ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கோயில்கள், தன்னுடைய அத்தனை சலசலப்பையும் அவ்வாற்றிற்கு அளித்து விட்டு அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டவை. அந்த பேரமைதியை, தன் நீராவியை வெளியேற்றும் விசில் ஓசை வழியாக சன்னமாக கிழித்துப் போடுகிறது, வெகு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு ரயில் வண்டி. பிரகாரத்தில் எதிரெதிராய் நின்றிருந்த அந்தத் தாயும், மகனும் அந்த ஓசை வந்த திசை நோக்கி ஒரு சேரத் திரும்புகிறார்கள். தட்டில் தீபாராதனையுடன், அக்கோவில் தெய்வத்தின் தரிசனத்தை ஏந்தியிருக்கும் குருக்கள் இவர்களிருவரையும் ஒன்றும் புரியாமல் மாறி மாறி பார்க்கிறார்.
நீண்ட சில விநாடிகளுக்குப் பிறகு, அந்த ரயிலின் நீராவி விசில் ஓசை காற்றில் கரைந்து போக, தங்களுடைய கடந்த கால நிகழ்வில் உறைந்து போயிருந்த அத்தாயும் மகனும் பிரக்ஞை தட்டி நிகழ்காலத்திற்கு வருகிறார்கள். அவர்களிருவரின் கண்களிலும் கடந்த காலச் சிறையில் அடைபட்டிருந்த ஓரிரு கண்ணீர்த் துளிகள் விடுதலையுடன் அவர்களிருவரின் இமைகளையும் கடக்கின்றன. இருவரும், மீண்டும் எதிரெதிராய் நோக்கிக் கொள்கிறார்கள். முன்பின் தெரியாதவர் முன்பு, பொதுவெளியில் கலங்கி நிற்கிறோம் என்ற கூச்சத்திலும், தாம் இருவரும் ஏன் ஒரு சேர கலங்குகிறோம் என்ற குழப்பத்திலும் இருந்து இருவரும் மீள முயல்கிறார்கள். அவர்களிருவரின் குழப்பத்திற்கு காரணமறிந்த சாட்சிகளாக அக்காட்சியின் அமைப்பிலும், நடிப்பிலும், மெய்மறந்து அமர்ந்திருக்கிருக்கிறோம் நாம். இதனோடு, ராஜாவின் இசையில், சின்னத்தாயாய் ஒலிக்கும் ஜானகியும் சேர்ந்து கொள்ள நம் கண்களும் கசிய ஆரம்பிக்கிறது. தளபதி திரைப்படத்தின் இக்காட்சி, அதன் வன்முறைக் காட்சிகளை விட மிக ஆழமாய் நம்முள் பதிந்து போயிருக்கிறது.
30 வருடங்களுக்கு முன்பு, தான் பிரசவித்த இடமும், தான் பிரசவிக்கப்பட்ட இடமும் ஒரு ரயில் பெட்டி என்பதைத் தாண்டி ஒருவரை ஒருவர் அறியாத நவீன குந்தியும், கர்ணனுமாய் வார்க்கப்பட்டிருக்கும் ஸ்ரீவித்யாவும், ரஜினியும் தான் இக்காட்சியின் மிகப்பெரிய பலம். தன்னுடைய பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே பெற்றெடுத்ததால் வேறு வழியின்றி தன் மகனை கைவிடுகிறார் இந்த சின்னத்தாய். ஒவ்வொரு நாளும் தன்னுடைய சிறுவயது கையறு நிலையிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் இத்தாய்க்கு அவ்வப்போது அவருடைய கணவனின் தோள்கள் ஆதரவாய் இருக்கிறது. அவருடைய தவிப்பும், கண்ணீரும் இந்த குற்ற மனப்பான்மையிலிருந்து எழுபவை என நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆனால், கர்ணனின் பாசத்தையும், தவிப்பையும் கர்ணனின் நிலைமையிலிருக்கும் ஒருவரால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியுமென்று தோன்றுகிறது. தாயின் பாசம் மட்டுமே நிபந்தனையற்றது (unconditional)என்பார்கள். கர்ணன் ஒரு தாயுமானவன்.