
எல்லா சிக்கல்களும் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்பட்டு தேவையான உள்கட்டமைப்புப் பணிகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அன்றைய தொலைத்தொடர்பு துறையின் அமைச்சரான சுக்ராம் பிரதம மந்திரியின் அலுவலகம் நோக்கி விரைகிறார். பிரதமர் தனக்கு ஒதுக்கிய நேரத்திற்கு முன்பாகவே சென்று காத்திருக்கிறார் சுக்ராம். அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது, இந்தியாவின் முதல் கைப்பேசி அழைப்பிற்காக. புன்னகைத்துக் கொண்டே வரவேற்ற நரசிம்மராவிடம் அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டதாக கூறி இந்தியாவின் முதல் அழைப்பை நீங்கள்தான் மேற்கொள்ள வேண்டுமென்கிறார். அதே புன்னகையுடன் மறுத்துவிட்டு, இது உங்களுடைய துறையின் சாதனை என்று, அந்த வாய்ப்பை சுக்ராமிற்கே தருகிறார். செய்வதறியாமல் திகைத்து நின்ற சுக்ராமிடம், தன்னுடைய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்திய கம்யூனிச பிதாமகனாகிய ஜோதிபாசுவை அழைக்குமாறு பணிக்கிறார். இந்தியாவின் முதல் கைப்பேசி அழைப்பு இதுதான்.
நேருவிய சோஷலிசத்தின் முடிவு
தன்னுடைய பொருளாதார சீர்திருத்த முடிவுகளை ஒரு தகவலாகத்தான் தன்னுடைய கட்சியினருக்கும், எதிர் கட்சியினருக்கும் தெரிவித்திருக்கிறார் பிரதமராகிய நரசிம்மராவ். அவர்கள் அனைவருடைய ஒப்புதலையும் கலந்தாலோசித்து பெற வேண்டும் என்ற பங்களிப்பு ஜனநாயக முறையைக் கையாளுவதற்கான நேரமும் அவசியமும் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார் என்கிறது இப்புத்தகம். இதை, நேருவின் சோஷலிச சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த தன் உள் எதிரிகளான காங்கிரஸ் கட்சியினருக்கும், உலக வங்கியின் உதவி பெறுவது தாகத்திற்கு விஷம் குடிப்பது என்ற இடது சாரியினருக்கும் தான் பதவியேற்ற இரண்டாம் நாளே உணர்த்தியிருக்கிறார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் ஆரம்பித்த ஓரிரு வருடங்களிலேயே, பல்வேறு மக்கள் நலப்பணிகளை முடுக்கி விடுவதற்கான உபரிப் பணம் அரசாங்கத்தின் கருவூலத்தை நிறைக்கிறது. ராவ் ஒரு பொருளாதார மேதையல்ல. ஆகவே, யார் இந்தியப் பிரதமராக இருந்திருந்தாலும் இது பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளால் சாத்தியப் பட்டிருக்கும் என்ற வாதம் ஒரு புறம் இருந்தாலும், பழமையில் காலூன்றி இருந்தாலும் தன்னைக் கணந்தோறும் புதுப்பித்துக் கொள்ளும் மாணாக்கராகிய ராவால் தான் இது இத்தனை விரைவில் சாத்தியமாகியது என்பதும் உண்மை.
மன்மோகன் போன்ற பொருளாதார மேதையின் முடிவுகளை புரிந்து கொள்பவராகவும், இதனை எத்தனை முயன்றாலும் நேருவின் சோஷலிசம் என்ற போர்வையை போத்திக் கொண்ட கொளுத்த ஆடுகளாகிய தன் கட்சிக் காரர்களுக்கு விளங்க வைக்கவோ அல்லது அவர்களை இதற்கு ஒப்புக் கொள்ள வைக்கவோ முடியாது என்ற உள்ளுணர்வு கொண்டவராகவும் இருந்தார். இந்த உள்ளுணர்வு தான், தன்னுடைய பொருளாதார சீர்த்திருத்தங்கள் அனைத்தும் நேருவின் சோஷலிசக் கனவின் நீட்சிதான் என்று துணிந்து தன் கட்சிக்காரர்கள் மத்தியில் பொய் சொல்ல வைத்தது. தொழில் முனைவோர் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் அதற்கான தேவைகளைத் தாண்டியும் நிரந்தரமாக தொடர வேண்டும் என்பதுதான் நேருவின் சோஷலிசம் என பிழையாக இங்கு புரிய வைக்கப் பட்டுள்ளது என காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் நிறைந்த கூட்டத்தில் முழங்கினார். விளைவு, Titanம், Bajajம் லைசன்சுக்காக South block (டெல்லியின் அதிகார மையம்) அலைந்தது மாறி, South block அவர்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
இடது சாரிகளை விட, ராவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு தடையாக நின்றவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்தான் என்கிறது இப்புத்தகம். பொருளாதார சீர்திருத்தங்கள் ராவை எவ்வளவு மேலே உயர்த்தியதோ அவ்வளவு கீழே இறக்கியது சோனியாவின் மனதில் இருந்து. நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரின் வெற்றி, அக்குடும்பத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் நிறைய விசுவாசிகளுக்கு உகந்ததாக தெரியவில்லை. பிரதமர் பதவியேற்று முதல் இரண்டு வருடங்கள் வரை அந்த விசுவாசிகளில் ராவும் ஒருவர் என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
நேருவிய மதச்சார்பின்மையின் முடிவு
எந்த உள்ளுணர்வை நம்பி, தன் பொருளாதார சீர்திருத்தத்தை நேருவிய சோஷலிசத்தின் நீட்சி என்றாரோ, அதே உள்ளுணர்வு தந்த பாபர் மசூதி இடிக்கப்படும் என்ற எச்சரிக்கையை புறக்கணிக்கிறார் ராவ். விளைவு இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு பெருத்த அடி அவரது ஆட்சியில்தான் விழுந்தது என்ற கறை இன்னும் நீடிக்கிறது. ராவும் இச்சதிக்கு உடந்தை என்ற குற்றச்சாட்டு அவர் இந்து மடாதிபதிகளிடமும், RSS போன்ற இயக்கங்களோடு கொண்டிருந்த இணக்கத்தாலும் விளைந்தது. இந்து மெய்ஞான மரபுகளில் இருந்து தன்னுடைய ஆன்மீக பலத்தைப் பெற்றுக் கொண்டவரான ராவ், BJPஐ தவறாக வழிநடத்தப்படும் இந்துக்கள் என்றுதான் நம்பினார் அல்லது நம்ப விரும்பினார்.
நவம்பர் மாத ஆரம்பத்தில், அப்போதைய உள்துறை செயலரான காட்போல் (கடவுள் போல் பேசுபவர் என்கிறார்கள்) என்ற தீர்க்கதரிசி, உ.பில் 356 கொண்டு வரப்பட்டு, பாபர் மசூதி மொத்தமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார். இதை நவம்பர் 26க்குள் செய்ய வேண்டும். இல்லையெனில் டிசம்பர் 6ம் தேதி நிலைமை அரசாங்கத்தின் கட்டுக்குள் இருக்காது என்கிறார். உளவுத்துறையும் வழக்கம் போல் ஆதாரங்கள் ஏதுமின்றி மசூதி இடிப்பு நடக்கும் என்றது. பொருளாதார சீர்திருத்தங்களை தகவலாக மட்டுமே மற்ற தலைவர்களுக்கு சொன்ன ராவ், இந்த விஷயத்தில் அனைவரையும் பங்கேற்க வைக்கிறார். காட்போலின் யோசனையின் முதலாவது பகுதியான உ.பி. ஆட்சிக் கலைப்பை, உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சித் தலைவர்கள், உ.பி.யின் கவர்னர் என சகலரும் ஒத்துக் கொள்ளவில்லை. இரண்டாம் பகுதியான மத்திய போலிஸ் படையின் பாதுகாப்பு அல்லது ராணுவத்தை உள்ளே அனுப்புவதை ராவ் விரும்ப வில்லை. ஆபரேசன் blue star என்ற பெயரில் இந்திரா செய்த தவறான வழிபாட்டுத் தலத்திற்குள் ராணுவத்தை அனுப்பும் தவறை ராவ் செய்ய விரும்பவில்லை.
எல்லா வழிகளும் அடைபடவேதான் இந்து மடாதிபதிகளுடனும், RSS மற்றும் அதன் மென்கரமான BJP மற்றும் முரட்டு கரங்களான VHP மற்றும் பஜ்ரங் தள் ஆகியோருடன் இந்த கர சேவையை நிறுத்துமாறு ரகசியப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுகிறார். அதற்கு இந்து மடாதிபதிகளுடன் தனக்கிருந்த செல்வாக்கை உபயோகிக்கிறார். மசூதி இடிப்பு நடக்காது என்று அத்வானி முதல் உ.பி. முதல்வரான கல்யாண் சிங் வரை உறுதி தருகிறார்கள். இதை ராவ் நம்பினார். ஆனால், விழிப்பான ராவின் உள்ளுணர்வு இதை ஒத்துக் கொண்டிருக்காது என்கிறார் இப்புத்தகத்தின் ஆசிரியரான வினய் சீதாபதி. அத்வானியாலோ அல்லது அவர் கைமீறியோ பாபர் மசூதி இடிக்கப்படும் என்று கண்டிப்பாக ராவ் உள்ளுணர்வுக்கு தோன்றியிருக்கும் என்கிறார்.
இப்புத்தகத்தைப் பற்றி
ஒரு நாவல் போல் மிக அருமையாக ராவின் ஆட்சி அவருடைய அனைத்து பின்புலங்களோடும் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வாட்சியின் முக்கியமான அத்தனை பேரும் இப்புத்தகத்தில் வருகிறார்கள். இப்புத்தகத்தை படித்தவுடன் எனக்குத் தோன்றியது, நேருவின் சோஷலிசமும், மதச்சார்பின்மையும் இந்தியாவின் இரண்டாவது சிற்பியான ராவின் ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு வந்தது என்பது தான்.