கம்: