
“கண்டிப்பாத் தொடணுமா…” என எரிச்சலும், இயலாமையும் ஒன்று சேரத் தந்த கோபத்தில் தன் பெரிய உருண்டை விழிகள் கலங்கிச் சிவக்க காரினுள் அருகில் அமர்ந்திருந்த கணவனிடம் கேட்கிறாள். அவளின் கோபத்தை பொருட்படுத்தாமல் ” ஆமாம்…உனக்கு நான் ஏதாவது வாங்கித் தரணும்னு ஆசை..” என்கிறான் கணவன் தன் ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் அவளை நோக்கி நீட்டியவாறு. ஒரு விரல் புடவைக்கானது; இன்னொன்று நகைக்கானது. “எனக்கு விவகாரத்துதான் வேணும். வாங்கித் தருவீங்களா? அது இந்த கடைல கிடைக்குமா?…” என உள்ளுள் கனன்று கொண்டிருந்த எரிமலையாய் வெடித்துச் சிதறுகிறார். கல்யாணத்திற்குப் பின் முதன் முதலாய் தன் மனைவியை வெளியே அழைத்து வந்திருந்த மோகனால் தன் புன்னகை பூத்த முகத்தை அதற்கு மேல் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் முகம் இறுக, தன்னுள் ஒடுங்கி காரை வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பிக்கிறார்.
விருப்பமின்றி, தன் குடும்பத்தால் தன் மேல் நிர்பந்திக்கப்பட்ட இந்த உறவில் ஒன்ற முடியாத குற்றவுணர்வில் இருக்கும் ரேவதியின் முன்னால் காதலை அறியாத மோகன், தனக்குத்தானே நிறைய சமாதானங்களைக் கற்பித்துக் கொண்டு ரேவதியின் மனமாற்றத்திற்காக காத்திருக்க முயற்சிக்கிறார். தாயின் கருவறை சுகத்திலிருந்தது பிரசவிக்கப்பட்ட குழந்தையின் அழுகையோடுதான் ரேவதியின் எரிமலைக் குழம்பாய்ச் சுடும் வார்த்தைகளை ஒப்பிட்டு கடக்க முயல்கிறார் இந்த Gentleman கணவன். இந்த கனவான் தன்மையை ரேவதியின் முன்னால் காதல் பற்றி தெரிந்த பின்பும் கூட மோகன் கைவிடாதது தான் இக்கதாபாத்திரத்தை மிகவும் பிரபலமாக்கியயது. எண்பதுகளின் இளவயது பெண்களின் ஆதர்ச கணவன்; எல்லாக் காலத்து மனைவிகளாலும் bench mark செய்யப்படும் கணவனும் கூட மௌனராகம் திரைப்படத்தில் வரும் மோகன் கதாபாத்திரம்.
முழுவதும் ஒழுங்கீனமான, ஒரு நிலையற்ற வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த தனது முன்னால் காதலனை தன்னுள் இருந்து அகற்ற முடியாத நிலையில், அவனுக்கு நேரெதிர் துருவமான தனது கணவனின் முதிர்ச்சியான செய்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய பாதுகாப்பான கைகளை ஏற்றுக் கொள்ளும் ரேவதியின் படிப்படியான மனமாற்றத்தை சின்ன சின்ன நிகழ்வுகள் மூலம் அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறது மௌனராகம்.
ரேவதி மேல் கொண்டுள்ள ஈர்ப்பையும், காதலையும் கார்த்திக் வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் மணிரத்னத்தின் முத்திரைகள். இன்னமும், Mr. சந்திரமௌலி காட்சியின் freshness அப்படியே இருக்கிறது. கார்த்திக் ஒரு பொறுமையற்ற காதலன் என்றால், மோகன் ஒரு பொறுப்பான கணவன். கணவன் என்ற உரிமையையும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயத்தில் தன் மனைவியின் உரிமையையும் மதிக்கும் கதாபாத்திரம் மோகனுடையது. தன்னை விட்டுப் பிரிந்து போவதற்கும் அந்த உரிமை இடமளிக்கும் என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை படம் நெடுகிலும் தன் மென்மையான உடல் மொழி வழியாகவும், கூர்மையான மற்றும் குறைவான வசனங்கள் வழியாகவும் மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கும் மோகனின் நடிப்பு, ரேவதியின் மனதில் இன்னமும் இறக்காத கார்த்திக்கின் நினைவுகளை முற்றிலுமாக அகற்றி விடுகிறது.
நினைவுகள் தான் நம்மை நிகழ்காலத்தில் ஒன்ற விடுவதில்லை. ஆனால், நினைவுகளோடு தொடர்பற்ற நிகழ்காலம் சுவாரஸ்யமற்றது.
