பீனா மிக விரைவாக நடந்து கொண்டிருந்தாள். ஆள் அரவமற்ற அச்சாலையில் அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. எந்நேரத்திலும், அச்சாலையை இருள் கவ்விக் கொள்ளலாம். திடீரென முன்பின் தெரியாத ஒருவன், தன் முன்னால் ஒரு பெண்ணை கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு உறைந்து போகிறாள். இது கதைகளில் வரும் திகில் சாலையோ என்று அஞ்சி நடுங்குகிறாள். அவனுடைய திடகாத்திரமான தோற்றமும், நீல நிறக்கண்களும், அணிந்திருந்த கருப்பு நிற ஷூவும், பீனாவின் பயத்தை மேலும் அதிகமாக்கியிருந்தது. சற்று நேரத்தில் அச்சாலை மீண்டும் வெறிச்சோடியது.
மணி இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் அந்தச் சாலை ஆள் அரவமற்றிருந்தது. தான் நேரில் கண்ட கொலையால் பீனாவின் மனம் பயத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தது. தன் பெற்றோரிடம் இதைச் சொல்லலாமா, இல்லை காவல் நிலையத்திற்குச் சென்று சொல்லலாமா, இல்லை தன்னுடைய தோழிகள் யாராவிடமாவது இதைச் சொல்லலாமா என்று யோசிக்கையில் தன் நெருங்கிய தோழி ரீனா எதிரில் வந்ததைக் கண்டதும் தெம்பும், மகிழ்ச்சியும் ஒரு சேர எம்பிக் குதித்தாள். ஆனால், ரீனாவிடம் தான் கண்ட கொடூரமான கொலையை சொல்லலாமா என்ற குழப்பம் மீண்டும் எழும்ப சொல்வதை தவிர்த்து இருவரும் சேர்ந்து அந்த திகில் சாலையில் நடக்க ஆரம்பிக்கிறார்கள்.
இருவரும் பரஸ்பரம் தங்களைப் பற்றி விசாரித்துக் கொண்டே நடக்கையில், மீண்டும் அதே திடகாத்திரமான மனிதனின் அரவத்தை தன் பின்னால் உணர்ந்தாள் பீனா. உடனே, ரீனாவிடம் தான் கண்ட கொலையை விவரித்து தன்னுடைய பயத்தை அவளுக்கும் கடத்தினாள் பீனா. இருவரும் பயத்தில் நடையிலிருந்து ஓட்டத்திற்கு மாறினார்கள். ஆனால், நீலக் கண் கொண்ட அந்த கொலைகாரன் அவர்களை விரட்டிப் பிடித்து தன்னுடைய இடத்துக்கு கடத்திச் செல்கிறான்.
மயங்கிய நிலையில் இருந்து தன் நிலை மீண்ட இருவரும் முற்றிலும் புதிய இடத்தில் இருப்பதை உணர்ந்து வீறிட்டு அலறுகிறார்கள். அங்கிருந்தவர்களில் ஒருவன் ரீனாவின் கழுத்தில் தன்னுடைய கத்தியை வைத்து அழுத்தியதில் அவர்களிருவரின் அலறலும் அடங்கியது. “பீனா…என்னத் தெரியலயா” என்று நெருங்கிய அந்தக் கொலைகாரனின் நீலக் கண்களில் இருந்த குரூரம் சற்று குறைந்திருப்பதைப் போல் உணர்ந்தாள் பீனா. அந்த முகம் மிகவும் பரிட்சயமானதாய் தோன்றியது. “நான் தான் உன்னோட தம்பி…” என்றவுடன் பீனா சற்று நிலை குலைந்து போனாள்.
“இது எப்படி சாத்தியம்?…நான் தான் ஒன்ன சின்ன வயசுலயே கொன்னுட்டேனே….எப்படி இன்னமும் உயிரோட இருக்க…” என்று மிரட்சியுடன் கேட்கிறாள் பீனா. இங்கு நடப்பது எதுவும் புரியாமல் ரீனாவும் குழம்பினாள்.
பீனா தன் பெற்றோர்களின் செல்லப் பிள்ளையாக இருந்தாள். ஆனால், அவளுடைய தம்பி கிரிஷ் பிறந்தவுடன் அவர்களுடைய கவனம் முழுதும் தன் தம்பியிடம் திரும்பியதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. செய்வதறியாமல், 8 வயதான தன் தம்பியை கத்தியால் குத்தியது நினைவுக்கு வந்து போனது பீனாவிற்கு.
“நீ…அன்னக்கி என்ன கத்தியால குத்திட்டு ஓடிட்ட. ஆனா நான் சாகல. என்ன நம்ம அம்மா மாதிரி இருந்த இவங்க தான் காப்பாத்தி வளர்த்தாங்க…” என்று மறைவிலிருந்து அந்தப் பெண்ணை பீனா முன் கொண்டு வந்ததும் விக்கித்துப் போனாள்.
“கிரிஷ்…இவங்களத்தான கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ கொல பண்ணின…எப்படி இவங்க…”
“எல்லாம் உன்ன பயம் முறுத்தத்தான் பீனா….” என்று சத்தமாக சிரித்தான் கிரிஷ்.
குற்றவுணர்ச்சியில் இருந்த பீனாவை அப்பெண் தேற்றி, இருவரையும் அவர்களுடைய பெற்றோரிடம் அழைத்துச் சென்றார். கிரிஷை பார்த்தவுடன் மகிழ்ந்த அவனுடைய பெற்றோர், பீனாவின் மேல் மிகவும் கோபம் கொண்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, பீனாவின் தவறுகளை மன்னிக்க வைத்தான் கிரிஷ். பீனா, கிரிஷை ஆரத் தழுவிக்கொண்டாள்.



