பெரும் மழையை, தன் கூம்பின் வழியாக மேகங்களைத் துளைத்து பெய்ய வைத்தது போல் கம்பீரமாக நனைந்து கொண்டிருந்தது அந்த சர்ச். பிரார்த்தனை அறை முழுவதும், சற்று நேரத்திற்கெல்லாம் கன்னியாஸ்திரிகளாக போகிற நவ கன்னியர்களால் நிரம்பியிருந்தது.
தனக்கு முன்னால் இருப்பவர்கள் ஒவ்வொருவராக தங்கள் முகத்தில் எந்தவித சலனமும் அற்று தங்களை முழுமனதுடன் ஆண்டவரிடம் ஒப்படைக்க, ப்ரியாவின் மனதில் இருந்த குழப்பம் அவள் முகத்தின் சலனமின்மையை கலைத்திருந்தது. “பிரியா….” என்ற அலறலும் “ப்ரியா அமல்ராஜ்…” என சன்னமாக குரலும் ஒரே நேரத்தில் ஒலிக்க, வெளியிலிருந்து வந்த அலறல் குரலுக்கே செவிமடுக்கிறார் ப்ரியா. அவளுடைய உள்ளுணர்வுக்கு, சர்ச்சின் உள்ளிருந்து வந்த அழைப்பை விட வெளியிலிருந்து வந்த தாமஸின் அழைப்பே தன்னுடைய தேவனின் குரல் என கேட்கிறது.
உள்ளிருக்கும் ஆண்டவனை கைவிட்டு, வெளியிலிருக்கும் தாமஸிடம் ஓடோடி வந்து மண்டியிடுகிறார், தேவாவினுடனான தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டு. அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள் சர்ச்சிற்கு வெளியே நடக்கும் இந்த பாவமன்னிப்பைக் கண்டு. ஆனால், மழை உறையவில்லை. பிரியாவிற்கான தேவனை நான்தான் அழைத்து வந்தேன் என்பது போல் உரக்கப் பெய்து கொண்டே இருந்தது. ‘பிரியா அமல்ராஜ்…’ என்று சர்ச்சினுள் தொடர்ந்து சலிப்பாகவும், கண்டிப்பாகவும் ஒலித்துக் கொண்டிருந்த ஆண்டவரின் குரல் பிரியாவை மீண்டும் சர்ச்சை நோக்கி குற்ற உணர்வுடன் திரும்ப வைத்தாலும், மனதில் முன்பிருந்த குழப்பம் இப்போது இல்லை.
தன்னையறிதல்
தன்னை உற்று நோக்கத் தெரிந்தவர்களே, 21வது நூற்றாண்டில் வெற்றிகரமாக இயங்கமுடியும் என்கிறார் யுவால் நோவா ஹராரி. எந்த நூற்றாண்டுக்கும் இது பொருந்தும்.
இந்தியாவின் மிகப் பழமையான தரிசனங்களில் ஒன்றான சாங்கியம், காரண-காரிய (Cause – Effect) தத்துவத்தை வளர்த்தெடுத்தது என்கிறார்கள். நம்முடைய முடிவுகள் அல்லது செயல்கள் அல்லது காரியங்களுக்கான காரணங்கள் வெளியிலிருந்து தான் வருகின்றன. தன்னை உற்றுநோக்குதல் என்பது இவ்விரண்டையும் நோக்குவது தான். ஒன்றோடொன்று ஒட்டிப் பிணைந்திருக்கும் இவற்றை, எட்டி நின்று பிரித்து பார்க்கும் இவ்வுத்தியின் மூலம் தன்னையறிலாம்.
கிறிஸ்துவ உறைவிடப் பள்ளியால் வார்க்கப்பட்டு, அதனால் மட்டுமே கன்னியாஸ்திரியாக உந்தப்பட்ட பிரியாவிற்கு அவளுடைய தலைமை ஆசிரியை அல்லது குரு வழங்கும் அறிவுரையும் கிட்டத்தட்ட ஒரு வகையான தன்னையறிதல் உத்திதான். இந்தப் பள்ளியைத் தாண்டியும் உலகம் இருக்கிறது. அங்குள்ள காரணங்கள், கன்னியாஸ்திரி என்பதை விட உன்னதமான காரியங்களை உன்னை ஆற்றவைக்கலாம். அதில் ஒரு நிறைவின்மையும், போதாமையும் தோன்றினால் இந்த கன்னியாஸ்திரி ஆகும் துறவற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.
Life is beautiful
தன்னுடைய குருவின் யோசனைக்கு செவி கொடுத்து நொடித்துப் போய்க் கொண்டிருக்கும் தன் தந்தையின் வியாபாரத்தை, உள்ளாடை தயாரிப்பு நிறுவனம், கையிலெடுக்கிறார். அதன் மூலம் சக தொழில் போட்டியாளரான தாமஸின் நட்பு, மற்றும் அவர் வழியாக தேவா & co வின் நட்பு என நதியில் சிக்கிய ஓடம் போல பிரியாவை வாழ்க்கை இழுத்துச் செல்கிறது. மெல்ல மெல்ல படைத்தவனின் மேலிருந்த காதல், அவனால் படைக்கப்பட்டவைகளின் மேல் திரும்புகிறது. இவர்களுடைய நட்பில் ஆடல், பாடல், இசை என திழைத்ததில், தன்னை ஞாயிறு தோறும் உள்ளிழுத்து வைத்துக் கொள்ளும் சர்ச்சின் பிரார்த்தனைக் கூட்டங்களைக் கூட மறந்து தவற விடுகிறார்.
இப்படம் முழுவதும் நிரப்பப் பட்டிருக்கும் வண்ணங்களும் உடைகளும் 90களின் Fashion Trendற்கான ஒரு bench mark. இந்த வண்ணங்களின் நிறைவால், ஒரு முழுநிலவிரவில், தன்னுள்ளிருக்கும் தேவாவின் மீதான காதலையும் உணர்ந்து கொள்கிறார். Life is really beautiful.
முழுநிலவிரவு
மீண்டும் துறவறம்
தேவா, தன் மேலான தாமஸின் காதலை தனக்கு உணர்த்த வந்த ஒரு தூது மட்டுமே என்பதை உணர்ந்ததும் பிரியா நொறுங்கிப் போகிறார். தன்னைச் சுற்றி நடந்த அனைத்துமே ஒரு பின்னப்பட்ட நாடகம் என்பது இவைகளைப் படைத்தவனை நோக்கி அவளை மீண்டும் திரும்ப வைக்கிறது. படைத்தவனை தூய்மையானவனாக நம்பும் பிரியா, அவன் படைத்தவைகள் மட்டும் தூய்மையல்ல என்று நம்பும் வெறுப்பின் போதாமைகளை தாமஸ் இறுதியில் பிரியாவிற்கு உணர வைக்கிறார். படைத்தவன் பவித்திரமானவன் என்றால், அவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பவித்திரமே என்ற புரிதல் தனக்குள் ஏற்கனவே இருந்ததை தாமஸும் உணர்ந்து கொள்கிறான். காரியங்களை ஆற்ற வைக்கும் காரணனிடம் தன்னை ஒப்புவித்துக் கொள்கிறான், பிரியாவை தேவாவிடம் சேர்த்து விட்டு.
துறவறம் என்பது லௌகீக வாழ்க்கை தனக்குத் தரும் சவால்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான உறைவிடம் அல்ல என்பதையும் பிரியா புரிந்து கொள்கிறார். தேவாவின் மின்சாரக் கனவு அல்லது காதல் இதனால் தப்பிப் பிழைக்கிறது.